by Veena Shankar
சிறு வயதில் பள்ளியில் நாம் படிக்கும் காலத்தில் பல சம்பவங்கள் நடந்திருக்கும். எதனையும் முழுமையாக அறியாத பருவம் நம் பள்ளிப்பருவம். குறிப்பாக ஐந்து வயது வரை நடக்கும் சம்பவங்கள் யாவும் நம் நினைவில் நின்று இருக்குமேயானால் இன்றளவும் நினைக்கும் போது இனிமையானதாக இருக்கும். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டேன்.
என்னுடைய ஐந்தாவது வயதில் தான் பள்ளியில் முதல் வகுப்பிற்கு சேர்ந்தேன். எல்லா ஆசிரியைகளுக்கும் என்னை நிரம்ப பிடிக்கும், ஒரே ஒரு ஆசிரியை தவிர. வரலாறு எடுக்கும் ஆசிரியைக்கு என்னை பிடிக்காது. அதற்கு காரணமும் தெரியாது, தெரிந்து கொள்ள முனைப்பு காட்டியதும் இல்லை.
என் தாத்தா உடம்புக்கு முடியாமல் இருந்த சமயம் அவரைக் காண ஹைதராபாத்துக்கு செல்ல வீட்டில் ஏற்பாடாகி இருந்தது. நான் சிறு வயதில் வெகுளியாய் பேசும் சுபாவம் என்பதால் இந்த விஷயத்தை என் ஆசிரியைகளிடம் பகிர, அந்த வரலாற்று ஆசிரியை மட்டும் ருத்ரதாண்டவம் ஆடினார். “நீ எப்படி போவாய் என்று நான் பார்க்கிறேன்” என்று அவர் சொல்ல, எனக்கு அழுகை வந்தது. வீட்டில் வந்து பள்ளியில் நடந்தவற்றைச் சொல்ல, அதெல்லாம் ஒன்றுமில்லை பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும் அடுத்த நாள் மாலையில் ரயில் என்பதால் அடுத்த நாள் மதியம் வரை மட்டுமே நான் வகுப்பில் இருப்பேன். கடைசி வகுப்பு வரலாற்று ஆசிரியைக்கு உரியது. அவரிடம் எப்படி கேட்டு ஊருக்கு போவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, நல்ல வேளையாக என்னுடைய அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக என்னுடைய வகுப்பாசிரியை சொல்ல, என்னை முறைத்தவாறு வரலாற்று ஆசிரியை வழியனுப்பினார்.
வகுப்பு ஆசிரியையிடம் நான் நடந்ததை சொல்ல, அவர் அந்த ஆசிரியை சும்மா சொல்லியிருக்கிறார் என்று சொல்லி சிரித்த முகத்துடன் நான் போக அனுமதி கொடுத்தார்.
“விடுமுறை” மற்றும் “விடுப்பு” என்பதற்கான அர்த்தம் தெரியாத பருவம் என்பதால் ஆங்கிலத்தில் “லீவு” என்ற சொல்லுக்கு இரண்டையும் நாம் பயன்படுத்தி வந்த காலம் அது. ஆனால் “லீவு” என்றால் என்ன என்பதை அறியாத நான், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக என் அம்மாவுடன் முதல் நாளே சென்று விட்டேன். மறுநாள் பள்ளிக்கு செல்வோம் என்ற சிந்தனையில் நான் சென்றிருந்ததால் என்னை பார்த்த அண்ணன்மார்கள் நாளைக்கு நீ ஸ்கூலுக்கு லீவா? என்றனர். “லீவு” என்பதற்கான அர்த்தம் தெரியாததால் ஆம் என்று மட்டும் சொன்னேன்.
மறுநாள் திருமண தினத்தன்று நீ ஸ்கூலுக்கு சிறிது நேரம் கழித்துப் போ என்று அம்மா சொன்னார். முதலிலேயே ஸ்கூலுக்கு போகவேண்டாம் என்று சொல்லியிருந்தால் நான் திருமணத்துக்கு வர மாட்டேன் என்று சொல்லுவேன் என்று நினைத்து அம்மா என்னிடம் சொல்லவில்லை. அது எனக்கு பிறகு தான் தெரிந்தது. திருமண நாளன்று “அம்மா நான் எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு போகவேண்டும்?” என்று அம்மாவை கேட்டு நச்சரிக்க, முதலில் நான் சொன்னதை புரிந்து கொள்ள முடியாதவராய் இருந்த அம்மா, பின்னர் சுதாரித்துக்கொண்டு இன்று நீ ஸ்கூலுக்கு லீவு போட்டு இருக்கிறாய் என்று சொன்னபின் தான் லீவு என்பதற்கான அர்த்தம் விடுப்பு போடுவது என்பது புரிந்தது. முதலில் “லீவு” என்பது ஒரு நிகழ்வு என்றே நினைத்திருந்தேன்.
இதே வகுப்பில் நடந்த சுவையான மற்றொரு சம்பவம் இருக்கிறது. அன்றைய தினம் கணக்கு தேர்வு என்பதால் மாணவ மாணவியர் அனைவரும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். கரும்பலகையில் ஆசிரியை எழுதிப் போட்ட வினாக்களுக்கு, என்னுடைய சிலேட்டில் விடையை எழுதி, முதல் ஆளாக என்னுடைய ஆசிரியையிடம் காண்பிக்க, எல்லாம் சரியாக எழுதி இருந்ததாக கூறி “நூற்றுக்கு நூறு” என்று எழுதி, அதனை சுற்றி வட்டமிட்டு, பக்கத்தில் “வெரி குட்” என்று எழுதியிருந்தார். ஆனால் கீழே (விகுதியில்) நூறு என்பதைப் பிரித்தும், மேலே (பகுதியில்) இருந்த “நூறு” என்பதை சேர்த்தும் எழுதி இருந்ததால், அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் விழித்து நின்றேன். அதனை தொண்ணூறு அல்லது என்பது என்று மாற்றி விடலாமா என்று கூட என் அறிவுக்கு எட்டியது. ஆனால் அதில் உடன்பாடு இல்லாததாலும், இந்த இரண்டு இலக்கத்திற்கு மூன்று இலக்கத்திற்கு வித்தியாசம் தெரிந்து விடும் என்பதால் அழாத குறையாக அமர்ந்திருந்தேன்.
கணக்கு ஆசிரியையிடம் கேட்க கூச்சமாக இருந்ததால் மௌனமாக இருந்துவிட்டு, மதிய உணவு இடைவேளையின் பொழுது என் சகோதரியிடம் என் மதிப்பெண்ணை காட்டினால் அவள் திட்டுவாளோ? என்று நினைத்து சந்தேகத்தோடு காட்டினேன். அவள் அப்பொழுது நூற்றுக்கு நூறு வாங்கி அழுது கொண்டிருக்கிறாயே? “மக்கு!” என்று என்னை திட்டிய பின்தான் எனக்கு சந்தோஷமாக இருந்தது.
நாம் சிறு வயதில் செய்யும் குறும்புகளும் நம் அறிவுக்கு எட்டாத நிகழ்வுகளும் நினைவாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் நகைச்சுவையாகவும் சிரிப்பையும் உண்டாக்கும்.
No comments:
Post a Comment