Monday, April 18, 2022

       பிள்ளைகளின் நேர்த்திக்கடன்                  

     சிறுகதை by Veena Sankar


  பிள்ளைகளின் நேர்த்திக்கடன் 


                                                         தெருவின் குறுக்கில் இருபக்க வீடுகளுக்கு நடுவே  கூரை  வேயப்பட்டும்,  வீட்டின் இரு பக்கங்களிலும் சிறிது தூரத்திற்கு தட்டி வைத்து  மறைத்தும், மேற்கூரையில் ஆங்காங்கே வேப்பிலை கட்டு தொங்கிக் கொண்டும், வாசல் முழுவதும் மஞ்சள் நீரால்  தெளிக்கப்பட்டும், வெளியே  மக்கள் அமர  நாற்காலிகள் விரிக்கப்பட்டும்  இருந்ததால் அது   தான் மாதவியின் வீடு   என்று மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருந்தது. 


                                    இன்று மாரியம்மன்  கோயிலின் பங்குனி திருவிழாவின் கடைசி நாள் என்பதால் அலகு குத்தி காவடி எடுப்பதும், பறவைக் காவடி எடுப்பதும், தீச்சட்டி ஏந்துவதுமாக ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது.  மாதவியின் வீட்டில் அவளுடைய சொந்த,   பந்தங்களாலும் பக்கத்து  வீட்டுக்காரர்களாலும் நிரம்பி போய் இருந்தது. அவளுடைய இரு பிள்ளைகளும் அன்றையதினம் தீச்சட்டி எடுக்க ஆயத்தமாகி இருந்தனர். வீட்டில் சாமி அறையின் முன் பிள்ளைகள் இருவரும் நிற்க வைக்கப்பட்டு, கழுத்தில் வேப்பிலை  மாலையும், இடுப்பில் வேப்பிலை உடையும் அணிவிக்கப்பட்டு, கையில்  வேப்பிலை கட்டும் திணிக்கப்பட்டது. வீட்டுவாசலில் வைக்கப்பட்டிருந்த   தீச்சட்டியை  அவர்களின் கையில் சாமியாடி ஒருவர் எடுத்துக் கொடுக்க, பெண்களின் குலவை சத்தம் விண்ணைப்  பிளக்க வைத்தது. 


                                          மாதவியின் பிள்ளைகள் சிறு வயதுடையவர்கள் என்பதால் வந்திருந்தவர்கள் மாதவியை வசைபாடினர்.  இந்த சிறு வயதில் இவ்வளவு பெரிய  நேர்த்தியை  செய்ய வேண்டுமா?  என  சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் மாதவியோ அவர்களின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிள்ளைகளின்   தீச்சட்டியில் எண்ணெயை  ஊற்றினாள்.  தீச்சட்டி ஏந்தி சென்ற பிள்ளைகளுக்கு வெப்பம் அடிக்காமல் இருக்க, அவர்களை  குடத்தின் நீரால் அபிஷேகம் செய்தனர்  தெரு மக்கள். சிலர்  குடிக்க  பானகரம் கொடுத்தனர். தீச்சட்டி காற்றில் அணையாமல் இருக்க  சிலர் எண்ணையை சட்டியில் ஊற்றினர். 


                                            இவ்வாறாக தீச்சட்டி ஊர்வலம் இனிதே முடிய கடைசியில் மாரியம்மன் கோவிலை அனைவரும் வந்தடைந்தனர்.    கோயிலை  வலம்   வந்து  தீச்சட்டியை  பிள்ளைகள்  இறக்கி வைத்தனர்.   மாதவியும், நேர்த்திக்கடனை இனிதே முடித்த பிள்ளைகளை உச்சிமுகர்ந்து, மாரியம்மனுக்கு நன்றி  தெரிவித்தாள். 


                                           அப்போது கோயிலில் மாதவியை பார்த்து ஒரு பெண்மணி “ஏம்மா! இவ்வளவு பெரிய நேர்த்திக்கடனை  இந்த சின்ன பிள்ளை களை வைத்து நிறைவேற்றுகிறாய்?   சிறுபிள்ளைகள் தானே அவர்கள்?” என்று கேட்க,  அதற்கு   பதில் சொன்னாள் மாதவி. “நான் தீச்சட்டி எடுப்பதாக வேண்டிக் கொண்டிருந்தேன்.  இரண்டு வருடமாக  இந்த   கொரனா  பெரும் தொற்று உலகையே வாட்டி வதைத்து விட்டது.  அதனால் என் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியவில்லை. இந்த வருடம் நேர்த்திக்கடனை செய்ய முடியுமா? முடியாதா? என்று எண்ணி  மாரியம்மனை வழிபட  கோயிலுக்கு வந்த எனக்கு,    மாரியம்மாவே,  இந்த வருடம்  நீ தீச்சட்டி எடுக்காதே! உன் பிள்ளைகள் எடுத்தால் தான் நான் மகிழ்வேன்.”   என்று    என்னிடம்  நேரே சொல்லியது போல தோன்றியது.  அப்படி சொன்னதும் சற்று தயங்கி தயங்கி நின்றேன்.  “உன் பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். கலங்காதே!” என்று என்னை தேற்றினாள்  மாரியம்மாள்.


                                              அப்போது  என் பக்கத்தில் இருந்த என் பிள்ளைகளும் “அம்மா! இந்த வருடம் நாங்கள்   இருவர் தீச்சட்டி   ஏந்துகிறோம்.   சென்ற வருடம்  உன் உயிரை காப்பாற்றி   தந்த அந்த மாரியம்மனுக்கு நாங்கள் தீச்சட்டி ஏந்தி கடனை முடிக்கிறோம்.” என சொன்ன போது குழந்தைகளின் வாயால்  மாரியம்மாவின் மனதை நான் உணர்ந்தேன்.” என்று சொல்ல கேட்டுக்கொண்டிருந்த பெண்மணியும் மெய்சிலிர்த்தாள்.


                                        பிள்ளைகளின் கையை மேலே கீழே திருப்பியவாறு தீச்சட்டி   ஏந்தியதற்கான சுவடு இல்லாது பார்த்து மனம்  பூரித்தாள் மாதவி. அம்மனே தன்   பிள்ளைகளின்  உருவில் வந்து, தீச்சட்டி   ஏந்தியதாகவும் நினைத்தாள்.  மாதவியின்  பிள்ளைகளில்   ஒருவன் “அம்மா!  அடுத்த   வருடமும்  நாங்கள் தீச்சட்டி ஏந்துகிறோம் என்றான்.  ஆனால் அவன் அப்படிச் சொல்வது எதற்கு என்பதற்கான விளக்கத்தையும் அவனே கொடுத்தான்.


                                           “கொரோனாவால்   பல   உயிர்களை   இழந்து   விட்டோம். இனிமேல் இந்த மாதிரியான பேரழிவுகளை இந்த பூமி தாங்காது.  வாழ்க்கை என்பது ஒரு நாள், தன் நிலை மாறலாம் என மக்களுக்கு உணர செய்ததாலும்,  இனி மக்களில் பாதிப் பேர் பணத்தின் பின்னால் செல்லாமல் மனிதநேயத்தை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் இவ்வுலகைப் படைத்த கடவுள் தான்.  கடவுளை  இதுவரை நேரில் யாரும்  பார்த்ததில்லை.  எல்லா கடவுளும் ஒன்றே.  அவரவர் விருப்பப்படி யாரையும் நாம் வழிபடலாம்.  நம் சக்திக்கு மீறி கடவுள் இருக்கிறார்  என்பதை  உணர்ந்துள்ளோம்.  நம்  மனதிற்குள்ளேயே கடவுள்  இருக்கிறார். முன்பு அது வெளிப்படாமல் இருந்தது.   தற்போது மக்கள் அதை உணர்ந்து, ஏற்றத்தாழ்வுகள் சற்றே மாறி இருப்பதாக நான் உணர்கிறேன்.”  என அவன் சொன்னதை கேட்ட மாதவி, என் பிள்ளை தான் பேசுகிறானா? இல்லை அந்த கடவுள் தான் அவன் உருவில் பேசுகிறாரா? என்று வியந்தாள். நிச்சயமாக அடுத்த வருடம் தன் பிள்ளைகள் தீச்சட்டி எடுப்பார்கள் என்று நினைத்து அன்றிலிருந்தே உண்டியலில் காசு போட ஆரம்பித்தாள் மாதவி.

                                      “உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் மாட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை”  என்ற கூற்றை தன் பிள்ளைகளின் மூலம் மாதவி  மறுபடியும் ஞாபகப் படுத்திக் கொண்டாள்.


                நன்மை என்று தெரிந்தால் அதை செய்ய வயது  ஓர் தடையில்லை.

               கடவுள் ஒன்றே என்று உணர்ந்தால்  நம்மிடம் பகைமையும் இல்லை.


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...