இழப்பில் ஆக்கம் சிறுகதை by Veena Sankar
கோபாலின் திடீர் மறைவு அருணாவை கவலையடையச் செய்தது. குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தூண் திடீரென விழுந்ததால், வயதான கோபாலின் பெற்றோரையும் மூளை வளர்ச்சி அடையாத தன் பிள்ளையையும் வருமானம் இன்றி எப்படி வாழ வைப்பது என்பது தான் அவளின் கவலையாக இருந்தது.
ஒரு தனியார் கம்பெனியில் கோபால் கணக்காளராக பணியாற்றிக் கொண்டிருந்தான். கம்பெனியின் பணத்தை வங்கியில் செலுத்த தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவனை, பின்னாலிருந்து ஒரு லாரி மோத, அங்கேயே வண்டியும் அவனும் அப்பளமாக சிதைத்தனர். இந்த கோரக் காட்சியைக் காண அருணாவுக்கு வாய்ப்பில்லாமல் போனது நல்லது தான். ஏனென்றால் கோபால் தன் குடும்பத்தை விட்டு சற்று தள்ளி வேறொரு ஊரில் வேலை பார்த்து வந்தான்.
அருணா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்ததால் உதவி கணக்காளராக கூட கோபால் வேலை பார்த்த கம்பெனியில் வேலை பார்க்க முடியவில்லை.
பத்து நாட்கள் சொந்த பந்தங்கள் கூடி இருந்து கோபாலின் காரியம் முடிந்ததும் அவரவர்களுக்கு முடிந்த அளவு சொற்ப பணத்தை அருணாவின் கையில் கொடுத்து சென்றனர். எப்படியோ அந்த பணத்தை வைத்துக் கொண்டு மூன்று மாதங்கள் வரை சிக்கனமாக இருந்து குடும்பத்தை ஓட்டி விட்டாள் அருணா.
அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களோடு சேர்ந்து கூலி வேலைக்கு செல்கிறேன் என்று அருணா பலமுறை கோபாலிடம் கேட்டும் அவன் மறுத்தே வந்தான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர்களோடு அருணா வேலைக்கு செல்ல வேண்டி வந்தது. கோபாலின் பெற்றோர் தங்கள் பேரனை பார்த்துக்கொள்வதாக கூற நிம்மதி பெருமூச்சுடன் ஒரு ஆயத்த ஆடை தைக்கும் கம்பெனி ஒன்றில் அருணா வேலைக்கு சென்றாள்.
கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கற்றுக் கொண்டாள். அருணாவின் நேர்த்தியான வேலையும் செயலில் இருந்த ஈடுபாடும் அவளை மேலே மேலே பதவி உயர்வு பெற, சூப்பர்வைசர் ஆனாள். அவளோடு வேலை செய்து வந்த பக்கத்து வீட்டு பெண்மணிகளுக்கு இது அதிருப்தியை அளித்தது. நான்கு வருடங்களாக அங்கு வேலை பார்த்து வந்த அருணாவுக்கு எதிராக மேலிடத்தில் சொல்லிக் கொடுத்து அவளின் வேலைக்கே உலை வைத்து விட்டனர்.
அருணாவின் மாமனாரும் மாமியாரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்க வேலையும் இன்றி, தன் மகனை எண்ணியும் இனி வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியாது. நாம் எப்படி வாழ்வது? என்று யோசிக்கத் துவங்கினாள். இருந்தாலும் அவள் கடந்து வந்த வாழ்க்கை அவளை இரும்பாக மாற்றி இருந்தது. வேலைக்கு சென்ற நாட்களில் தான் சேமித்து வைத்த பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தாள். தற்போது அவசர செலவிற்காக பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றாள். அங்கே அவள் தொழில் முனைவோருக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளதாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தாள். அதைப் பற்றி விசாரிக்க, மேலாளரை பார்த்து விவரம் கேட்கும் படி சொன்னார் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர்.
அருணா மேலாளரை பார்க்க, திட்டத்தைப் பற்றி அருணாவிடம் அவர் விளக்கி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளை தொழில் தொடங்க ஊக்குவித்தார். என்ன தொழில் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே இருந்தவளுக்கு, மேலாளர் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் துவங்கலாம் என்று சொன்னாலும் அதற்கு முதலீடு அதிகம் தேவைப்படும் என்பதால் அதனை மறுத்தாள் அருணா. இரண்டு நாட்கள் கழித்து மேலாளரை சந்திப்பதாக சொல்லி வரும் வழியில் யோசனையிலேயே மூழ்கினாள்.
புதிதாக பெரிய தொழில் தொடங்கினால் தன் மகனைப் பார்த்துக் கொள்ள நேரமிருக்காது என்பதால் தான் அதை மறுத்தாள். அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தவளாய் தூங்கச் சென்றாள்.
மறுநாளே வங்கி மேலாளரை பார்த்து, ஐந்து - ஆறு தையல் மெஷின் வாங்கி அதை வாடகைக்கு விடுவதாக அருணா தெரிவிக்க, “யோசனை நன்றாக இருக்கிறதே. வாடகை சைக்கிள் கடைகளை தான் ஒழித்து விட்டார்கள். இந்த தொழிலை தாராளமாக நீங்கள் துவங்கலாம்.” என மேலாளர் ஒப்புதல் அளித்தார். ஒரு வாரத்திற்குள் அதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சொன்னார்.
மேலும் இந்த யோசனை எப்படி தோன்றியது என்று மேலாளர் கேட்டார். தன் கணவன் உயிருடன் இருக்கும் போதே தையல் பழகிக்கொண்டு விட்டதாகவும், பிறருக்கு தைத்து கொடுக்க நினைத்து இருந்ததாகவும் கணவன் மறுத்து விட்டதால் அதை கைவிட்டு விட்டதாக கூறினாள். கணவன் மறைந்த பிறகு குடும்ப வருமானத்திற்காக தைத்துக் கொடுக்கலாம் என்று தான் நினைத்தபோது தையல் மெஷின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாததால் அதை செய்ய முடியாமல் போனதாக தெரிவித்தாள்.
எனவே தன்னை போல் கஷ்டப்படும் பெண்களுக்கு தையல் மிஷின் வாடகைக்கு கொடுத்தால் அவர்கள் தன் வீட்டிலேயே வந்து தைப்பார்கள் என்பதாலும், தன்னால் தன் மகனை பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதாலும் இதை தேர்வு செய்ததாக சொன்னாள். அருணாவுக்கு நிறைந்த மனதுடன் வாழ்த்து தெரிவித்து அனுப்பினார் வங்கி மேலாளர்.
“தையல் மெஷின் வாடகைக்கு கிடைக்கும்” என்று நோட்டீஸ் அடித்து மக்களிடம் பரப்பி, அருணா தன் தொழிலை இரண்டு மாதங்களில் தொடங்கினாள். இட வசதியும், பொருள் வசதியும் இல்லாத மகளிர் குழுவில் இருந்த பெண்கள் தினமும் அருணாவின் வீட்டிற்கு வந்து தைக்க ஆரம்பித்தனர். இதனால் பொருளாதார வகையிலும் சமூகத்தின் பார்வையிலும் உயர்ந்த மதிப்பை பெற்றாள் அருணா.
ஓர் இழப்பிற்குப் பின் ஊக்கம் கொள்ளும் மனது,
புது ஆக்கத்திற்கும் நன் மதிப்பிற்கும் வழிகோலும்.

No comments:
Post a Comment