அமைச்சர் வாழ்க்கை by Veena Shankar
அமைச்சர் வாழ்க்கை
காலை மணி ஒன்பது மணிக்கு ஒரு கையில் காபியும் மறுகையில் அன்றைய நாளிதழை வைத்து இருந்தார் அமைச்சர் பசுபதி. தேர்தல் நேரம் என்பதால் பரப்புரை மற்றும் கட்சி கூட்டங்களுக்கு சென்று வருவதால் உடலில் அலுப்பு தட்டியது. காலையில் எழுவது தாமதமானாலும் மனைவி கையால் கொடுக்கும் காபியை தான் பசுபதி குடிப்பது வழக்கம். அப்போது கிடைக்கும் சொற்ப நேரத்தில் தான் மனைவியுடன் பேச அவருக்கு நேரம் கிடைக்கும். இன்னும் சிறிது நேரம் கூடினாலும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கோரிக்கைகளை கொண்டு வரும் மக்களும் அவர் வீட்டை நிரப்புவர்.
எது எப்படி இருந்தாலும் தன்னை பார்க்க வருபவர்களுக்கு நேரில் பதில் அளிப்பது தான் அவருடைய பாணி. தன்னால் முடிந்தவற்றை கூடிய விரைவில் முடித்து தருவதும், முடியாத செயலுக்கு முயற்சி எடுப்பதால் தான் நிறைய கோரிக்கைகள் அவரிடம் வந்த வண்ணம் இருக்கும்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஓட்டுப்போட மட்டுமே தெரிந்த கூட்டத்தில் வளர்ந்து, தட்டுத்தடுமாறி தன் பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்தவர் தான் அமைச்சர் பசுபதி. இளம் வயதிலேயே தனக்கென ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டார். படிக்கும் ஆர்வமும் அறிவும் இருந்தாலும் வறுமைப் பிடியில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற கட்சியில் சேர்ந்து, சிறு சிறு வேலைகளை செய்தார். உழைப்பு மற்றும் சொல்வாக்கினால் மட்டுமே அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். கட்சி மேலிடத்தில் இருந்து அதற்கு நிறைய போட்டிகள் இருந்தாலும் கட்சியில் ஒரு சிலராவது மக்கள் வாக்கினை நிறைவேற்ற துடிப்பவர்கள் ஆக இருக்கவேண்டும் என்பதற்காகவும் அதுவும் கட்சியை பலப்படுத்தும் என்ற காரணத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அமைச்சர் பசுபதி.
இவரிடம் சொல்வாக்கு இருப்பதால், மக்களின் செல்வாக்கும் இவருக்கு அதிகம். போட்டியிட்ட முதல் முறையே இவர் வெற்றி பெற்றதால் இரண்டாவது முறையும் தேர்தலில் போட்டியிட உள்ளார். இம்முறையும் நீங்கள்தான் அமைச்சர் என்று தொண்டர்கள் சொன்னாலும் மக்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவில்லை அமைச்சர் பசுபதி.
குளித்து முடித்து, அரைமணிநேரம் சுவாமி முன் தியானம் செய்து, தன் மனைவியின் கையால் சமைத்த காலை உணவினை சாப்பிட்டு, தன் பெண் பிள்ளையை கொஞ்சி விட்டு வீட்டை விட்டு வெளியே இருக்கும் முன் மண்டபத்தை அடைந்தார். மக்கள் கூட்டம் அலைமோத, அவரின் உதவியாளர் “சார்! இப்போதே மணி பதினொன்றை நெருங்கி விட்டது. இப்படியே இவர்களை எல்லோரையும் பார்த்து பேசி கிளம்ப எப்படியும் மணி ஒன்றாகும். அதனால் கூடியிருக்கும் மக்களுக்கு கையை அசைத்து, நாளை வருமாறு சொல்லி புறப்படுங்கள்.” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டார். வந்த கூட்டம் ஏமாந்து போனாலும் நாளை வந்து சந்திக்க சொன்னதால் நிம்மதி அடைந்து கலைந்தனர்.
அமைச்சர் பசுபதியின் கார் வேகமாக வீட்டை விட்டு வெளியே சென்றது. தொகுதி மக்களை பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் தன் தொகுதியை நோக்கி பயணித்தார். பொம்மை கடையிலே கை கூப்பி வருபவரை வரவேற்பது போல மக்களும் அமைச்சர் பசுபதியை வரவேற்றாலும், தானும் அந்த பொம்மையாகவே மாறிப்போனார், தன் கையை கும்பிட்டுக் கொண்டு. வண்டியை தவிர்த்து ஒவ்வொரு தெருவாக பரப்புரை செய்ய நடந்தவாறே சென்றார். அப்போது கூடியிருந்த மக்கள் அவரை போட்டோ எடுப்பதும், போஸ் கொடுப்பதும் ஆக இருந்தனர்.
ஒருவழியாக பரப்புரையை முடித்து மதியம் இரண்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தார் அமைச்சர் பசுபதி. ஏசி காரில் பயணித்தாலும் வெயில் மனிதனை கொல்லுதே என்று நினைத்தவாறே குளித்துவிட்டு, மதிய சாப்பாட்டிற்கு தயாரானார். மனைவி சாப்பாடு எடுத்துவைக்க, “ஏங்க! இன்னிக்கி ரொம்ப களைப்பா இருக்கீங்களே? ஜூஸ் ஏதாவது குடித்திருக்கலாமே?” என்று கேட்க, “அம்மாடி! நீ சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது. நீ கொடுத்த ஜூஸ் காரிலேயே இருக்கு.” என்று பதில் சொன்னார். “இப்போதெல்லாம் நீங்கள் ஜூஸ் சாப்பிடுவதே இல்லை.” என்றாள் அவர் மனைவி.
தட்டில் இருந்த சாதத்தை பிசைந்தவாரே, இத்தனை நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று இருக்கிறோமே? அவர்களது கஷ்டங்களை என்னிடம் சொல்கிறார்களே தவிர யாராவது ஒருவர் தங்கள் வீட்டிற்கு டீ சாப்பிட வருகிறீர்களா? ஜூஸ் சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டதே இல்லையே என அமைச்சர் பசுபதி சிந்திக்க, “சாப்பிடுங்க!” என்று மனைவி அவர் தோளை தட்டியதும், தன் நிலைக்கு வந்தார்.
அது அவரை வெகுவாக பாதிக்க, பக்கத்தில் இருந்த தன் மனைவியை பார்த்து பெருமிதப்பட்டார். இத்தனை நாள் எனக்காக காபி முதல் சாப்பாடு வரை தயார் செய்யும் எனக்கு சொந்தமான, என் மனைவியை, நான் இந்நாள் வரை “ சாப்பிட்டாயா” என்று கேட்டது கிடையாது. அப்படி இருக்க, கட்சியின் மூலம் மட்டுமே பரிச்சயமான அடுத்தவர்கள் என்னை “சாப்பிட்டாச்சா”, “சாப்பிடுகிறீர்களா” என்று எப்படி கேட்பார்கள்? என்று நினைத்து, தற்போது தன் மனைவியை பார்த்து “நீ சாப்பிட்டாயா? இல்லை என்றால் என்கூட உட்கார்ந்து சாப்பிடு.” என்று சொன்னார். ஒரு கணம் திகைத்த மனைவி, “என்ன? இத்தனை வருஷம் கழித்து புதுசா சொல்றீங்க,” என்று கேட்க, தான் நினைத்துக் கொண்டு இருந்ததை தன் மனைவியிடம் பகிர்ந்தார் அமைச்சர் பசுபதி.
“ அட போங்க! நீங்க வேற, படி அளக்குற சாமி கிட்ட அது வேண்டும் இது வேண்டும் என்று பெட்டிஷன் போடுகிறோமே? மேலும் அவருக்கு வேளா வேளைக்கு பிரசாதத்தை படைத்து, அதையும் நாம் தான் சாப்பிடுகிறோம். என்றாவது ஒருநாள் அவருடைய கஷ்டத்தை கேட்டு இருப்போமா? இல்லை அவர் சாப்பிட்டாரா? என்று விசாரித்து இருப்போமா?” என்று பதிலுக்கு அமைச்சரின் மனைவி, அமைச்சரை கேட்டு, சிரித்து, நக்கலடிக்க, இது நாள் வரை என் மனைவி இவ்வளவு நகைச்சுவையாக பேசி நான் கேட்டதில்லை என நினைத்தார். தன் வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காக மட்டுமே செலவழித்ததையும், குடும்பத்திற்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைத்திருந்த தன்னை எண்ணி சற்றே வருத்தப்பட்டார். தன் மனைவியையும் வற்புறுத்தி தன்னுடனேயே அமர வைத்து, மதிய உணவை இனிதே முடித்தார் அமைச்சர் பசுபதி.
பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள் எவராயினும், புகழ் அடைந்திருந்தாலும், தங்களுக்கு பிடித்த செயலை செய்வதாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் தங்களுக்கான நேரத்தை ஒதுக்காமல் இருப்பதும் எதார்த்தமானதே! சில சமயம் தங்கள் மனதில் ஏற்படும் வலியினால், தங்களின் இல்லற வாழ்க்கையையும் திரும்பிப் பார்ப்பர்.
வாழ்க்கையும் நாணயமும் ஒன்றுதான்.
அதை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு.
No comments:
Post a Comment