யார் அறிவாளி? by Veena Shankar
யார் அறிவாளி?
“என்னப்பா சரவணா! இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்புறே?” என்ற அம்மாவின் பேச்சிற்கு, ” நேத்து சொன்னேனே அம்மா! இனிமேல் ஆபீசுக்கு சைக்கிளில் தான் போகப் போகிறேன் என்று” என்றான் சரவணன்.
“அது சரி போக ஐந்து வர ஐந்து ஆக மொத்தம் பத்து கிலோமீட்டர் சைக்கிள் அழுத்தினால் உன் உடம்பு என்னத்துக்கு ஆகிறது?” என சரவணனை நினைத்து வருத்தப்பட்டாள் அம்மா.
“ நான் ஜிம்முக்கு போய் என் தொப்பையை குறைக்க, கொடுக்கிற காசை மிச்சப்படுத்தலாம். அதுவும் ஆரோக்கியமான காற்றையும் சுவாசிக்க முடியும். வர வர பெட்ரோல் விலை வேற ஏறிகிட்டே போகுது. ரொம்ப நாளைக்கு முன்னாடியே இதைப்பற்றி நான் யோசித்திருக்கிறேன். எனக்கு இதுதான் நல்லதுன்னு தோணுது.” என்றான்.
“ சரி! உன் ஆபீஸ் பக்கத்திலேயே ஒரு வீட்டை பாரு! நாம அங்க போய் விடலாம்.” என்றாள் அம்மா. “சொந்த வீட்டை வீட்டு வாடகை வீட்டை தேடி யாராவது போவார்களா?” என சரவணன் கேட்டான்.
“ சரி இந்த வீட்டை விற்று விடலாம் இல்லை வாடகைக்கு விட்டு, வரக் காசை புது வாடகை வீட்டுக்கு கொடுக்க வச்சுக்கலாம்.” என்று ஆலோசனை சொன்னாள் அம்மா. “அது எப்படி முடியும்?” என்றான் சரவணன்.
“ ஆமாண்டா! அவன் தருகிறான் இவன் தருகிறான் என்று லோன் வாங்கி கார், வீடு, செல்போன், ஏசி, டிவியை வாங்குகிறோம், நம்மை அவன் கடன்காரன் ஆக்குகிறான். அதை பற்றி நாம் யோசிப்பதே கிடையாது. நானும் அப்பாவும் குடும்பம் நடத்தின காலத்துல அடுத்தவன் கிட்ட சம்பளம்தான் கைநீட்டி வாங்கி இருக்கோமே தவிர, நாங்கள் இந்த சொகுசு வாழ்க்கைக்கு அடிமையானது கிடையவே கிடையாது.” என்றாள்.
மேலும் “இப்போது தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்திருக்கிறதே? சார்ஜ் போட்டால் ஸ்கூட்டர் ஓடும் தானே? அதை வாங்கலாம்.” என்று அம்மா சொல்ல “ஆமா! கரண்ட் பில்லு ஏறிக்கிட்டே போகும். அப்போ என்ன சொல்லுவியோ? என்று பதிலளித்தான் சரவணன்.
“ அதனால் என்னடா பெட்ரோலுக்கு குடுக்குறதுக்கு பாதி காசு கொடுத்தா போதுமே?” என்று விடாப்பிடியாய் அம்மா சொல்ல,” ஐயோ! என்னோட காதலி பக்கத்து வீட்டு நிர்மலா, இந்த வருஷம் காலேஜுக்கு போக போறாளே? அவ கூட ஜாலியா சைக்கிள்ல போகிறது விட்டு… என்று மனம் நொந்தான் சரவணன்.
அம்மாவிற்கு புரிய வைப்பது எப்படி? என்று தெரியாமல் முழித்தான் சரவணன். ஆனால் அம்மாவோ சரவணனின் வாயிலிருந்து தன் காதல் விஷயம் வெளியே வர வேண்டுமென்பதற்காக காத்திருந்தாள்.
அம்மாவிற்கு என்றோ இவர்கள் காதல் விவகாரம் நிர்மலா மூலம் எட்டிவிட்டது. நிர்மலா தான் தன் மருமகள் என்பதை அன்றே அம்மா மனதில் கொண்டு விட்டாள்.
இதில் யார் அறிவாளி? பெட்ரோல் விலை அதிகமானதை குறைக்க நினைத்த சரவணனா ? சரவணனின் காதல் விவகாரம் தெரிந்தும் அவன் வாயால் விஷயத்தை கறக்க நினைத்த அம்மாவா?
புதிரும் சுவாரசியமானது புரிந்து கொள்ளும் மனிதர்களுக்கு.
No comments:
Post a Comment