Friday, April 29, 2022

சமூக அக்கறை சிறுகதை by Veena Sankar

  

சமூக அக்கறை 



                                                       பேருந்து   நிலையத்திற்கு     அருகே   ஒரு   இ - சேவை மையத்தில் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.  அங்கே நின்று கொண்டிருந்த வெளியூர் நண்பர்கள் இருவர், அங்கே என்ன  இருக்கிறது? எதற்கு இத்தனை கூட்டம்? என்று தெரியாமல் திகைத்து நின்றனர். “என்னப்பா ஏதாவது வேலைக்கு   ஆள்  எடுக்கிறார்களா? தெரியவில்லையே?” என்று சொல்லும் பொழுதே இரு  நண்பர்களில் ஒருவரின் அலைபேசி  சிணுங்க,   தன்  அலைபேசியை எடுத்தவர் என்ன என்று விசாரித்து பதில் சொன்னவர்,   தன் பேச்சினூடே  தான் வந்திருந்த ஊரைப்பற்றி எதிர்  முனையில்   இருப்பவரிடம்,   “நம்ம  ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு  வரை படித்த பிள்ளைகள் எல்லாம்   கூலி வேலைக்கு    போறாங்க.       ஆனால் டவுனுக்கு வந்து பார்த்தா தானே தெரியுது,  எவ்வளவு வேலை கொட்டிக்கிடக்குது  என்று.  எத்தனை பேர் புது வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்” என அந்தக்  கூட்டத்திற்கான காரணம்   தெரிந்தது   போல்  சொன்னார்.


                                                   பேசி   முடித்ததும் அலைபேசியை துண்டித்து பக்கத்தில் உள்ள இளநீர் கடைக்கு  சென்றனர் நண்பர்கள்.  அலைபேசியில் பேசிய நண்பரே மீண்டும் கூட்டத்தை பற்றி தன் பக்கத்தில் இருந்த நண்பரிடம் சிலாகித்தார்.   மேலும் அந்த இளநீர் கடைக்காரரிடம் கூட்டத்தை பற்றி விசாரிக்க, இளநீர் கடைக்காரர் “அரசுத் தேர்வுக்கு அறிவிப்பு வந்திருக்கிறது. அங்கே போட்டோ, ஜெராக்ஸ், இ - சேவை மையம்,   ஜூஸ்   கடை,   கம்ப்யூட்டர் கடை என மொத்தமாக ஒரே இடத்தில் இருப்பதால் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.    நாற்பது ஆண்டு காலமாக அந்த கடை வெற்றிகரமாக நடந்து வருகிறது. காலத்திற்கு ஏற்ப அவர்களும் கடையை விஸ்தரித்து, சமூக நலன் கருதி மற்ற கடைகளை விட  குறைவான கட்டணம் வசூலித்து சேவை செய்து வருகிறார்கள். அதனால்தான் அங்கே எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அந்த கடையை தெரியாதவர்கள் இந்த ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் என்ன வெளி ஊரா?  என்றான் அவர்களுக்கு  இளநீர் வெட்டியவாரே. 


                                               “ஆமாம்” என்று தலையை ஆட்டியவாறும், “ஓ! அப்படியா! என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அங்கே இளநீர் குடித்துக்கொண்டிருந்த மற்றொருவர் அந்த தம்பி சொன்னது உண்மைதான் என்று தலையசைத்து ஆமோதித்தார். “அதற்கு மேலே அங்கே வேலை செய்பவர்கள், வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வார்கள்.  அங்கே, அரசு தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?  எந்த புத்தகம்  படித்தால்   பயனுள்ளதாக   இருக்கும்?   என்பதை விளக்க ஒரு அறையில் ஒருவர் அமர்ந்து இருப்பார்.  மேலும் வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் மறக்காமல் தன் வாழ்த்துக்களை   சொல்வதோடு மட்டுமல்லாமல் வந்ததற்கு நன்றி தெரிவிப்பார்.” என சொன்னார். அதைக்கேட்டதும் “ஓஹோ!  கேட்கும்போதே ரொம்ப மனதுக்கு இனிமையாக இருக்கிறது.  இந்த காலத்திலும் இப்படி ஒரு சேவை மையமா? ”  என்று சொல்லி இளநீர் சாப்பிட்டு புறப்பட்டனர். 


                                                    அரசு   தேர்வு   பற்றிய    விவரங்கள் தெரியாத  நம்ம ஊர் பிள்ளைகளுக்கு இதை போய் சொல்லணும் என தங்களுக்குள் பேசிக்கொண்டனர். நேராக அந்த  இ - சேவை மையத்திற்கு சென்று வாழ்த்து சொல்ல சென்றனர். அங்கு இருந்த  மையத்தின் முதலாளியிடம் வாழ்த்துக்களை தெரிவித்து,   “உங்கள்   பையன் என்ன   செய்கிறார்?” என்று கேட்க, ”  அதோ அந்த அறையில் இளைஞர்களுக்கு அரசு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி   விளக்கி கொண்டிருக்கிறான்.”  என்று பதில் சொன்னார்.


                                                      சற்று  முகம்  மலர்ந்து,  “நான்    ஒரு   விஷயம்   கேட்கிறேன்.   நீங்கள் தப்பாக நினைக்க கூடாது” என்று   கேள்வி கேட்டவரிடம், என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு,  “கேளுங்கள்” என்றார் மையத்தின் முதலாளி.   “இவ்வளவு விஷயம் தெரிந்து   இருக்கும்   உங்கள்  மகனே, அரசு    தேர்வு எழுதி   நல்ல நிலைக்கு  வந்திருக்கலாமே?” என கேட்டதும் “நம்மை மேலே ஏற்றி விடும் ஏணியும் , ஆசிரியர்களும் அதே இடத்தில் தானே  இருக்கிறார்கள்.  போதும் என்று நினைக்கும் மனதும் மற்றவர்களுக்கு உதவ  வேண்டும் என்ற எண்ணமும்   நம்மை   உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். இப்போது பாருங்கள்! எங்களுடைய பணியை வாழ்த்த   முழு   மனதோடு   நீங்கள்  இருவரும் வந்திருக்கிறீர்கள்.   இது எங்களின்  சமூகப்  பணியை சிறப்பாக தொடர  உந்துதலாக இருக்கும்”  என்று சொல்லி சிரித்தார்.  அவரின் கையை  குலுக்கியவாறு  மையத்தின்   சமூகப் பணி   தொடர வாழ்த்தி  விடை பெற்றனர் வெளியூர் நண்பர்கள்.


         சிறப்பினால்   பக்குவம் கொள்ளும்    மனமும்    பிறர் 

         சிரிப்பினால்  பிறக்கும் சந்தோஷமும் அனுபவிக்க இனிமை.



Thursday, April 28, 2022

நடக்குமா வேண்டும் வரம்? குட்டிக் கவிதை By Veena Sankar



நடக்குமா வேண்டும் வரம்?



கலப்படம் இல்லா தண்ணீர் வேண்டும்

கபடம் இல்லா வார்த்தைவேண்டும்

மனதை வருடும் அன்பு வேண்டும்

மானத்தை காக்கும் வீரம் வேண்டும்

குனிவு இல்லா நிலை வேண்டும்

கூன் இல்லா உடல் வேண்டும்

வலி இல்லா பிறப்பு வேண்டும்

வளி இல்லா வாழ்வும் வேண்டும்

வானத்தை வேண்டா வளம் வேண்டும்

வனத்தை அழிக்கா மனம் வேண்டும்

கனவு கொள்ளா தூக்கம் வேண்டும்

களவு கொள்ளா செல்வம் வேண்டும்

Wednesday, April 27, 2022



இந்த வார தலைப்பு - ஒளிவட்டம்🌼 

Picture by Suganthi



நான்வளர்வதும் தேய் வதும் சூரியனின் பிரதிபலிப்பு.

அதுபோல் வளர்வதும், இளைப்பதும் 

உடலின் பிரதிபலிப்பு. ஆன்மாவுக்கு இல்லை.


By Vedavalli Rmani


அண்ணன் ஆதவன் இல்லையென,

பார்க்க சாட்சி இல்லையென,

இரவின் பிடியில், ஜல்சா நினைப்பில்,

நீங்கள் இருந்தால்… மன்னிக்கவும்.

கவனம் பூமிவாழ் மக்களே!

தம்பி மதி நானிருக்கிறேன்! 

ஒளிந்து கொள்ள அனுமதி

தராத ஒளிவட்டம் நான்!!

நான் பார்த்துக் கொண்டே 

இருப்பேன்-சாட்சியாக!

‘அட போடா…யாருமில்லை’

என நினைக்க வேண்டாம்!

என் ஒரு நாள் விடுப்பில்,

அமாவாசை அன்று,

உங்கள் உடன்பிறப்பு

“மனசாட்சி” இருக்கிறது!

கவனம் பூமிவாழ் மக்களே!

இயற்கை -மிகப் பெரிய சாட்சி!

அதனினும் கூட வருவது மனசாட்சி!!

தவறு செய்யுமுன் சிந்தியுங்கள்!!!

 இப்படிக்கு, நிலா


By Akhila Devi Kumaran 


தோட்டதின் நடுவில் ஒளிரும் நிலா,

டியூப் லைட் போட்ட மாதிரி எங்கும் வெளிச்சம்,

வெட்ட வெளியில் பாயில் படுத்து நிலவை 

ரசித்த ஞாபகம்,

எட்டி பார்த்தாலும் வானமே தெரியாத மாதிரி 

வீடுகளின் நெருக்கம் சென்னையில்..

மாதம் மாதம் வந்து பல காட்சிகள் தந்து 

அடிமையாக்கி நிலா..

தேடி தேடி பார்க்கிறேன் மறைவாய்

தேடாமல் சில நேரம் முன் வந்து சிரிப்பாய்..

படுக்கையிலிருந்து உன்னை ரசிப்பதே 

கோடி பாக்கியம்


By Vidhya Nivas


செந்நிற கூந்தலோடு

மஞ்சள் நிற முகத்தோடு

பச்சை நிற தோட்டத்தை எட்டி பார்க்கும்

பகலவனே உன்னை கண்டு 

பகைவனும் மையல் கொள்வான்

நேருக்கு நேர் உன்னை பார்த்து ரசிக்க 

முடியாவிட்டாலும் மலையில் ஒளிந்து 

கொண்டிருக்கும் உன்னை நானும்  

ஓரக்கண்ணால் ரசிக்கிறேன்


 இரவில் ஓர் சூரியன் நம்மை பித்தனாக்கி விட்டாள்.


இதோ பக்கத்தில் தான் இருக்கிறாள் இவள் என்று 

நினைத்து தொட ஆசைப்பட்டாலும்

தொலைவாகவே செல்கிறாள்

மறையும் முகமா மதியின் முகம் நம் மதியை

விட்டும் நம் மனதை விட்டும் 

எட்ட நின்று பார்க்கும் உறவினர் அல்ல.

கிட்டே இருந்து துடிக்கும் தோழர் அல்ல

என் மனதில் லயிக்கும் விருட்சம் நீ


வான் முழுவதும் பால் அருந்தச் செய்தாயோ? 

உன் ஒளியால்

பூமி முழுவதும் குளிரச் செய்தாயோ? 

உன் பார்வையால்

நீர்நிலைகள் யாவற்றுக்கும்  உன் உருவத்தை 

கடன் கொடுத்தாயோ?

அது காணாதென்று இந்த தோட்டத்திற்கும் நீ 

ஆடையாய் மாற வந்தாயோ?

கடற்கரையில் அமர்ந்த காதலன் அவன் காதலியை 

பாடாது உன்னை பாடியதால் அவன் காதல் முறிவு 

பெற காரணமானாயோ?

மறுமுறை உன்னை காண அவன் வந்த போது 

அன்று அமாவாசை என்று ஏமாற்றம் 

கொள்ளச் செய்தாயோ?

ஏன் நிலவே உன்னில் இத்தனை கவர்ச்சியையும் 

குளிர்ச்சியையும் யார் தந்தது?

விடை தேடும் வினா போல் இந்த வீணாவும் முழிக்கிறேன்


By Veena Sankar

   இழப்பில் ஆக்கம் சிறுகதை by Veena Sankar             


இழப்பில் ஆக்கம்


                                              கோபாலின் திடீர் மறைவு அருணாவை கவலையடையச் செய்தது. குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த  தூண் திடீரென விழுந்ததால், வயதான கோபாலின் பெற்றோரையும் மூளை வளர்ச்சி அடையாத தன் பிள்ளையையும் வருமானம் இன்றி எப்படி  வாழ  வைப்பது  என்பது தான் அவளின் கவலையாக இருந்தது.

                                 ஒரு தனியார் கம்பெனியில் கோபால் கணக்காளராக பணியாற்றிக் கொண்டிருந்தான். கம்பெனியின் பணத்தை வங்கியில் செலுத்த தன் இரு சக்கர வாகனத்தில் சென்று  கொண்டிருந்த அவனை, பின்னாலிருந்து ஒரு லாரி மோத, அங்கேயே வண்டியும் அவனும் அப்பளமாக  சிதைத்தனர். இந்த கோரக் காட்சியைக் காண அருணாவுக்கு வாய்ப்பில்லாமல் போனது நல்லது தான். ஏனென்றால் கோபால் தன் குடும்பத்தை விட்டு சற்று தள்ளி வேறொரு ஊரில் வேலை பார்த்து வந்தான்.


                                  அருணா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்ததால் உதவி கணக்காளராக கூட கோபால்  வேலை பார்த்த கம்பெனியில்  வேலை பார்க்க முடியவில்லை. 

 

                              பத்து நாட்கள் சொந்த பந்தங்கள் கூடி இருந்து கோபாலின் காரியம் முடிந்ததும் அவரவர்களுக்கு முடிந்த அளவு சொற்ப பணத்தை அருணாவின் கையில்  கொடுத்து சென்றனர்.  எப்படியோ அந்த பணத்தை வைத்துக் கொண்டு மூன்று மாதங்கள் வரை  சிக்கனமாக இருந்து குடும்பத்தை  ஓட்டி விட்டாள் அருணா.


                             அக்கம்பக்கத்தில் உள்ள  பெண்களோடு சேர்ந்து கூலி வேலைக்கு செல்கிறேன் என்று அருணா பலமுறை கோபாலிடம் கேட்டும் அவன் மறுத்தே வந்தான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர்களோடு அருணா வேலைக்கு செல்ல வேண்டி வந்தது. கோபாலின் பெற்றோர் தங்கள் பேரனை பார்த்துக்கொள்வதாக கூற நிம்மதி பெருமூச்சுடன் ஒரு ஆயத்த ஆடை தைக்கும் கம்பெனி ஒன்றில்  அருணா வேலைக்கு சென்றாள்.


                                 கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கற்றுக் கொண்டாள். அருணாவின் நேர்த்தியான வேலையும் செயலில் இருந்த ஈடுபாடும் அவளை மேலே மேலே பதவி உயர்வு பெற, சூப்பர்வைசர் ஆனாள்.   அவளோடு வேலை செய்து வந்த பக்கத்து வீட்டு பெண்மணிகளுக்கு   இது அதிருப்தியை  அளித்தது. நான்கு வருடங்களாக அங்கு வேலை பார்த்து வந்த அருணாவுக்கு எதிராக மேலிடத்தில் சொல்லிக் கொடுத்து அவளின் வேலைக்கே உலை வைத்து விட்டனர்.


                                     அருணாவின் மாமனாரும் மாமியாரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்க வேலையும் இன்றி,  தன் மகனை எண்ணியும் இனி வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியாது. நாம் எப்படி வாழ்வது? என்று யோசிக்கத் துவங்கினாள். இருந்தாலும் அவள் கடந்து வந்த வாழ்க்கை அவளை இரும்பாக மாற்றி இருந்தது.  வேலைக்கு சென்ற நாட்களில் தான் சேமித்து வைத்த பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தாள்.  தற்போது அவசர செலவிற்காக பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றாள். அங்கே அவள் தொழில் முனைவோருக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளதாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தாள். அதைப் பற்றி விசாரிக்க, மேலாளரை  பார்த்து விவரம் கேட்கும் படி சொன்னார் வேலை பார்க்கும் ஊழியர்  ஒருவர்.  


                                                             அருணா மேலாளரை பார்க்க, திட்டத்தைப் பற்றி அருணாவிடம் அவர் விளக்கி சொன்னார்.  சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளை தொழில் தொடங்க ஊக்குவித்தார். என்ன தொழில் செய்யலாம்  என்று நினைத்துக்கொண்டே இருந்தவளுக்கு,  மேலாளர் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் துவங்கலாம்  என்று சொன்னாலும் அதற்கு முதலீடு அதிகம் தேவைப்படும் என்பதால் அதனை மறுத்தாள் அருணா. இரண்டு நாட்கள் கழித்து மேலாளரை சந்திப்பதாக சொல்லி வரும் வழியில் யோசனையிலேயே மூழ்கினாள்.


                                 புதிதாக பெரிய தொழில் தொடங்கினால் தன் மகனைப் பார்த்துக் கொள்ள நேரமிருக்காது என்பதால் தான் அதை மறுத்தாள்.  அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தவளாய் தூங்கச் சென்றாள்.


                                      மறுநாளே வங்கி மேலாளரை பார்த்து, ஐந்து - ஆறு தையல் மெஷின் வாங்கி அதை வாடகைக்கு விடுவதாக அருணா தெரிவிக்க,  “யோசனை நன்றாக இருக்கிறதே.  வாடகை சைக்கிள்    கடைகளை தான் ஒழித்து  விட்டார்கள். இந்த தொழிலை தாராளமாக  நீங்கள்  துவங்கலாம்.”  என  மேலாளர் ஒப்புதல் அளித்தார். ஒரு வாரத்திற்குள் அதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  சொன்னார்.  


                                  மேலும் இந்த யோசனை எப்படி தோன்றியது என்று  மேலாளர் கேட்டார். தன் கணவன் உயிருடன் இருக்கும் போதே தையல் பழகிக்கொண்டு   விட்டதாகவும்,  பிறருக்கு தைத்து கொடுக்க நினைத்து இருந்ததாகவும் கணவன் மறுத்து விட்டதால் அதை கைவிட்டு விட்டதாக கூறினாள். கணவன் மறைந்த பிறகு குடும்ப வருமானத்திற்காக  தைத்துக் கொடுக்கலாம் என்று  தான் நினைத்தபோது  தையல் மெஷின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால் அதை செய்ய முடியாமல் போனதாக தெரிவித்தாள்.


                         எனவே  தன்னை போல் கஷ்டப்படும் பெண்களுக்கு தையல் மிஷின் வாடகைக்கு கொடுத்தால் அவர்கள் தன் வீட்டிலேயே  வந்து தைப்பார்கள்  என்பதாலும்,  தன்னால் தன் மகனை பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதாலும் இதை தேர்வு செய்ததாக சொன்னாள்.  அருணாவுக்கு நிறைந்த மனதுடன்  வாழ்த்து  தெரிவித்து  அனுப்பினார்  வங்கி  மேலாளர்.


                           “தையல் மெஷின் வாடகைக்கு கிடைக்கும்” என்று நோட்டீஸ் அடித்து மக்களிடம்  பரப்பி, அருணா  தன்  தொழிலை இரண்டு மாதங்களில்  தொடங்கினாள்.  இட   வசதியும், பொருள் வசதியும் இல்லாத மகளிர் குழுவில் இருந்த பெண்கள்  தினமும் அருணாவின்   வீட்டிற்கு   வந்து    தைக்க ஆரம்பித்தனர்.  இதனால் பொருளாதார வகையிலும் சமூகத்தின் பார்வையிலும்   உயர்ந்த  மதிப்பை  பெற்றாள் அருணா.    


                            ஓர் இழப்பிற்குப் பின்  ஊக்கம் கொள்ளும் மனது,  

                            புது ஆக்கத்திற்கும் நன்  மதிப்பிற்கும் வழிகோலும்.


    கனவின் (கணவனின்) முடிவு சிறுகதை by Veena Sankar


                               கனவின் (கணவனின்) முடிவு


                                               கல்லூரியை விட்டு திரும்பிய தன் மகள் அக்ஷயாவை பார்த்து, ”  நான் வேலைக்கு போகவா அச்சு?” என அம்மா சுகன்யா கேட்க, அக்ஷயா தன் அம்மாவை ஏற இறங்க பார்த்தாள். “ஆமாம்மா.  பேங்க்ல வேலைக்கு கூப்பிடுறாங்க.” என்றாள் சுகன்யா. “என்ன  ஆயா வேலைக்கா?”  என நக்கலாக  அக்ஷயா கேட்க, “இல்லை. ஆபீசர் வேலை”  என்று பதில் சொன்னாள் சுகன்யா.  “என்னமா சுயநினைவோடு தானே இருக்கே?” என்று கேட்ட தன்  மகளுக்கு, ஆமாம் என்று மட்டும் தலையசைத்தாள்.


                                                      “ என்னமா? என்ன சொல்ற? வயசு,  தகுதி எல்லாம் விசாரிச்சுயா?”  என மீண்டும் சந்தேகமாய் அக்ஷயா கேட்க, “கேட்டேனே.  வயசு   நாற்பத்தைந்துக்கு  மேல் இருக்கணுமாம். ஏதாவது டிகிரி படித்து இருக்கணுமாம். இங்கிலீஷ்ல எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டுமாம்”  என்று சுகன்யா பதில் சொல்ல, தனக்கு போட்டியாக வேலை தேடுவதில்   அம்மா மும்முரமாக இருக்கிறாளே என்று  தன் அம்மாவிடம் கொஞ்சம் கோபப்பட்டாள்.


                                                   “ அக்ஷயா!  எனக்கு வீட்ல உட்கார்ந்து போரடிக்குது. எவ்வளவு நேரம் டிவி சீரியலை பார்க்கிறது? அதுல வர்ற காட்சிகளும் கன்றாவியா இருக்கு. வரவர தொடர் நாடகங்களை விட அதற்கு நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள்தான் நன்றாக இருக்கு.  தினமும் அதையும் ரசிக்க முடியல.  வாட்ஸப்ல ஏகப்பட்ட குரூப்ல இருக்கிறேன். ஆனால் வருகிற மெசேஜை மறுபடியும் எல்லா குரூப்பில் இருந்தும் வருது. பாதி மெசேஜை நான் பார்க்கமாட்டேன் என்று உனக்கு தெரியும்.  கல்லூரி பேராசிரியையாக நீ இருக்கறதுனால காலையிலேயே கிளம்பி விடுவே. நீ, பக்கத்துல இருக்குற காலேஜில் வேலை கிடைக்க   முயற்சி  பண்றே.  ஆனா அது எங்க நடக்குது?  என்று கணவனின் இறப்பினை மனதில் வைத்துக் கொண்டு, தன் தனிமையை மறைத்துக் கொண்டு, அதற்கான விடையைத் தேடிக் கொண்டிருந்தாள் அம்மா சுகன்யா.


                                                         தற்போது தன் குரலை தாழ்த்தி, “என்ன வேலை? எங்கே?” எனக் கேட்ட அக்ஷயாவுக்கு, “வாட்ஸ் அப்ல வந்திருந்தது. வேலை நம்ம ராஜாஜி ரோடுல இருக்கிற பிரான்ச் ஆஃபீஸ்ல தானம். வேலை என்னன்னு போன் செஞ்சு கேட்டபோது நாளைக்கு நேர்ல வாங்கன்னு சொல்லிட்டாங்க. நான் போகட்டுமா?” என புதிதாக வேலைக்கு போகும் பெண்ணை போல அம்மா கேட்டதும், அக்ஷயாவுக்கு சிரிப்பு வந்தது. தன் அப்பாவின் இழப்பினை மறக்க அம்மாவும் தன்னைப் போல வேலைக்கு சென்றால் கொஞ்சம் மன அமைதி கிடைக்கும் என நினைத்து “சரிமா. உனக்கு முடியுமான்னு  மட்டும் பாரு. ரொம்ப ரிஸ்க்  எடுக்காதே. டென்ஷனான  வேலைன்னா வேண்டாம்.  முடிவு உன் கையில்.” என அம்மாவிடம் தன் கருத்தை முன்வைத்தாள் அக்ஷயா.  “சரிம்மா. நீ இவ்வளவு சீக்கிரம்  சரின்னு சொல்லுவன்னு  நான் நினைக்கவே இல்லை”  என தன் மகளை சந்தோஷத்தில் உச்சி முகர்ந்தாள்.


                                                        “ நான்    என்ன அப்பாவா?   உன்னை வேலைக்கு போக வேண்டாம் என்று அவர் சொன்னதும், உன் மத்திய அரசு வேலையை விட்டுட்டு வந்துட்டியே? உனக்கு அப்போ எடுத்து சொல்ல யாரும் இல்லை. பெண்களின் முன்னேற்றத்தை மேடைக்கு மேடை    பேசி  எழுச்சியூட்டும்  ஆண் வர்க்கத்தினருக்கு, தங்களுக்கும் - தங்கள் பதவிக்கு பாதகம் வரும் என்று தெரிந்தால் பெண்களை நசுக்க தான் பார்க்கிறார்கள்.  அன்று நான் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக அப்பா சொன்னதற்காக வேலையைவிட்டு இருக்க மாட்டேன்.” என்று தனது  ஆவேசத்தை வெளிப்படுத்தினாள் அக்ஷயா. “ சரி!  சரி!  இப்போ அதை பற்றி பேசி பலனில்லை. அப்பாவின் சம்பாதியத்தால் நாம் ஒன்றும் குறைந்து  போகவில்லை.  நல்லாத்தானே  இருக்கிறோம்? அதை நினைத்து சந்தோசப்படு.” என தன் மகளை ஆசுவாசப்படுத்தினாள் அம்மா.


                                                     “ சரி!  நான் போய் என் சர்டிபிகேட் எல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்று  சொல்லி உள்ளே போன அம்மாவை பார்த்து, இந்த  நாற்பத்தி ஏழு  வயசுலயும் என்ன சுறுசுறுப்புடன் அம்மா  இருக்கிறாள்  என்று  தன் அம்மாவை கலாய்த்தாள் அக்ஷயா. 


                                             அன்னாளில் படித்து முடித்த கையோடு சுகன்யாவுக்கு வேலை கிடைத்தாலும் மூன்று மாதத்திற்குள்ளாகவே நல்ல வரன் ஒன்று வந்தது.    தன்  வீட்டில் வசதிக்கு ஒன்றும் குறைவு இல்லாததால், சுகன்யா வேலையை விட வேண்டும் என்று ஒரு கண்டிஷன் போட்டார் மாப்பிள்ளை. சுகன்யாவின் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாப்பிள்ளை கேட்காததால், ஒரு கட்டத்தில் அந்த  வரன் வேண்டாம் என தீர்மானித்தனர் சுகன்யாவின்  வீட்டார். தனக்குப் பின் மூன்று தங்கைகளை பெற்றோர் கரையேற்ற வேண்டுமே என்று சுகன்யா நினைத்து,   இது நல்ல வரன் என்பதாலும் வேலையை விட சம்மதித்தாள்.  சுகன்யாவின்  முடிவு பெற்றோருக்கு சிறிது வருத்தத்தை கொடுத்தது. சுகன்யா வேலைக்கு போனால் சிறிது பணம் கொடுத்து உதவி இருப்பாள். தன்   தங்கைகளின்  கல்யாணத்தை நன்றாக  நடத்தி வைக்கலாம் என நினைத்து இருந்தனர் பெற்றோர்.  


                                      சுகன்யாவின் கணவர் பின்னாளில் தன்  மைத்துனிகளின்  கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்தார். தன் கணவனை எண்ணி பெருமை பட்டாள் சுகன்யா. எப்படியோ தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து கொண்டே தன்னுடைய சான்றிதழ்களை எடுத்து வைத்தாள்.


                                                   மறுநாள் சுகன்யா வங்கிக்கு செல்ல, அவளுக்கான வேலை என்ன என்பதை சொன்னார் வங்கி மேலாளர். அந்த வேலை  அவளுக்கு பிடித்துப்போகவே, தனக்கு  அந்த வேலை கிடைக்க இறைவனை  பிரார்த்தனை செய்தாள்.


                                                               மாலை   வந்ததும்   அம்மாவின்   வேலையை பற்றி விசாரித்தாள்  அக்ஷயா. வங்கிக்கு வரும்  வாடிக்கையாளர்களுக்கான  சேவை மையம் அது என்றும், அங்கே தனக்கான வேலை என்ன என்பதை சுகன்யா சொல்லும் பொழுதே அவள் அலைபேசி சிணுங்கியது.  “ஹலோ!”  என்று சொன்ன சுகன்யா முகம் மலர்ந்தாள். “ரொம்ப சந்தோஷம்.” என்று சொல்லி போனை கட் செய்தாள்.


                                                   “ என்னமா   வேலை  கன்ஃபார்ம் ஆயிடுச்சா?”   என அக்ஷயா கேட்க, “இல்ல. வர்ற ஞாயிற்றுக்கிழமை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். மீனு அத்தை தான் போன் பண்ணினாங்க.  அவங்களோட ஒண்ணு விட்ட அக்கா பையனுக்கு தான் உன்னை பொண்ணு கேட்டாங்க. நான் தான்  அதை  உன் கிட்ட சொல்லல.”  என்று அம்மா சொன்னதும்,  தாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தை பருவத்திற்கு சென்றாள் அக்ஷயா.


                                                   அக்ஷயாவின் கால்கள் கோலம் போட, தன் மகளின் வெட்கத்தை உணர்ந்தாள் சுகன்யா. சரி என்று சொல்லாமல்  அக்ஷயா தன்   செய்கையால் சொன்னது புரிந்தது சுகன்யாவிற்கு.

      

                                                    மாப்பிள்ளை வீட்டார் சம்பிரதாயத்திற்காக பெண் பார்க்க  வருவதாகவும்   சொல்லி,   அன்றே   திருமண   தேதியையும் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். 


                                          மறு நாள் திங்கள் கிழமை.  அம்மாவின் சான்றிதழ்களை மறுபடியும் தங்கள் வீட்டு பீரோவில் பூட்டி வைத்தாள் அக்ஷயா. அம்மா சுகன்யா, “ஏன்” என்று கேட்டதற்கு, “அன்று  அப்பாவினால் உன் வேலை போனது, இன்று என்  கல்யாணத்தால்    , அப்ளிகேஷன்  போடுவதோடு உன்  வேலையின் கனவு தகர்ந்து போகிறது.  கல்யாணம்  ஆனதும் உன்னை தனியாக விட்டு விட்டு போவேன் என்று நினைத்தாயா?”  என சொல்லி கண்ணடிக்க, சோகமாய் தன் முகத்தை வைத்தபடி நடித்தாள் அம்மா சுகன்யா.  தன்  நிறைவேறாத   ஆசைகளோடு    இதையும் கணக்கில் சேர்த்துக்  கொண்டாள் சுகன்யா.


                                                      ஒரு செயல் பிறருக்கு சந்தோஷம் கொடுக்கும் என்று  நாம் எண்ணும் போது நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும் நம் மனதை விட்டு நீங்கிப் போகும்.


                                 கனவுகள் மெய்ப்படும் கடமைகள் முடிந்தபின்.


Wednesday, April 20, 2022

 

தலைப்பு : படம் பாருங்கள் பதிவிடுங்கள்


படம் : Akhiladevi Kumaran







From Akhiladevi Kumaran


Grow Green...Else will be doomed in dark☺️


Life - sprouts with hope....shrinks in no time…

LIVE EVERY MOMENT TO THE FULLEST♥️


கதகத கதிரவன், 

அனல் பரப்பும் ஆதவன், 

குளுகுளு coolers சூரியன் ஆனதால்,

இயற்கை அன்னையின்,

1 முதல் 100 வயதுள்ள அனைத்து 

வயதினரும்  சுற்றி நின்று

களிப்புடன் ஆனந்த நடனம்😍



From Vidhya Nivas


வாழ்க்கை என்பது ஒரு வட்டம்,

வளர வளர மனமும் விரிவடைய வேண்டும்...

இல்லையேல்  கருகிவிடுவோம்.


இந்த இலைகள் போல இறந்த பின்னும் பிறருக்கு 

பயன்பெற உடல் தானம் செய்வோம்



From Vedavalli Ramani


சூரியனே உன் கருணையால் பிறந்து 

படிப்படியாய் வளர்ந்து காய்ந்து 

சருகாவது பார்த்து மனிதர்கள் வாழ்வும் 

இவ்வளவு தான் என்று இலையாகிய

நான் அறிந்தேன்.நன்றி சூரியனே.



From Sakthi


Everything is beautiful in its own state.

When we understand nature the better,

We understand the being the better.



From Veena Sankar


இலையின் பரிணாமம் , களையிழந்தாலும் 

ஆயிரம் கதை சொல்லும், சருகானாலும் 

நான் உரமாவேன்


வெப்பதினாலும் காலத்தினாலும் என் நிலை 

மாறினாலும் உரமாவேன்

நெருப்பின் வெப்பத்தால்


நான் காலத்தினால் மாறினாலும் மறுபடியும் 

உயிர்த்தெழுவேன் 

என் சந்ததி மூலம்


சூரியனே!


நான் உயிர்த்தெழுவதும், வாழ்வதும், 

சருகாவதும் உன்னாலே. 

நீ மையத்தில் நின்றாலும் இடம் மாறினாலும் 

உன் தேவை வேண்டும் எனக்கு.


இலையே! மரத்தினின்று நீ கீழே விழுந்து உன் 

ஆயுள் முடிந்தாலும் சில காலம் இலை  

என்றழைக்கப்படுகிறாய். ஆனால் மனிதனின் 

ஆயுள் முடிந்தால் மறுகணமே பிணம் என்றாகிறான்.


உருவம் மாறினாலும் உன் வடிவம் 

மாறுவதில்லை. இது தான் இயற்கையால் 

உனக்கு கிடைத்த வெற்றி


பொங்கலன்று சூரியனை பார்த்து 

பொங்கலிடுவோம் இங்கே வாழ்க்கை சக்கரத்தை 

உணர்த்தும் இலைகளை

பார்த்து சூரியனே இறங்கி வந்திருக்கிறான்.


நான் இவனை சூறையாடினாலும் என்னாலேயே

மீண்டும் பிறக்கிறானே குளு குளு சூரியன் 

கிளு கிளு இலையை பார்த்து


ஒற்றுமையே எங்கள் பலம் உயிருள்ள 

செடியிலும், உயிரற்ற சருகிலும்






"கொரியர் பாய்" சிறுகதை by Veena Sankar


கொரியர் பாய் 

                                            வீட்டில் இருந்த   கரணுக்கு போன் வர, “ ஹலோ! யாரு!” என்று கேட்டான்.  எதிர்முனையில்  பேசுபவர் அவர் தன் விவரத்தை சொல்ல, “ஓகே! சார். நான் உங்க கிட்ட இதைப்பற்றி அப்புறம் பேசுறேன்.  என்னுடைய வீடு சின்னது.  ரூம்ல என் மனைவி தூங்கிட்டு  இருக்கிறாள். அவள் எழுந்தால் கஷ்டம் சார்.” என்று  சொல்லி போனை  துண்டித்தான். 


                                                 அந்த நேரம் பார்த்து  அடுப்பில் குக்கர் வைத்தது ஞாபகம் வர, சமையல் அறைக்கு ஓடி, அடுப்பை அணைக்கும் முன்  அது விசில் விட, அதை ஆசுவாசப்படுத்தினான். தன் மனைவி எழுந்தால் என்ன நடக்கும் என்ற பின்விளைவுகளை அறிந்த கரண், அவள் தூங்கும் போது மட்டும்தான் அமைதியாக இருப்பாள் என்பதால் அவளை எழுப்பவும் மாட்டான். அந்த நேரம் மட்டும் தான்  தான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்வான்.


                                           சரி, டிவி பார்ப்போம் என நினைத்து டிவியை ஆன் செய்ய, அது அலறியது. எப்போதும் டிவி சத்தத்தை குறைத்து வைத்து பார்க்கும்போது எப்படி  இன்று மட்டும் டிவி வால்யூம் கூடியது? என நினைத்துக்கொண்டே டிவியை ஆப்  செய்து, நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் டிவி  வால்யும்  எப்படி கூடியது என்று தன்  மனதோடு அசை போட்டான் கரண். அவன் கட்டிலில் படுத்திருந்த போது அவன்  கையே, டிவி ரிமோட்டில் பட்டு வால்யூம் கூடியிருக்கும் என்பதை உணர்ந்தான்.


                                             நல்ல நேரம் கூடி வருவது போல, கெட்ட  நேரமும்  சில சமயம்  ஒன்றாகத்தான் வரும்.  அப்போதே காலிங் பெல் அடிக்க, ஓடி போய் கதவை திறந்தான் கரண். “ஏன் சார்! காலிங் பெல்லை      அமுக்கினீர்கள்?” என்று கேட்டான் வந்தவனிடம்.  “காலிங்பெல் உங்களை கூப்பிட தானே சார் இருக்கு? அதனால்தான் அமுக்கினேன்.” என்று  சொன்னான் வந்தவன். “என் மனைவி தூங்குறாங்க.  அவங்க  எழுந்தால் கஷ்டம் என சொன்னான் கரண்,   தூங்கும் தன் மனைவியை தாங்குபவன்.  


                                        “இனிமேல் நீங்கள் வருகிறீர்கள் என்றால் கதவை மெதுவாக  தட்டுங்கள்.” என்றும் சொன்னான் கரண். “சரி! நீங்க யார்?  என்ன வேண்டும்?” என விசாரிக்க, “நான் கொரியர் பாய் சார். எப்போதும் நான் இந்த நேரத்தில் தான் வருவேன் சார். நேத்துக்கூட அந்த அக்காதான் பார்சலை வாங்கினார்கள்”   என்றான்  கொரியர்   பையன்.      “ஆன்லைனில் அந்த அக்கா ( கரணின் மனைவி) டிரஸ் ஆர்டர் பண்ணி இருக்காங்க. அதை கொடுக்கத்தான் வந்தேன்.” என்றும் சொன்னான். “இந்தாங்க சார் பில்.   மூவாயிரம் ரூபாய் கொடுங்க. கேஷ் ஆன் டெலிவரி என்று போட்டிருக்கு.” என்று கொரியர் பாய் சொல்ல, நேற்று தானே நாலாயிரம் ரூபாய்க்கு டிரஸ்  வாங்கினாள். இன்னைக்கு மூவாயிரம் ரூபாய் என தன்னையறியாமல் வாயை பிளந்து கரண் சத்தம் போட, சத்தமில்லாமல் அவன் மனைவி பணத்தை கொரியர் பையனிடம் கொடுத்து பார்சலை  வாங்கினாள். 


                                           “தூங்கும் போது என்னை  டிஸ்டர்ப் பண்ணா எனக்கு பிடிக்காது உங்களுக்கு தெரியும் இல்ல?  பின்ன எதுக்கு என் போனை உங்ககிட்ட வெச்சுக்காம என் பக்கத்துல வைத்தீர்கள்?  அந்த கொரியர் பையன் எனக்கு போன் பண்ணி எழுப்பி விட்டு விட்டான்.” என்று  கரணை கடிந்து கொண்டாள்.


                               சத்தம் போட்ட கரணும் வாயடைத்து நின்றான். ஆயிரக்கணக்கில்  ஜவுளிக்காக தன் மனைவி காசு  செலவழிப்பதற்காக   அழுவதா? இல்லை  தன்  மனைவியின் தூக்கம் கெட்டு, தன் சந்தோஷம் கெட்டுப்  போனதே, அதற்கு அழுவதா?  என தெரியாமல் முழித்தான்  கரண்.


 மனிதனின்  சொற்கள்  ஊமையாவதும்  உவமையாவதும் சந்தர்ப்பவசத்தால்.


Tuesday, April 19, 2022

 பாட்டியின்  சாதுர்யம் by Veena Sankar



பாட்டியின்  சாதுர்யம் 


                                                                 அந்த காலத்தில் பெரியதாக போக்குவரத்து வசதி கிடையாது. எங்கு செல்ல  வேண்டும் என்றாலும் கால்நடையாகவும் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டி இருந்தது. அடுத்த ஊருக்கு செல்வது என்பதும்  சிரமம்தான். நம் மூதாதையர் காசி, ராமேஸ்வரம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு நடந்து சென்றுதான் வழிபட்டு வந்திருக்கின்றனர். அவ்வாறு சென்றவர்கள் சில நேரம் திரும்பி வருவதும்  உண்டு  வராமல் போவதும் உண்டு. தற்போது நாம் நினைப்பது போல இந்த ஸ்தலங்களுக்கு சென்று வர முடியாது.  


                                                 அதுவும் இந்த ஸ்தலங்களுக்கு சென்று திரும்பி வந்தவர்களின் எண்ணிக்கை குறைவே.  புனித யாத்திரைக்கு சென்று திரும்பியவர்கள்,  தங்களை காண  உற்றார் உறவினர்கள் தனித்தனியே  வந்து வாழ்த்து பெற முடியாது என்பதால்,  ஒரு நாள் அவர்களை அழைத்து விருந்து வைப்பர். அந்நேரத்தில் எல்லோரும் வந்து அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்வர். அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய நிகழ்வாகவே பேசப்பட்டது. 


                                                       விஞ்ஞானம்  கொஞ்சம்  வளர  வளர,  டிராம்,  ரயில்  வண்டிகளும், பேருந்துகளும் ஓட தொடங்கின. அந்த காலத்து பெண்மணியான என்னுடைய  கொள்ளு பாட்டியும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவ்வளவு விஞ்ஞான அறிவும், கல்வியையும் பெற முடியவில்லை என்பதே உண்மை.


                                               உள்ளூர் வைபவங்களுக்கு மட்டுமே  சென்று வரும் என் கொள்ளுப்பாட்டி, வெளியூர் நிகழ்ச்சிகளில் அன்றுவரை பங்கு எடுத்துக் கொள்ளாமல்  இருந்ததால், ஒரு நாள்  ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வெளியூருக்கு அழைத்துச் செல்ல புகைவண்டி நிலையத்திற்கு வந்தடைந்தனர் குடும்பத்தினர். அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட  நடைமேடைகள் இருந்ததால் தாங்கள் செல்ல வேண்டிய ரயில், அடுத்த  நடைமேடையில் வரும் என்று  தெரிந்ததும், என் பாட்டியால் படியில் ஏறி  நடக்க முடியாது என்பதாலும் ரயில்வே தண்டவாளத்தில் அவரை நடக்க வைத்து, அடுத்த நடை மேடைக்கு அழைத்து செல்லலாம் என முடிவெடுத்து,  ஒருவர் பின் ஒருவராக நடந்தனர்.  


                                              அனைவரும் நடைமேடையில் ஏற,  என் பாட்டியை நடைமேடைக்கு  ஏற்றும் சமயத்தில் எதிரே   ஒரு ரயில் வரும் சத்தம் கேட்டதும் அனைவரும் பதட்டம் அடைந்தனர்.  கடைசியில் என் பாட்டியால் ஏற முடியவில்லை. அடுத்த  தண்டவாளத்திற்கு செல்லுங்கள் என்று சொல்லவும் முடியவில்லை. ஏனென்றால் இரண்டு  நடைமேடைக்கும் ஒரே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. 


                                           அங்கேதான் என் பாட்டியின் சாமர்த்தியம் வெளிப்பட்டது.   மெலிந்த   தேகம் கொண்ட என்  கொள்ளு பாட்டி,   தடாலடியாக அந்த இடத்திலேயே ரயில் தண்டவாளத்திற்கு நடுவே நீளவாக்கில் படுத்துக் கொண்டார்.  அந்த ரயில் ,   அந்த ரயில்  நிலையத்தில் நிற்காது என்பதால்  வேகமாக  அந்த   இடத்தை   கடந்து சென்றுவிட்டது. என் பாட்டியோ ரயில் கடந்து சென்ற பின்னால் சாதாரணமாக எழுந்து,  மறுபடியும் நடை மேடையில் ஏற எத்தனித்தார்.   ரயில் வேகமாக வரும் போது  ஏற்படும் சத்தத்திற்கும் காற்றுக்கும் என் கொள்ளு பாட்டி ஈடுகொடுத்து படுத்திருந்தது தான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.  என்ன நடக்குமோ? என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு என்  கொள்ளு பாட்டியின்  சாதுர்யமான  செயல் அனைவருக்கும்  மகிழ்ச்சியையும், அவர்களின்   கேள்விக்கு  பதிலாகவும் அமைந்தது.


                                                உயிர் போக வேண்டிய இடத்தில் என் கொள்ளு பாட்டி உயிர் பிழைத்தார்.  அன்றிலிருந்து  அவரை எமனிடம் சென்று திரும்பியவர் என்று  எல்லோரும்  கிண்டல் அடித்துக் கொண்டு இருந்தனர்.  இந்த சம்பவத்திற்கு பிறகு உள்ளூர், வெளியூர் என எல்லா பயணங்களுக்கும் மிகவும் பரிச்சயம் ஆகி விட்டார் என் கொள்ளுப்பாட்டி. 


                                           விஞ்ஞானம் வளர்ந்தாலும் சாதுர்யமான அறிவும் செயலும்  சில நேரங்களில் தனிமனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம். 


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...