பாட்டியின் சாதுர்யம் by Veena Sankar
பாட்டியின் சாதுர்யம்
அந்த காலத்தில் பெரியதாக போக்குவரத்து வசதி கிடையாது. எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கால்நடையாகவும் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டி இருந்தது. அடுத்த ஊருக்கு செல்வது என்பதும் சிரமம்தான். நம் மூதாதையர் காசி, ராமேஸ்வரம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு நடந்து சென்றுதான் வழிபட்டு வந்திருக்கின்றனர். அவ்வாறு சென்றவர்கள் சில நேரம் திரும்பி வருவதும் உண்டு வராமல் போவதும் உண்டு. தற்போது நாம் நினைப்பது போல இந்த ஸ்தலங்களுக்கு சென்று வர முடியாது.
அதுவும் இந்த ஸ்தலங்களுக்கு சென்று திரும்பி வந்தவர்களின் எண்ணிக்கை குறைவே. புனித யாத்திரைக்கு சென்று திரும்பியவர்கள், தங்களை காண உற்றார் உறவினர்கள் தனித்தனியே வந்து வாழ்த்து பெற முடியாது என்பதால், ஒரு நாள் அவர்களை அழைத்து விருந்து வைப்பர். அந்நேரத்தில் எல்லோரும் வந்து அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்வர். அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய நிகழ்வாகவே பேசப்பட்டது.
விஞ்ஞானம் கொஞ்சம் வளர வளர, டிராம், ரயில் வண்டிகளும், பேருந்துகளும் ஓட தொடங்கின. அந்த காலத்து பெண்மணியான என்னுடைய கொள்ளு பாட்டியும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவ்வளவு விஞ்ஞான அறிவும், கல்வியையும் பெற முடியவில்லை என்பதே உண்மை.
உள்ளூர் வைபவங்களுக்கு மட்டுமே சென்று வரும் என் கொள்ளுப்பாட்டி, வெளியூர் நிகழ்ச்சிகளில் அன்றுவரை பங்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால், ஒரு நாள் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வெளியூருக்கு அழைத்துச் செல்ல புகைவண்டி நிலையத்திற்கு வந்தடைந்தனர் குடும்பத்தினர். அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடைமேடைகள் இருந்ததால் தாங்கள் செல்ல வேண்டிய ரயில், அடுத்த நடைமேடையில் வரும் என்று தெரிந்ததும், என் பாட்டியால் படியில் ஏறி நடக்க முடியாது என்பதாலும் ரயில்வே தண்டவாளத்தில் அவரை நடக்க வைத்து, அடுத்த நடை மேடைக்கு அழைத்து செல்லலாம் என முடிவெடுத்து, ஒருவர் பின் ஒருவராக நடந்தனர்.
அனைவரும் நடைமேடையில் ஏற, என் பாட்டியை நடைமேடைக்கு ஏற்றும் சமயத்தில் எதிரே ஒரு ரயில் வரும் சத்தம் கேட்டதும் அனைவரும் பதட்டம் அடைந்தனர். கடைசியில் என் பாட்டியால் ஏற முடியவில்லை. அடுத்த தண்டவாளத்திற்கு செல்லுங்கள் என்று சொல்லவும் முடியவில்லை. ஏனென்றால் இரண்டு நடைமேடைக்கும் ஒரே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
அங்கேதான் என் பாட்டியின் சாமர்த்தியம் வெளிப்பட்டது. மெலிந்த தேகம் கொண்ட என் கொள்ளு பாட்டி, தடாலடியாக அந்த இடத்திலேயே ரயில் தண்டவாளத்திற்கு நடுவே நீளவாக்கில் படுத்துக் கொண்டார். அந்த ரயில் , அந்த ரயில் நிலையத்தில் நிற்காது என்பதால் வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. என் பாட்டியோ ரயில் கடந்து சென்ற பின்னால் சாதாரணமாக எழுந்து, மறுபடியும் நடை மேடையில் ஏற எத்தனித்தார். ரயில் வேகமாக வரும் போது ஏற்படும் சத்தத்திற்கும் காற்றுக்கும் என் கொள்ளு பாட்டி ஈடுகொடுத்து படுத்திருந்தது தான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. என்ன நடக்குமோ? என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு என் கொள்ளு பாட்டியின் சாதுர்யமான செயல் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அவர்களின் கேள்விக்கு பதிலாகவும் அமைந்தது.
உயிர் போக வேண்டிய இடத்தில் என் கொள்ளு பாட்டி உயிர் பிழைத்தார். அன்றிலிருந்து அவரை எமனிடம் சென்று திரும்பியவர் என்று எல்லோரும் கிண்டல் அடித்துக் கொண்டு இருந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு உள்ளூர், வெளியூர் என எல்லா பயணங்களுக்கும் மிகவும் பரிச்சயம் ஆகி விட்டார் என் கொள்ளுப்பாட்டி.
விஞ்ஞானம் வளர்ந்தாலும் சாதுர்யமான அறிவும் செயலும் சில நேரங்களில் தனிமனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம்.
No comments:
Post a Comment