படம் பாருங்கள் பதிவிடுங்கள்,
தலைப்பு : by Akhila Devi Kumaran
படைப்பு : by Veena Shankar
யார் பெரியவன்?
ஒரு தோட்டத்தில் பல வகையான செடிகள் நடப்பட்டு இருந்தன. அவை ஒவ்வொன்றும் வித விதமான பூக்களையும் நிறங்களையும் கொண்டிருந்தன. சில செடிகளின் இலைகள் புத்தம் புது வகையாகவும் இளம் சிவப்பு வண்ணத்திலும் இருந்தன.
அவ்வாறாக , “நானே பெரியவன்” என்று பூக்கள், தங்களின் அழகில் மயங்கி தங்களுக்கு தாங்களாகவே பெரியவர் என்று நினைத்துக் கொண்டாலும் அதை ஒரு வகையில் நாம் “சரி” என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாள், அந்தத் தோட்டத்தில் இருந்த செடியின் இலைகள் தங்களைத் தாங்களே "பெரியவன்" என்று சொல்லி வாதம் செய்து கொண்டிருந்தன.
செடியில் மேலே இருந்த இலை, “நான் தான் உங்களை விட பெரியவன்” என்று நடுவிலும், அடியில் இருந்த இலைகளை பார்த்து வம்புக்கு இழுத்தது.
அதற்கு “நீ எப்படி பெரியவன் ஆவாய்?” என்று நடு மற்றும் கீழ் இலைகள் மேற்புற இலையை பார்த்து கேட்டது.
அதற்கு பதிலளித்த மேற்புற இலை, “ நான் மேற்புறத்தில் இருப்பதால், என்னை எல்லோரும் தொட்டு வருடி, அவர்களின் ஆவலை தூண்டும் விதமாக நான் இருப்பதால், அவர்களுக்கு நான் சந்தோஷத்தை அளிக்கிறேன். அதுவே எனக்குப் பெருமைதான்.” என்றது.
“அப்படி எப்படி நீ சொல்ல முடியும்? மண்ணில் இருந்து வெளிப்படும் போது முதன் முதலில் என்னை வைத்து தான் நாம் எந்த வகை செடி என அனுமானம் செய்வார்கள். அதனால் நான் தான் பெரியவன்.” என்று சொன்னது கீழ்ப்புற இலை.
“ இல்லை! இல்லை! நீங்கள் இருவரும் சொல்வது தவறு. நான் தான் உங்களை விட பெரியவன். ஏனென்றால் முளைத்து ஒரு அளவுக்கு வரும் வரை நீ சிறியதாகத்தான் இருப்பாய். பிறகு அப்படியே உதிர்ந்து விடுவாய்.” என்று கீழ்ப்புற இலையை பார்த்தும், “நீயும் புதியதாக முளைப்பதால் அளவில் சிறியதாகவே இருப்பாய்.” என்று மேல்புறஇலையை பார்த்தும் சொன்னது நடுவில் இருந்த இலை.
“நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ அளவில் பெரியதாக இருந்தாலும் முற்றியவுடன் உன்னை யாரும் சீண்ட மாட்டார்கள். இளந்தளிர் ஆன என்னை தான் ரசிப்பார்கள்.” என்று நடு இலையை பார்த்துச் சொன்னது மேல்புற இலை.
“உனக்கு மமதை அதிகமாகிவிட்டதா? நான் சிறிய அளவில் இருந்தாலும் நான் தான் பெரியவன். நீங்கள் எல்லோரும் மேலே வளர்ந்து வர, நான் தான் உங்களுக்கு முன்னோடி.” என்று சொன்னது கீழ்ப்புறத்தில் இருக்கும் இலை.
“அது எப்படி சாத்தியமாகும்? கீழ்ப்புறத்தில் உள்ள உன்னாலும் சரி, மேற்புறத்தில் இருக்கும் அவனாலும் சரி, பூவை தாங்கி நிற்கும் அளவிற்கு நீங்கள் இருவரும் பக்குவப்படவில்லை. நான்தான் காய் கனிகளை தாங்கி பிடித்துக் கொள்கிறேன்.” என்றது நடுவில் இருந்த இலை தன் பங்கிற்கு.
“நீ ஒரு சின்ன காற்று வந்தாலும் தாங்க மாட்டாய். நீ இந்த ஆட்டத்திற்கு வரக்கூடாது.” என்று சொன்னது மேற்புற இலை கீழ்ப்புற இலையை பார்த்து.
“அவனை வேண்டுமானாலும் ஆட்டத்திலிருந்து வெளியேற்று! ஆனால் நான் அப்படி இல்லை. மேற்புறத்தில் இருக்கும் உன்னை தான் வருடுகிறார்கள் என்று சொல்கிறாயா? எத்தனை பேர் உன்னை கிள்ளி கிள்ளி எறிகிறார்கள்? அது உனக்கு புரியவில்லையா? நான்தான் பெரியவன்.” என்று நடு இலை, இறுதிப்போட்டியில் “தான்” தான் வெற்றியாளன் என தன் பேச்சை முன் வைத்தது.
இலைகளின் சண்டை வலுத்து கொண்டு போகவே, “ இதற்கு முடிவே இல்லையா?” என அந்த செடியினை தாங்கும் வேர், வாய்விட்டுப் புலம்ப, அது கீழே இருந்த மண்ணிற்கு கேட்டது.
மண், “யார் பெரியவன்” என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த மூவரையும் பார்த்து, “உங்களுக்கு அறிவு என்பதே இல்லையா? மழையாலும், காற்றாலும், வெயிலாலும் நீங்கள் மூவரும் அழியக் கூடியவர்கள் தான். நீங்கள் உதிரும் காலங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். நீங்கள் மூவரும் உதிர்ந்த பின், சருகாகத்தான் மாறி போவீர்கள். உங்களுக்குள் இதில் “யார் பெரியவன்’ என்று போட்டி வேறு எழுகிறதா? என கேட்க, மூன்று இலைகளும் வாயடைத்து நின்றன.
“முதலில் நீங்கள் செழித்து வளர நான் வேண்டும். பிறகு உங்களை தாங்கிப்பிடிக்கும் வேர் உறுதியானதாக இருக்க வேண்டும். நீங்கள் காலத்தினால் அழியக் கூடியவர்கள். உங்களை தாங்கிப்பிடிக்கும் வேர் உங்களை விட சற்று உறுதியானது தான். அப்படி பார்த்தால் நானும் வேரும் போட்டியில் இறங்கவேண்டும்.”
“மழை வரும்போது நீரை சேமித்து வைத்து, கோடை காலத்திலும் நீங்கள் வாடாமல் இருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் அறிவீனத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.”
“நீங்கள் மூவரும் தனித்தனியாகப் பார்த்தால் “பெரியவன்” தான். அரும்பாக இருக்கும் போது கீழ் இலையும், பூ, காய், கனிகளை தாங்கி நிற்பதால் நடு இலையும், இளம் பச்சை நிறத்தில் அனைவரையும் கவர்வதால் மேல்புற இலையும் சமமானவர்களே! உங்களுக்குள் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. நீங்கள் இப்படி சண்டையிட்டுக் கொண்டால் மற்றவர்கள் உங்களை பார்த்து என்ன நினைப்பார்கள்? “
“இப்படியே பேசி பேசி தான், இந்த மனிதர்கள் தங்களின் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். “நான்தான் பெரியவன்” என்ற மமதையில் அலைகிறார்கள். பொன், பொருள் இவை யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் “பெரியவர்கள்” என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்பேர்ப்பட்ட செல்வந்தனாக இருந்தாலும் கடைசியில் அவர்கள் எல்லோரும் என்னுள் தான் அடக்கம். அப்படியிருக்க, மனிதர்களை விட “நானே பெரியவன்” என்று நான் பீற்றிக் கொண்டால் தவறு ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.”
“உங்களைப் பார்த்து நானும் உங்களிடம் சண்டை போடலாமே?.” என்று கேட்டது மண். மண் சமாதானம் செய்ததால், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த இலைகள், தங்கள் தவறை உணர்ந்து, மண் இடம் மன்னிப்பு கேட்டும், இனி தங்களுக்குள் “யார் பெரியவன்” என்ற பேச்சே வராது என்றும் உறுதியளித்தன.
“எவரொருவர் நல்ல மனம் படைத்து இருக்கிறார்களோ, அவர்களே இந்த பூமியில் உயர்ந்தவர்கள். ‘நான்’, ‘எனது’ என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு காலும் நல்ல கதி அடைய போவதில்லை. உங்களிடம் பேசும்போது நானும் “நான்” என்ற வார்த்தையை உபயோகித்தேன். ஆனால் ஒருபோதும் மமதையால் “நான்” என்று நான் சொல்லவில்லை. உங்களுக்கு உணர்த்தவே நான் அப்படி சொன்னேன்.”
“ மேலும் இது தெரியாத மனிதர்களுக்காக நானும் வேதனைப்படுகிறேன். உங்களின் சண்டையை பார்த்து உங்கள் மூவரின் அறியாமையை விளக்க நான் இப்போது வந்தது போல், இந்த மனிதர்களையும் அவர்கள் செய்யும் தவறுகளையும் உணர்த்த யார் வருவார்கள்?” என வருந்தி மனிதனின் தவறையும் எடுத்துரைத்தது மண்.
மண் சொன்னது “சரி” என நினைத்த இலைகள், அன்றிலிருந்து ஒற்றுமையாக இருந்தன.
சண்டை எப்போதும் அறிவிற்கு வழிவகுக்காது.
ஆனால் உண்மை அழிவிலிருந்து காப்பாற்றும்.

No comments:
Post a Comment