Monday, April 11, 2022

துவளாத மனங்கள், by Veena Shankar 




       துவளாத மனங்கள் 


                                                    கல்பனா தன் கை கடிகாரத்தை பார்த்த வண்ணம் இருந்தாள். தன் கணவன் சுதீரின்  வரவுக்காக காத்திருந்தாள். நைட் ஷிப்ட் என்றாலும் எப்பொழுதும் காலை    ஒன்பது  மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவான். ஆனால்  இன்று என்னவோ தாமதமானது. எங்காவது டிராபிக்கில் மாட்டிக் கொண்டு  இருப்பார் என்று கல்பனாவும்  நினைத்தாள். அப்போது  சுதீரின்  ஸ்கூட்டர் சத்தம் கேட்க, வெளியே ஓடி வந்தாள் கல்பனா. “வா! சீக்கிரம் போகலாம்.”  என்றான் சுதீர். “உள்ளே வாங்க! சாப்பிட்டு அப்புறம் போகலாம்.” என்றாள் பதிலுக்கு கல்பனா. “இல்லை! இல்லை!  இன்னும் நேரம் ஆகிவிடும். நமக்கு கொடுத்த நேரத்துல சரியா போனால் தான் நல்லா இருக்கும்.” என்று  சொன்ன சுதீரின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்காமல் வீட்டை பூட்டி விட்டு கிளம்பினாள்.


                                                  இருவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். சரியாக பத்து   மணிக்கு மருத்துவமனைக்கு உள்ளே சென்று, ரிசப்ஷனில் இருந்தவரிடம்  சுதீர் ஏதோ சொல்ல, அவள் இன்டர்காமில் யாரையோ அழைக்க, ஒரு சில மணித்துளிகளில் நர்ஸ் ஒருவர் வந்து இருக்கையில் அமர்ந்து இருந்த  சுதீரிடம் ஒரு காகிதத்தை கொடுக்க,  அதை வாங்கிக் கொண்டு இருவரும்  அங்கிருந்து கிளம்பினர்.


                                                “ என்னங்க! லெட்டர் தான்  வாங்கியாச்சுல்ல. வாங்க பக்கத்துல இருக்கிற ஹோட்டல்லே போய் சாப்பிடலாம். காலையில ஒன்னும் சாப்பிடல.”  என்று சொன்ன போதுதான் “கல்பனா!  நீயும் சாப்பிடலையா?” என  கேட்டான்.  நீங்க இல்லாம நான் மட்டும் தனியாக  எப்போ சாப்பிட்டு இருக்கிறேன்?  “ என   அவள் எதிர்  கேள்வி கேட்க,   சுதீர் மௌனமானான்.  “சரி வா!” என்று கல்பனாவை அழைக்க, இருவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டனர்.


                                                   “ புதுசா கல்யாணம்  ஆன  பொண்டாட்டி தான் புருஷன் வராமல் சாப்பிட மாட்டாள்.  ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகிவிட்டது. இன்னும் நீ மாறாம அப்படியே இருக்கியே?”  என சுதீர் கல்பனாவை சீண்ட, கல்பனாவின்    முறைப்பு அவனுக்கு பதிலாய் வந்தது. “இனி நான் பேச்சை  தொடர்ந்தால்  நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து பட்டினி இருக்க வேண்டியதுதான்.”  என கண்ணடித்து சுதீர் சிரிக்க,  முறைப்பதை விட்டு விட்டு கல்பனாவும் சிரித்தாள். சாப்பாடு முடிந்த கையோடு தேநீர்  வர குடித்து புறப்பட்டனர்.


                                பத்து நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு ரத்த-வங்கி நிலையத்தை அடைந்தனர்.  அங்கேயும்  ஒரு கூட்டம் காத்திருந்தது. இவர்களைப் பார்த்ததும் ரத்த வங்கி ஊழியர்  ஒருவர்,  இருவருக்கும் வணக்கம் வைத்து,  அவர்கள் கொண்டு வந்த காகிதத்தை வாங்கி, இருவரையும் ஒரு அறைக்கு கூட்டி சென்றான். அங்கே  இருவருக்கும் ரத்த அழுத்த சோதனை, நீரிழிவு சோதனையும் நடத்தப்பட்டு, மற்றொரு அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த அறையில்  சரித்து  வைக்கப்பட்டிருந்த படுக்கையில் இருவரும் தனித்தனியே படுக்க, ஊசியுடன்  நர்ஸ் ஒருவர் வந்தார்.   சுதீர், கல்பனாவிடம் இருந்து ரத்தத்தை நர்ஸ் சேகரித்தார்.  இருபது  நிமிடத்திற்குப் பிறகு,  ரத்தம் எடுத்து முடித்தவுடன் அவர்களுக்கு பழரசம் கொடுக்கப்பட்டது. 


                                             அப்போது நர்ஸ், கல்பனாவை பார்த்து “நான் இங்கே  வேலையில் சேர்ந்து ஆறு வருஷம் ஆகிறது.  நான்  வருவதற்கு முன்பே நீங்கள் இருவரும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வந்து இங்கு ரத்தம் கொடுக்கிறீர்கள். உங்கள் குரூப் ரத்தம் அரிதானது தான்.  மேலும் தற்போது இந்த குரூப் இரத்தத்திற்கு தேவை அதிகரித்துள்ளது. நீங்கள் செய்யும் இந்த உன்னத காரியத்தால் பல பேர்  உயிர் பிழைக்கிறார்கள். உங்கள் இருவரின் பணியும் தொடர வாழ்த்துக்கள்.”  என சொல்ல கல்பனாவின் கண்களிலிருந்து கண்ணீர்   பனிக்க,  “மேடம்!  என்ன ஆச்சு? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?  என்னை மன்னிச்சிடுங்க.” என்று நர்ஸ் தவிக்க, “ஒன்னும் இல்லைம்மா.   எங்கள் குழந்தை அபினவ்க்கு எட்டு   வயது இருக்கும் போது  அவனுக்கு உடம்பு சரியில்லாமல்   போனது. அவனுடைய ஆபரேஷனுக்கு இரத்தம் தேவைப்பட்டபோது அவனுக்கு ரத்தம் கிடைக்க காலதாமதம்  ஆனதால் அவனுடைய ஆபரேஷன் தள்ளிப்போக,  கடைசியில் அவனை நாங்கள் இழந்து விட்டோம்.” என வருத்தத்துடன் சொன்னான்  சுதீர்.  


                                                 “சாரி சார். இப்போ உங்களுக்கு வேற குழந்தை….” என்று நர்ஸ் இழுக்க, அவள் கேட்டதை உணர்ந்த கல்பனா, மறுபடியும் விசும்பினாள். “இல்லைமா. ஒரு குழந்தை போதும் என்று நினைத்து   இவள் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டா.” என்று  சுதீர் சொல்ல,  “சார்! அதெல்லாம்  இப்போது பிரச்சனையே  இல்லை.   ரீ - ஆப்பரேட்  செய்து கொண்டால் மறுபடியும் குழந்தை  பெறலாம்.” என்று தன் பங்குக்கு  நர்ஸ் சொல்ல,  “அதுவும்  இப்போது செய்ய முடியாது.  இவளுக்கு கர்ப்பப்பையை  எடுத்தாச்சு.”  என்றான் சுதீர். “  நீங்க தப்பா நினைக்கலன்னா இன்னொரு வழி  இருக்கு.  நான் சொல்லவா?” என  மீண்டும் நர்ஸ்  கேட்க, “என்ன வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள சொல்கிறீர்களா?” என்று சுதிர்  கேட்டான்.


                                            இந்த  கேள்வியை  எதிர்பார்க்காத   நர்ஸ்,   ஆம்   என்று தலை அசைத்தாள். “  அப்படி பெற்றுக்கொள்வதில் இவங்களுக்கு விருப்பமில்லை.”   என   இம்முறை    கல்பனா  பதில்  சொன்னாள். “ எனக்கு  நீ,  உனக்கு  நான்  என்றும், நம்  குழந்தையின் நினைவுகளை சுமந்தபடியே இந்த வாழ்க்கை பயணத்தை தொடர்வோம் என்று சொல்லிவிட்டார்.”  என்று  கல்பனா சொல்ல,  இருவரையும்  பார்த்து  “ ஓகே சார்!  உங்கள் விருப்பம். அறிவியல்  முன்னேறி விட்டாலும்  நம்   மனதிற்கு எது சரியோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.  உங்கள் வாழ்க்கையில் நீங்கள்  இருவரும் இனிதே பயணிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.” என்று சொல்லி அவர்களிடமிருந்து கனத்த   இதயத்துடன்   விடை  பெற்றாள்   நர்ஸ். 


                                              கிட்டத்தட்ட   நர்சின்    கதையும்    இவர்கள்  கதை போலத்தான்.  இனி  குழந்தை பிறக்காது.  இவள் குழந்தை பெற்றுக் கொடுக்க   இயலாதவள் என்று நினைத்த  நர்சின் கணவன்,  தான் இரண்டாவது  திருமணம்  செய்து   கொண்டான்.


                                          காதலும்    உண்மையும்  வேண்டும். 

                                          வலிமையும்  மனமும் உள்ள இடத்தில். 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...