Wednesday, April 13, 2022

யமுனா" சிறுகதை by Veena Shankar


                                  


               
 யமுனா



                                          மாமனார்   மாமியாரை   அனுசரித்துப் போக தெரியாத, நதியின் பெயருடைய யமுனா, அந்த நதி போலவே ஓரிடத்தில் நிற்காது ஓடிக் கொண்டே இருப்பாள். முதலில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தான் யமுனாவின் கணவன் பாலா. அவனுடைய வேலை சென்னைக்கு மாற்றலாக,  சென்னையில் தன் அப்பா அம்மா உடனே தங்கலாம் என்று நினைத்து தன் மனைவியுடன் வந்தான்.  யமுனாவின் சுபாவம் தெரிந்த பாலா, முதலில் தன் பெற்றோருடன் தங்குவதை தவிர்த்தான்.  பெற்றோரின் வற்புறுத்தலால் அவர்களுடனேயே வசிக்க எண்ணினான்.


                                     முதலில் தன் மாமியாரிடம் அந்நியோன்யமாக  இருந்தாள்  யமுனா. ஆறு மாதம் தான் ஓடியிருக்கும். பாலாவின் அம்மாவிற்கும் யமுனாவிற்கும் சிறிய சிறிய உரசல்கள் வந்த வண்ணம் இருந்தாலும், தன் அம்மா தான் விட்டுக் கொடுத்து போகிறார் என்றும்  பாலா தெரிந்து கொண்டான். தன் அம்மா, யமுனாவிற்கு தெரியாததை சொல்லி கொடுக்கிறாள் என்று நினைத்து, அவர்கள் இருவரும் ஒரு சேர இருக்கும் இடத்தில் தான் இருந்தால்    யமுனாவால்  பிரச்சனை வந்து விடும் என்பதால் அவ்விடத்தை  விட்டு  நகர்ந்து விடுவான்.


                         யமுனாவிற்கு எந்த செயலையும் ஒழுங்காக செய்ய தெரியவில்லை என்றாலும் அதை  ஒப்புக் கொள்ளும் குணமும் கற்றுக் கொள்ளும்  ஆர்வமும்  மிக மிக குறைவாக இருப்பதை பாலாவும் உணர்ந்திருந்தான்.  ஆனாலும் யமுனாவின் வாய்க்கு பூட்டு போட முடியாமல் திணறினான். மறைமுகமாக தன் அம்மாவிடம் யமுனாவின் செயலை அனுசரித்து போகுமாறு சொல்ல, தனக்கு மகள் இல்லாததால் யமுனாவை மருமகளாக   நினைக்காமல்,  மகளாகவே   நினைப்பதாக  அம்மா  கூறினாள்.   மேலும்  யமுனா,  சிறு வயது பெண் என்பதால் பேச்சில் துடிப்பும்,  தனக்கு எதிரான செயல்களில் கோபமும் இருக்கத்தான் செய்யும் என யமுனாவிற்கு ஆதரவாக   பேசி, பாலாவிற்கு பாடம்  நடத்தினாள் அம்மா.   தன்னுடைய அம்மாவின் குணத்தை வெகுவாக ரசித்தான்.  மாமியார் அனுசரணையாக நடந்து கொண்டாலும்  யமுனா   தன் மாமியாரை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே  இருந்தாள்.


                                    மென்மேலும்   இது   தொடர்கதையாகவே   மாறவே,  பாலா தன் மனைவியை கூட்டிக்கொண்டு வேறு வீட்டிற்கு போவதாகவும்  தன் மனைவியால் அம்மா படும் கஷ்டத்தை  தன்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தனிக்குடித்தனம் போகும் முடிவினை எடுத்ததாக தன் பெற்றோரிடம் சொன்னான்.  ஆனால் அதற்கு பெற்றோர்,   இதுவெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. நீங்கள் எங்கள் உடனே இருக்கலாம் என்று சொன்னாலும் யமுனா, தனிக்குடித்தனம் போகும் ஆசையில் திளைத்தாள். எல்லா வேலையும் தனக்கு நன்றாக செய்யத் தெரியும் என்ற மிதப்பில்  தனிக்குடித்தனம் செல்ல  தலையசைத்து பச்சைக் கொடி  காட்டினாள்.  அதுவே  தனக்கு பெரும் நிம்மதி என நினைத்தாள்.


                                 ஒருவழியாக   பெற்றோரிடம்   சம்மதம்   பெற்று,    தன் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே வீட்டை வாடகைக்கு பிடித்து    குடியேறினான். இவ்வளவு நாள் எல்லா வேலைகளையும் மாமியார் இழுத்துப் போட்டு செய்ய,  கூட   மாட வீட்டுக் காரியங்களை செய்த  யமுனாவிற்கு, புது வீட்டில் எல்லா வேலைகளையும் தானே செய்ய கஷ்டமாக இருப்பதாக சொல்லி, ஒரு வேலைக்காரியை நியமித்தாள்.  சென்னையில் இப்படி ஒரு வேலைக்காரி  யாருக்கும்  அமைய  மாட்டாள்  என்பது   தான்   உண்மை.   சமையலுக்கு காய் நறுக்கும் வேலை முதல் பலசரக்கு சாமான்கள் வாங்கி கொண்டு வருவது வரை எல்லா வேலைகளையும்  செய்தாள் அந்த வேலைக்கார பெண்மணி. தான்   கஷ்டப்படாமல்   பணத்தை தூக்கி எறிந்தால் ஆயிரம் பேர் வேலைக்கு கிடைப்பர் என்ற நினைப்பில்  யமுனாவும் இருந்தாள். காசிற்காக யமுனா சொல்லும் எல்லா வேலைகளையும் வேலைக்காரி செய்து வந்தாள்.


                                          நாட்கள்  நகர்ந்தன.  வேலைக்காரி,   ஊரில்    தன் மகள்  வயதிற்கு வந்திருப்பதால்  ஊருக்கு போகவேண்டும் என்றும் நான்கு நாட்கள் விடுமுறை  வேண்டும் என்று சொல்லி, கொஞ்சம் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றாள். நான்கு நாட்கள் வீட்டு  வேலைகள்  அனைத்தும் யமுனாவின் தலையில் விழுந்தது. பாலாவும் கூடமாட உதவி செய்தாலும் மேலும் சில வேலைகளை செய்யவும்  யமுனா வற்புறுத்தினாள்.   அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் அவள் சொன்ன வேலைகளை  பாலாவும்  செய்து வந்தான் . 


                                         ஒரு   நாள்  யமுனா,  எப்போதும் போல் காலையில்  காபி போட கேஸ் அடுப்பை பற்றவைக்க, லைட்டர் வேலை செய்யாததால் தீக்குச்சியால் பற்ற வைத்து அடுப்பில்  பாலை வைத்தாள்.  காபி டிகாஷன் முடிந்து விட்டது என்பதால் மற்றொரு அடுப்பை பற்ற வைக்க, பழைய தீக்குச்சியை  தேடியபோது  அது கிடைக்காமல் போகவே, மற்றொரு புதிய குச்சியை தீப்பெட்டிலிருந்து எடுத்தாள்.  மருந்து இல்லாத  முனையில்,  ஒரு அடுப்பில் இருந்து  மற்றொரு அடுப்புக்கு தீயை பற்ற வைத்து,  மறுபடியும் அந்த   தீக்குச்சியை தீப்பெட்டிக்குள் அடைத்து,  ஸ்விட்ச் போர்டு மேல் தான்  தீப்பெட்டியை   வைப்பது அவள்  அம்மா  வீட்டு பழக்கம் என்பதால் அங்கேயே  வைத்தாள்.  


                            தனக்கும் பாலாவுக்கும் காபி தயாரித்த யமுனா , பால்கனியில் அமர்ந்து பாலாவுடன் குடித்தாள்.      பத்து    நிமிடங்கள் கழித்து  சமையல் தயார் செய்ய சமையல்   கட்டிற்கு   வர,  அந்த அறையில் புகை வாடை வந்தது. லேசாக புகைந்து கொண்டிருந்தது.  பதறிப்போய் யமுனா,  பாலாவை சத்தம் போட்டுக்  கூப்பிட்டாள். என்ன  ஆயிற்று என்று தெரியாமல் தடாலடியாக  உள்ளே வந்த  பாலா,  புகையை பார்த்தவுடன் எல்லா  ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்து புகையை வெளியேற்றினான்.


                                       என்ன நடந்தது என்று தெரியாத பாலா, காரணம் புரியாமல் திகைத்து  யமுனாவிடம் கேட்டான்.  ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னாள்  யமுனா. புகை வெளியேறியதும் மறுபடியும் பாலா  சமையலறைக்கு வந்து ஆராய்ச்சி  செய்தான்.  அப்போது சுவிட்ச் போர்டில் புகைந்து கொண்டிருப்பதை  பார்த்து,  மறுபடியும்   யமுனாவை விசாரிக்க,  நடந்ததை கூறினாள் யமுனா.  நீ ஒரு  குச்சியை வீணாக்க  வேண்டாம்   என்று நினைத்து வீட்டையே கொளுத்த பார்த்தாயே? என்று யமுனாவை கடிந்து  கொண்டான் பாலா.


                                  யமுனா, தீக்குச்சி முழுவதுமாக  அணைந்த பின் தீப்பெட்டியில்  வைக்காமல்  அது   எரிந்து கொண்டிருந்த போதே வைத்ததால் தீப்பெட்டி முழுவதும் எரிந்து புகைக்க அதிர்ஷ்டவசமாக சுவிட்ச் போர்டில்  தீ  பரவாமல்  அவர்கள்  இருவரும்  உயிர்  தப்பினர். 


                                     யமுனா தற்போது  தன் தவறை உணர்ந்தாள்.     பாலாவின் வீட்டில் முன்பு ஒருமுறை    அவள் தீப்பெட்டி உபயோகித்து சுவிட்ச் போர்டில்  வைக்க, மாமியார் அங்கே வைக்காதே என்று   சொன்னது தற்போது  அவளுக்கு  நினைவுக்கு வந்தது.  பழைய பழக்கத்தை    திருத்திக் கொள்ளாமல்   மீண்டும் தான்  செய்த அதே  செயலை எண்ணி  வருந்தினாள்.  மாமியாரின் பேச்சை கேட்டு நடந்து கொண்டிருக்க வேண்டும்.  என்ன இருந்தாலும் அவர்கள்  வயதில்  மூத்தவர்கள்.  மேலும்  அவர்கள் அனுபவசாலிகள் என்று நினைத்தும்  கடவுள் புண்ணியத்தில் பெரும் மின்சார விபத்து ஏற்படாமல் இருந்தது என தன் மனதில் நினைத்துக்கொண்டாள்.


                                   அன்றிலிருந்து தூரத்தில் இருந்தாலும் தன் மாமியாரின் சொல்படி நடக்க ஆரம்பித்தாள்  யமுனா.  இந்த நிகழ்ச்சியால் யமுனா, சற்று   பயந்தும் போனாள்.  மீண்டும் மாமனார் மாமியார்  வீட்டிலேயே வாழ்வோம் என தன் கணவன் பாலாவை நச்சரிக்க தொடங்கிவிட்டாள். நதியானது என்றும் ஒரே இடத்தில் நிற்காது  என்பது போல ‘யமுனா’ என்ற பெயர்  கொண்டிருந்தாலும்  ஓரிடத்தில் தங்காது  போலவே? 


காலங்களும் நேரங்களும் சாதகமாகும், அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்தால்.     நன்மை   என்று   நம்பினால்  தவறுகளும்   திருத்திக்  கொள்ளப்பட வேண்டும்.


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...