Sunday, April 10, 2022

                  

சக்தியின் கனவு by Veena Shankar


                                     



சக்தியின் கனவு 


                                     அதிகாலை நான்கு மணி இருக்கும். தன்  உடையை மாற்றி பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு  வந்தாள்  சக்தி. பேருந்து நான்கு   மணியில் இருந்து இயக்கப்படும் என்பதால்  ஒரு மணி நேரத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விடலாம் என நினைத்துக்கொண்டே யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டபடியே பேருந்து புறப்பட காத்திருந்தாள் சக்தி. அவள் போக வேண்டிய பேருந்து நின்று இருந்தாலும் அதில் பயணிகள் இல்லாததால் ஓட்டுனர் வந்தபின் ஏறிக் கொள்ளலாம்  என்ற நினைத்த வேளையில்  ஓட்டுனரும் நடத்துனரும் கையில் காபி கோப்பையுடன் வந்தனர். “என்ன  மேடம்! அதுக்குள்ள ஒரு வாரம் ஆயிடுச்சா?” என்று நடத்துனர்  சக்தியை பார்த்து கேட்க,  “ஆமாம்  சார்.”  என பதில்  தந்தாள்.  “இன்னும் பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பும் போய் உட்காருங்க” என்றார் ஓட்டுநர்.  சரி என்று தலையசைத்தாள் உட்கார மனமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். சிலர் வண்டியில் ஏற தானும் ஏறி அமர்ந்தாள்.  


                                    மாரியம்மன்  கோயில் வாசலிலேயே அந்த பேருந்து நிற்கும் என்பதால் அதிலிருந்து இறங்கி, நேரே ஒரு சிறிய வீட்டிற்கு சென்றாள்.  பத்து  நிமிடங்கள் கழித்து  சக்தி திரும்பி வர, கோயிலுக்குள் பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியது. கோயில் வாசலில் அமர்ந்து  சாதுக்களின்  பக்கத்தில் தானும் அமர்ந்து கொண்டாள்.  பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்த வண்ணம் இருந்தனர். பக்கத்தில் இருந்தவர்கள் அவளைப் பார்த்து புன்சிரிப்பு  பூத்தனர்.  சற்று விலகி அமர்ந்து,  தங்கள் பக்கத்திலேயே அமர இடம் கொடுத்தார்கள். கூட்டத்தில் புதிதாக சேர்ந்த ஒருவள், சக்தியைப் பற்றி சாது ஒருவரிடம் விசாரிக்க,  “மெதுவாக பேசு! அந்த அம்மா பெரிய கம்பெனில பெரிய அதிகாரி.  ஆனால் நம்ம மாரியம்மன் மேல  அவர்களுக்கு ரொம்ப பக்தி.  அவர்கள் பிள்ளை  விமானம் ஓட்டுபவர். போன வருஷம் ஒரு சிறிய  விபத்தில் அந்த  அம்மாவுடைய பையன் மாட்டிக் கொண்டார். உயிர் பிழைத்ததே மறுபிறப்பு. எப்படியோ நம்ம மாரியம்மாள் மேல இருந்த பக்தியினால் தான்  அவர்கள் பையன் அல்லாது பயணம் செய்த அத்தனை பேரும் உயிர் தப்பினார்கள். 

  

                                            சென்ற மாதத்தில் ஒரு நாள், இந்த அம்மாவின்  கனவில் மாரியாத்தாள் வந்து “உன் பிள்ளையை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன். ஆனால் நீ எனக்கு எதுவுமே செய்யாமல் இருக்கிறாயே? என்று  கேட்டதாகவும், உன் பிள்ளைக்கு நான் உயிர் பிச்சை போட்டிருக்கிறேன்.  அதனால் நீ என் கோயில் வாசலில் வந்து பிச்சை எடுத்து,  அதில் வருகிற பணத்தை  கஷ்டப்படும் ஏழைகளுக்கு  கொடுத்துதவி பரிகாரம் தேடிக் கொள்” என்று சொல்லிச்சாம். அதனால் அந்த அம்மாவும்  நாற்பத்தி எட்டு  நாட்களுக்கு மட்டும் வந்து, அந்த கடனை தீர்க்க   வாரம் ஒரு முறை  காலையிலும் மாலையிலும் இங்கு  வருவார். யாரும்  தன்னைக் கண்டு பிடிக்க கூடாது என்பதால் மாறுவேடத்தில் வந்து பிச்சை எடுக்கிறார். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும்   மாரியம்மாளுக்காக, அந்தம்மா பிச்சை எடுப்பது  பெரிய சம்பவமே.” என சொன்னார். ஓ! என்று கதை  கேட்டாள் கேள்வி கேட்டவள். அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர், “அது எப்படி சாமி மாரியாத்தாள்  வந்து  எனக்கு  நீ  ஒன்னும்  செய்யலை என்று கேட்கும்?”   என  தன் கேள்வியை முன்வைத்தார்.  “அப்படி ஒன்றும் மாரியாத்தாள் கேட்டிருக்க மாட்டாள்.  எந்த கடவுளும்  பக்தர்களிடம்   தனக்கு அதை செய்! இதை செய்!  என கேட்பது கிடையாது. பக்தர்களை ரட்சிக்க மட்டுமே செய்வார்கள். இந்த  அம்மா மாரியாத்தாள் மேல் பக்தி   கொண்டிருந்ததால் தான், ஆத்தா உயிர் பிச்சை  அளித்திருக்கிறார் என்று நினைத்து, அதற்கு பிரதிபலனாக தான் ஒன்றுமே செய்யவில்லை என மனதில்  குமுறிக்  கொண்டிருந்திருப்பார். 


                                           எண்ணத்தின் பிரதிபலிப்பே  கனவு என்பது ஆகும். அதனால்  தன் கனவில்  மாரியாத்தாள் வந்து அப்படி  பரிகாரம் செய்ய சொல்லி  கேட்டதாக இந்தம்மா நினைத்திருப்பார்.” என சக்திக்கு அறியாத அவளின்  மன  ஓட்டத்தை  புட்டு  புட்டு வைத்தார் சாது.


                                      அவர் சொல்லிக்  கொண்டிருந்ததை கேட்டவர்கள் இப்படியும் இருக்கும் போல என மீண்டும் சக்தியை பார்த்து புன்முறுவல்  செய்தனர்.  இன்னும் கொஞ்ச  நாள்  தான் இங்கே   தான் இருப்பதாகவும்  தன்னுடைய நேர்த்திக்கடன்  முடிந்ததும் இந்த இடத்தை காலி செய்து விடுவதாகவும் அவர்களுக்கு  இடைஞ்சலாக தான் இருக்க மாட்டேன் என்று சொல்வது  போல  இருந்தது   சக்தியின்  பார்வை.


                                               நன்மை நடக்கும் பட்சத்தில்

                                   நம்மை வருத்திக் கொள்வதில் தவறில்லை.


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...