Friday, February 27, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 பட்டுப் புடவைகளும் 

தங்க நகைகளும்

சீர் வரிசைகளும்

கொடுத்து அனுப்பும்

இடத்தில் 

கண்ணீர் அடைக்கலம் விழியோரம்

பாசம் மட்டும் மனதோரம்  

புதிய இடத்தில்

புதிய ஸ்பரிசத்தில்

புதிய காதலில் 

எல்லாம் மாறும்

பெண்ணின் உள்ளத்தில்

அவள் பிறந்த இடத்தை

நினைப்பதும் மறப்பதும்

கைபிடித்தவன் கரங்களிலே


 பொருள் கொடுத்து

குணம் தேட

வியாபாரம் அல்ல 

இது விவாகம் 

இன்னாருக்கு இன்னாரே 

என்ற சடங்கில்

கொண்ட நம்பிக்கை

 யாவும் புதிதில் 

விரசம் அறியா

மனங்கள் பந்தாட 

பழக பழக

குணங்கள் வெளிப்பட 

அவரவர் தவறுகள் அறியப்படுவதும் 

திருத்தப்படாமல் போவதும்

தானோ வாழ்க்கை?

அல்ல ! அல்ல!

பாந்தமாய் சாந்தமாய்

காதலாய் பாசமாய்

எதுவும் ஒன்றையொன்று

பிணைந்து காட்டுவதே 

திருமண பந்தம்

யார் ஏற்றி விட

யார் வீழ

என்று நினைக்க

போட்டிக்களம் அல்ல

பொதிந்த அன்பில்

பிரிவு கொள்ளா

நிலையில் அனுசரணையால் 

இருவரும் அரவணைக்க

அதில் பெறும் மகிழ்ச்சி

கோடி கோடி

இதை அறியாதவர்

வாழ்வும் தெருக்கோடியிலே

- Veena 

இது சந்தையும் அல்ல,

விலைபோக பொருளும் அல்ல..

ஒத்தை வார்த்தை வரக்கூடாது,

பட்டுப்போனால் தன் காலில் நிற்க 

தந்தவை ...

 இருந்தாலும் அவரின்

 ருசிக்கு எப்படி மாற ...பலவருடம்

 வளர்த்து சட்டென அறுக்க

 நினைத்தால் ,என்ன கொடுமை!

 உணர்ச்சியின் பிடி விலக சாயம்

 போகும்,எதை கொடுத்தும்

 எவரையும் நிரப்ப முடியா...

அன்பை ,பண்பை,உறவை,

பழக்கத்தை சரிபாதி பரிமாற்ற

 நிலைக்கும் பந்தம்,முதலில்

 கர்வத்தை விட எல்லாம்

 சமம்,கல்வியை விட சிறந்தது

 இல்லை சீராக கொடுக்க!

-Vidhya

Thursday, February 26, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya



எவர் வெளிச்சத்தில்

எவர் ஒளிர்வர் 

எவரும் சுடரே!

எவருக்கும் பண்பால்

எவர் வரின் 

எவர் விலகுவர்

பெருந்தன்மையால் 

எவரும் நீடித்திருப்பதில்லை

எவருக்கும் இரவு

 பகல் உண்டு

எவராலும் எவரையும்

புறக்கணிக்க முடியாது

எவர் வழி விதியோ 

எவர் வழி செயலோ 

எவர் வழி சரியோ 

எவருக்கும் அறியாது 


 இருளிலும் ஒளிரும் இருவர் கூட்டணி

ஒருவர் இயற்கையின் மடியில்

இன்னொருவர் மனிதனின் பிடியில்


 வெண்ணிலாவின் ஒளியில் 

மஞ்சள் நிலா

இருவரும் ஒருமித்து ஒளிர கண்டேன்

காதலர் மனம் போலே 

ஒருவன் தானே வருவான்

ஒருவன் மனதில் எழும் காதல் போலே 

இன்னொருவன் வருவான்

சொன்ன காதலை ஏற்பது போலேன் தன்மை அதுவே

- Veena 

ஒன்றின் சுழற்சியை கட்டுப்படுத்த

 முடியும்,அதன் எல்லையை

 தாண்டினால் மறையும்...

மற்றொன்று உல்லாசமாக வலம்

 வரும்,எல்லையற்று பின்

 தொடரும்..

ஒன்றன் நிழலில் மற்றொன்று

இரண்டையும் பிடிக்க முடியா,அவை

 நம்மை பிடிக்க முடியும்!

- Vidhya 

 


Tuesday, February 24, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


விழிகள் ஈர்த்து

காதல் பூக்க

மனம் லயிக்க

கரங்கள் அணைக்க

கண்களில் ஏனோ 

கண்ணீர் மல்க

இதயம் வலிக்க

மார்பில் சாய

காரணம் அறியாது

துணை ஆதரிக்க

இதழ்கள் விரித்து

வார்த்தை வாராது

மங்கை தவிக்க

கேசம் வருடி

நெற்றியில் அவன்

இதழ் பதித்து 

ஆசுவாசப் படுத்த

போர்வீரன் அவன் ஆற்றாமையின் வெளிப்பாடு 

வாழ்வும் காதலும்

தொலைவில் இருக்க

புதுமணம் மட்டும்

மணம் வீசாமல்  

மண பந்தத்தில் தோற்றும் 

அவன் புறப்பட்டான்

 களம் நோக்கி 

வடிந்த நீரில்

தியாகம் ஒளிர்ந்தது

கண் துடைத்து

அவளும் அவனுக்கு

செந்நிற திலகமிட

துக்கம் வெளிப்பட

புன்னகை பூத்தும்

இறுதியில் உறுதியாய்

அனுப்பி வைத்தாள் 

அவனை தானும்

வீர மங்கை என

- Veena 

இது திரையில் வரும் காட்சி

நிஜத்தில் நடந்தால் வரமே

அழுகை க.மு செல்லம் 

க.பி நடிப்பு ..

உணர்ச்சி வசப்படல் பலவீனம்..

பலவீனத்தின் பயம் அழுகை!

அழுகையின் ஆளுமை வலியின்

 வெளிப்பாடு ..

வலிக்காமல் இருத்தல் சாத்தியமா..

- Vidhya 

Monday, February 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எங்கும் பசுமை

ஏங்குகிறது மனம் 

மூன்றும் குளுமை

முயன்றதால் அழகு

ஆங்காங்கே சிவப்பு

அங்கலாய்க்க வைக்கிறது

கதிரவனின் ஒளியில்

கரையும் எவையும்

உயிரும் அங்கே

உயரும் சுவையிலே 

காட்சிகள் நின்றன 

ஆட்சி கொள்ள 

வளர்ச்சி பெருக

கவர்ச்சி கண்களுக்கு

பசிக்காக புசிக்க,

 பிடிக்க எண்ணி

கிள்ளை என் கையில்

கனியோ மரத்தில்

வேண்டியது அகப்படாமல்

வெறுமையாய் திரும்பினேன்


 மரம் சொன்னது கிளியிடம்


"உனக்காக நான் என்றும் நிழலாய்" என்று


கிளி சொன்னது கொய்யாப்பழத்திடம் 


"என் பசிக்காக நீ " என்று 


பழம் சொன்னது இருவரிடமும்


" உங்கள் இருவர நிறமும்" எனக்கு என்று

- Veena

ஆஹா கொத்து கொத்தாக காய்த்து

 தொங்கும்  கொய்யா..

கொய்யாவிலே மயங்கிய கிளிகள்

எதை தின்பது என்று தெரியாமல்..

பசிக்கவும் இல்லை,புசிக்கவும்

 இல்லை!

ஒன்றை சண்டை போட்டு தின்றே

 பழக்கம், பார்த்ததிலே திணற

 கிளிகள்,ஏக்கமாக பார்க்கும்

 கொய்யா!

- Vidhya 




Friday, February 20, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


செல்லும் பாதை கரடு முரடாக இருந்தாலும்

பாதை என்ற ஒன்று

இருந்தால் போதும்

நம் இலக்கை அடைய

ஏணி தான் வேண்டுமென்பதில்லை

ஓர் திறமை போதுமே

எந்த பாதையையும்

பாலமாய் கொண்டு

சிறப்பாய் கடக்க

- Veena 


நிலவுக்கும், நிலமகளுக்கும் நடுவில்... 

நின்ற என்னை 

நோக்கி, 

நட்சத்திரமா ஜொலித்த

நங்கை நகர்ந்தாள்👧 

கையில் விண்மீன்களுடன்✨️


நன்றியுடன் நகர்ந்தன 

நகல் மீன்கள் - தப்பித்தோம்,

 பிழைத்தோம் என்று!

- Akhila 

வானம் உதிர்த்த விண்மீன்களுக்கு

உயிர்கொடுத்து , அவை விண்ணை

 தொட ஏணியிட்டு,கைபிடித்து

 செல்ல ,அதன் நண்பவர் வந்து

 வரவேற்க ,அரங்கேற்றம்!

- Vidhya 


கதை பேசிய இரவுகள் 

காதல் வளர்த்த இடங்கள் 


உன்னை காணவில்லை என்று கேட்கின்றன 

நீ விண்மீனாய் விண்வெளியில் 

மின்னிக் கொண்டிருக்கிறாய் 


நான் வந்து கொண்டிருக்கிறேன் 

எனக் கண்டு கையசை 


முடிவிலா பேரண்டத்தில் 

முற்று பெறாமல் வாழ்ந்திட


—பிரியா

Thursday, February 19, 2026

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


நகரின் பெரிய ஜவுளிக்கடை என்பதால் அங்கே எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தரமும், மலிவும் சிறப்பு என்பதால் நானும் அங்கே செல்வதுண்டு.


இப்படித்தான் ஒருநாள் துணி எடுக்க சென்றேன். அன்று என்னவோ நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு துணிமணிகள் வாங்கி பில் போடும் இடத்திற்கு தள்ளப்பட்டேன் என்பது தான் உண்மை.


 வரிசையில் கால் வலிக்க நின்று பணம் செலுத்தும் இடத்திற்கு வருகையில் எனக்கு முன் நின்ற ஒருவர் "ஹே சிரி"என்றார். நானோ அவர் என்ன சொன்னார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் மீண்டும் அவரை கூர்ந்து கவனித்தேன். மறுபடியும் அவர் அதே வார்த்தையை என்னிடம் சற்று திரும்பியவாறு சொல்ல , தயக்கத்தோடு நானும் சிரித்து வைத்தேன். ஆனால் என் சிரிப்பிற்கான அங்கீகாரம் அவரிடமிருந்து எனக்கு கிடைக்கவில்லை. பிறகு அவர் அலைபேசியை பார்த்தவாறு மீண்டும் அதே வார்த்தை சொல்ல, என் மனதில் குழப்பம். 


எங்கு சென்றாலும் திருவாயை மூடிக் கொள்ளும் பழக்கம் இல்லாததால் அவரிடமே சந்தேகத்தை கேட்க அவர், " மேடம்! இது ஐ போன். இதில் நாம யாருக்காவது கால் பண்ணனும்னா இல்லை ஏதாவது கேள்வி கேட்கணும்னா "ஹே சிரி " என்று சொன்னால் "என்ன? என்று அது கேட்கும், அப்போ நாம சொல்ல வேண்டியதை சொன்னால் அது பதில் சொல்லும்" ன்னு சொல்ல, என்ன டெக்னாலஜி இது என்று முழித்தேன்.


மனிதனை எவ்வளவு சோம்பேறியாக்குகிறது என்பதையும் நினைத்து வருத்தமும் கொண்டேன்.

Tuesday, February 17, 2026

எனக்கு மட்டும் ஏனோ? by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


எனக்கு மட்டும் ஏனோ?


ஒருநாள் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். நான் போடும் தேநீரைக் காட்டிலும் நாயரின் கைமணம் அருமை. அப்போது அலைபேசியில் பேசியவாறே வந்த ஒருவர் தனக்கும் ஒரு தேநீர் கொடுக்குமாறு சைகையில் கடைக்காரரை பார்த்து சொல்ல, நம்ம நாயரும் தேநீர் போட தயாரானார். தேநீர் வரும் வரை பேசிக் கொண்டிருந்தவர் பேச்சின் இடையே "அந்த சோத்துல பாரு! என்று சொல்ல, இல்லையே என்று எதிர்முனையில் பேசியவர் சொல்ல, "நல்லா பாரு சோத்துல தான் எழுதியிருப்பேன். நேத்துக் கூட பார்த்தேனே! நான் எழுதி வச்ச நம்பரை" என்று சொல்ல, வழக்கமாக உருவில் சிறிய மூளைக்கு அதிபதியான நான் சோத்துல இவர் எப்படி எழுதுவார்? என்ற மனக்குழப்பத்தில் இருக்க, "இல்லப்பா! இன்னிக்கி என் பேரன் கடைக்கு வரல, அவன் ரப்பர் வச்சும் எதையும் அழிக்கல" என்றார் . 


இப்போது தான் நான் சுதாரித்துக் கொண்டேன். என் செவிகள் இரண்டும் தொலைவில் இருப்பதை உணர்ந்தேன். மொழியின் அறிவு எனக்கு குறைவே. 


அவர் குறிப்பிட்ட "சோத்துல" என்ற சொல் தூய தமிழில், அதாவது "சுவற்றில்" என்று கொள்ள வேண்டும் என்று என் அறிவுக்கு எட்டியது 


ஏன் ? எனக்கு மட்டும் ஏன்? என்று நகைத்தவாறே நகர்ந்தேன் நான்.

Monday, February 16, 2026

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


தற்போதைய நிலையில் உறவினர்கள் நண்பர்கள் நம் அருகாமையில் இருக்கிறார்களோ இல்லையோ எப்போதும் நாம் அலைபேசியின் துணையோடு தான் இருக்கிறோம்.


மொழியின் புரிதல் என்பது சில சமயங்களில் நமக்கு நகைச்சுவையை உண்டாக்கும். என்னடா சம்பந்தமில்லாமல் சொல்கிறேனே என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. 


இப்படித்தான் இரு தினங்களுக்கு முன் என் கணவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு வர, அலைபேசி என் மகளின் அருகில் இருந்ததால் அவள் "அண்ணனோ நம்பர்" என்று சொல்லி தன் தந்தையிடம் கொடுத்தாள். "ஏய்! அண்ணா தான் இங்கே இருக்கிறானே, பிறகு எதற்கு அண்ணன் அலைபேசியில் அழைக்கப்போகிறான்?" என்று சொல்லி என் கணவருக்கு முன் நான் அலைபேசியை வாங்கி பார்க்க அதில் "அன் நோன் நம்பர்" என எழுதியிருந்ததை பார்த்து பேச்சு மொழியின் அவசரம் தவறாக உணர்ந்தது கண்டும் என் காதில் சரியாக விழாததை எண்ணியும் சிரித்தேன்.


 "அண்ணானோ நம்பர்" என்றால் எங்கள் மொழியில் "அண்ணாவின் நம்பர் " என்று பொருள்.  


இது திரைப்படத்தில் "பிரைவேட் நம்பர்" என்பதை "பார்வதி நம்பியார் " என்று பொருள் கொண்ட வடிவேல் காமெடியோடு ஒத்து போனதை கண்டு ரசித்தே உங்களிடம் நான் பகிர்ந்தேன்.

Sunday, February 15, 2026

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


தூங்கும் போது குறட்டை நம்மிடம் அனுமதி கேட்டு கொண்டு வருவதல்லை. அது அசதியினாலும் ஆழ்ந்த உறக்கத்திலும் வருவதாய் கொள்ளலாம். அப்படி குறட்டை வரும் சமயம் அவர்களை பக்கவாட்டில் ஒருபுறமாக தூங்க செய்தால் குறட்டை வாராது என்றும் சொல்லுவார்கள்.  


குறட்டையில் பல சப்தங்கள் உண்டு. பிறர் தூக்கத்தை பாதிக்காதவரை அதனால் பிரச்சனை ஒன்றும் வாராது.


என் கணவரும் தூக்கத்தில் குறட்டை விடுபவர் தான். ஆனால் அது பெரியதாக என்னை பாதித்ததில்லை. ஆனால் தற்போது அவர் உடல் சுகவீனம் ஆனதால் அவர் மருந்துகள் உட்கொள்வதால் ஏனோ நாளுக்கு நாள் அவர் குறட்டை யின் சப்தம் அதிகமாவதுடன் அதில் சில நேரம் சங்கீததம், சந்தம் எல்லாம் வருகிறது. அதனால் என் உறக்கம் கெடுகிறது என்றாலும் அதை அவரிடம் அளவுக்கு அதிகமாக சொல்லி அதனால் அவர் மன வேதனை அடைவார் என்று நினைத்து நான் இதைப்பற்றி பெரிதாக அவரிடம் சொல்வதில்லை. ஆனால் அவரை கிண்டல் மட்டும் செய்வேன்.


 இப்படித்தான் ஓர் நாள் தூங்க போகும் முன் கிண்டலுக்காக நான் அவரிடம் "குறட்டை விடமாட்டேன் " என்று உறுதிமொழி எடுக்க சொன்னேன். அவரும் "ஆம். இனி குறட்டையை விடமாட்டேன் " என்று சொல்லி சிரித்தார். ஆனால் அதன் பொருள் விளங்காமல் முழிக்க, " ஆம். நான் குறட்டையை (கை) விடமாட்டேன்" என்று நக்கலாக தான் சொன்னதாக விளக்கம் சொல்ல, அவருடைய சொல் அறிவை பாராட்டினேன். 


எதை விட்டாலும் குறட்டையை விடாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவர் குறட்டை விடுவதை சுட்டிக் காட்டினேன். இது தெரிந்து வருவதல்ல. அறியாமல் செய்யும் செயலில் குறட்டையும் ஒன்றே!

Friday, February 13, 2026

வாரிசு by Veena Shankar

 



வாரிசு 


எழுத்தின் வாரிசுகள் வார்த்தை


வார்த்தையின் வாரிசுகள் வரிகள்


வரிகளின் வாரிசுகள் பத்திகள்


பத்திகளின் வாரிசுகள் படைப்பு


படைப்புகளின் வாரிசுகள் புத்தகம்


பு த்தகத்தின் வாரிசுகள் தொகுப்பு


தொகுப்பின் வெளிப்பாடே நூல் நிலையம்


நூல் நிலையங்களின் வாரிசுகள் வாசகர்கள்


வாசகர்களின் வாரிசுகள் தோன்றும் அறிவு சிந்தனைகள்


அதன் வாரிசு தான் எழுத்தின் துவக்கம்

Thursday, February 12, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பூவையின் கையில் பூங்கொத்து

எவர் பெற காத்திருக்கிறது?

வருபவன் பூங்கொத்தை பற்றாமல்

பூங்கொடியை பற்றுவான்

அழகின் சிரிப்பை

தவற விடுவாரோ?

மனதின் சிறப்பை

அறியாமல் இருப்பாரோ?

காதலின் வெற்றி 

சேர்வதில் மட்டுமல்ல

இணையாமல் போவதிலும் உண்டு

எங்ஙனம் என்ற வினாவிற்கு

விடையும் உண்டு

காதல் என்றும் விலகி நிற்குமே 

தவிர அழிவதில்லை


 பெண்ணோவியம்

 நிஜத்தில் அல்ல நிழலாய்

நிஜம் விலகி நிழல்

பேசுகிறது

பார்வைக்கு அழகாய் இரு

கேள்வியில் அறிவாய் இரு

நிஜத்தில் கர்வமாய் இரு

பெண் என்றாலே

நிஜத்தில் நிழலாய்

நிழலில் நிஜமாய்

வாழ்பவளே!


ஆணின் கைவண்ணத்தில் 

அவன் காணும் காட்சியில் கூட

பெண்ணை சிரிக்க வைத்தே

காட்டுகிறான்

பூவிதழின் மொழி

 மலருக்கு தெரியுமோ?

ஆனால்

ஆணிற்கு தெரியும்

பூப்பாவையின் மொழி

என்றும் அவள் இனித்திருக்க 

தான் ரசித்து நிற்க

ஓர் வழி அவள்

உள்ளத்தில் என்றும்

நிறைவாய் நிற்பதன்றி

வேறொன்றுமில்லை

- Veena 

இவள் பொம்மையோ

கைவண்ணத்தில் முளைத்த

 தேவதையோ..

மஞ்சள் வண்ண கார்குழலியின்

 கண்கள் சிமிட்டி சிமிட்டி பேச,

 பூக்கள் வெட்கப்படுதே! 

- Vidhya 



Wednesday, February 11, 2026

படமும் கருத்தும் by winmeengal



பணம் என்றும் கனமே!அது மிகின் வராதோ தலைக்கனம்?!


இது தலைகீழ் ஆயினும்-

மதிப்பில் குறையுண்டோ?!


பல சமயங்கள்- இவன் வருவான் - பிம்பம் எழ;

சில சமயங்கள்- இவன் வருவான் -மனிதம் வீழ!


எது எப்படியோ, 

இவனன்றி ஓரணுவும் அசையாது!!!!

- Akhila 


 செல்லாக் காசானாலும் நான்

 உயிர்த்திருப்பேன் அருங்காட்சியிலே


 நாணயமும் நாணுதோ ?

ஓர் பக்கம் காட்டி 

மறுபக்கம் மறைத்து

தன் மதிப்பிழந்ததோ?

சட்டைபையில் இல்லாவிட்டால்

சட்டமும் மதிக்குமோ?

எவர் வாழ நாணயத்தின் ஆட்டம்

நாணயம் இழந்து தவிக்கும் ஞாலம்


 விசையினால் நின்றதோ ?

பசையினால் நின்றதோ?

- Veena 

நாணயத்திற்கே  நாணயம் கற்று

 தரும் உலகு!

பெரியவனுக்கே மதிப்பில்லை இந்த

 சின்னவனின் தேவையின் போது,

இக்கட்டில் கைக்கொடுப்பான்..

காகிதத்தை விட இந்த ஒற்றை

நாணயனே நாயகன் குழந்தை

 முதல் பெரியவர் வரை,

எல்லோரும் தன்னிடம்

 ஏந்தியவருக்கும் ,தாம் ஏந்திய

 இடத்திலும் அன்பாக

 பரிமாறாக்கூடியவன்,

சபையில் பல பூஜ்ஜியகாரருக்கு

 கனம் கொடுப்பவன் !

- Vidhya 

Tuesday, February 10, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இதழ்களின் முத்தம்

விடுக்கவில்லை சத்தம்

இதழ்களில் சலனம்

ரசிப்பவர் பார்வை சரணம்

எங்கே காதல் என்பதல்ல

எதனுடன் என்பது பொருளே!

நீரில் பயணம் அடங்கியது தாகம்

வண்டினங்கள் மட்டும் 

காதல் கொள்ளுமோ

பூக்களிடத்தில்?

சரியான நேரம் 

சொல்லும் அமைதியான முறையில் 

காதல் கொள் என்று

- Veena

அழகோ அழகு

மெதுவாக அசைந்து

 மெல்ல இதழ் திறக்க 

மணிக்கணக்காக காத்திருந்த 

தருணம் இதுவோ,

பூமியே மயங்கி கிறங்க 

நாம் யார் வசம்

கண்போரின் கண்கள் விரிய 

மெல்ல விரிந்த இரு உள்ளம்,

நீரில் மூழ்கின பிம்பம் 

பிரபஞ்சத்தை இழுக்குதே!

- Vidhya 

Monday, February 9, 2026

படமும் கருத்தும் by winmeengal



அடையாளச் சின்னங்கள் - 

ஒன்று பார்வை குறை தீர்க்க;

ஒன்று ஆண்மை 

கெத்து காட்ட!


குறையும், நிறையும் 

கை கோர்த்தால்- 

இரண்டுமே அழகு தான் - 

பிறரிடம் மரியாதையும்,

சமத்துவ எண்ணம் கொண்ட மகற்கு!!

- Akhila 


 ஆண் மகனின் அடையாளம்

இப்போது அழகு நிலையங்களில் மட்டும்


 ஆண்களின் உச்ச கட்ட அழகு சாதனம்

கறுப்பு கண்ணாடியும்

முறுக்கு மீசையும்


கறுப்பு யாருக்கும் தராது வெறுப்பு

பார்வை என்றும் கண்ணின் பொறுப்பு

கண்ணாடி அழகே எதிரே 

காணும் காட்சிக்கு

அவரவர் பார்வை காட்டும் காட்சி ரகசியமாய் 

மனதில் அடக்கம்

இவனும் மீசைக்கார நண்பனுடன் சேரும்

போது முகமும் ரம்மியமே!

அடர்த்தியான மீசையும்

பார்வைக்கு அழகே!

சில நேரம் பாவைக்கும் 

ஈர்ப்பு தருமே!

மீசையில்லா பாரதியும்

கண்ணாடி அணியா காளையும் எதிரே

 நின்றாலும் வீண் தானே

கன்னி பெண்களிடத்து!

- Veena 

இக்கால பாரதியோ !

அவருக்கும் கண்ணாடி போட்டு

 கண்ணை மூட

 சொல்லுக்கின்றனரோ!

மீசை என்றால் பாரதி

இன்று பூனைக்கும் மீசை உண்டு

ரோஷம் இல்லா வேசம் போட

அதுவும் பொய் மீசை பொல்லாதது!

- Vidhya 

Friday, February 6, 2026

படமும் கருத்தும் by Winmeengal



 செதுக்குவது சிறப்பு;

அதனினும் சிறப்பு- ஆர்வத்துடன் கற்பது!📚


உருவாக்குவது உயர்வு;

அதனினும் உயர்வு-

உயர தயாரா இருப்பது!

🕊


அக்கால சிறப்பும், உயர்வும் 

இக்கால நுண்ணறிவு யுகத்தில்.....தலைகீழ்!🙃


இந்த தலைமுறை 

வைரமாகத் தயாரா?

உளியின் வலியைத் தாங்கத் தயாரா?

சிந்திக்கிறேன்🤔

நிந்திக்கிறேன்😫

மௌனிக்கிறேன் 🤐

- Akhila 


 சுத்தியலின் 

அழுத்தம் தாங்கவே உளி

உளியின் முனை தாங்கவே கல் 

கல்லின் திடம் கொண்டே சிற்பம்

சிற்பமும் வடிப்பவனின் திறன் கொண்டே 


அழுத்தத்தின் ஊடே

பிறக்கும் கலை

ரசிப்பவனின் கண்களுக்கே


 குடைவதில் வலி யாருக்கு?

பாறைக்கா?

இரு பக்கங்கள் வலி 

தாங்கும் உளிக்கா ?

அதை உருவாக்க 

நினைக்கும் மனிதனின் கரங்களுக்கா?

- Veena 

கல்லும் பூக்கும்,மின்னும் கல்வி

 எனும் உளி கொண்டு செதுக்க,

கடுமையான பாறையை செதுக்க

 வலுவும்,கூரிய உளியும் தேவை

 அதை முறையாக கல்வி கொண்டு

 பட்டைதீட்ட ,வைரமாக ஜோலிக்க

 சிந்திப்பீர் ,வலிக்காமல் சிலையும்

 உருபெறாது ,வியர்வை சிந்தாமல்

 சில்லறையும் கிடைக்காது..

- Vidhya 

Thursday, February 5, 2026

படமும் கருத்தும் by Winmeengal

 


பெண்ணே...

கனவில் பிறந்து கண்ணில் நுழைந்தாய்!


கண்ணே...

விண்ணில் நனைந்து 

மண்ணில் கலந்தாய்!


பறக்கும் அனைத்தும்

தரையிறங்கியே தீர வேண்டும்!!!


நியூட்டன் விதி மட்டுமல்ல- 

கர்மாவின் நியதியும்,

கர்வத்தின் நீதியும்,

இயற்கையின் நியதியும் அதுவே!!!

- Akhila 


 பட்டாம்பூச்சியாய் விரிந்தது

அவள் கனவுகள்

பூச்செடிகள் நிறைந்த தோட்டத்தில் மட்டுமல்ல

உயர் வானில் 

பறக்கவும் ஆசையே அவளுக்கு 

தோட்டத்து வண்ண

 செடிகள் போல

அவள் பல நிறங்களாய் 

உருப்பெற்றாள் 

எத்தனை வடிவம் எடுத்தாலும்

அவள் மனம் 

ஓர் குழந்தையே!

சந்தர்ப்பத்தின் ஊடே

அவள் கொள்ளும்

குணமும்

அவள் மனப்பிரதிபலிப்பு அல்ல

அவள் நிலை எவர் 

கொண்டாலும் அக்கணமே உணர்வர் அவர் தம்

தவறை

தவழும் போது நடக்கவும்

நடக்கும் போது ஓடவும்

ஓடும் போது தாவவும் 

தாவும் போது உச்சியை தொடவும் அறிந்தவள்

 அவள் அன்றி 

வேறு எவர்?

- Veena 

பறக்க துடிக்கின்றன கண்கள்

பறக்க பறக்க பட்டாம்பூச்சியாக

 பறக்க பறக்க வண்ண தூரிகை

 கொண்டு கோலமிட வட்டமாக

 வட்டமாக சுழலும் விழிகள் விதிகள்

 இல்லா வழியை தேட

 விழி திறக்க

 வழியும்  பிறக்க

 பறக்க தோணுதே!

 - Vidhya 


Wednesday, February 4, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தெருவோர வித்தை போல்

ஆடியது நெஞ்சங்கள்

காதலால்

வித்தை முடிந்து கீழிறங்கிய பின்னே

காசு கேட்கும்

வித்தை போல்

காதலும் கேட்டது

விலைமாதுவின் வாழ்விற்காக

விலை கொடுத்தவனின் உணர்ச்சிக்காக


ஆனந்தம் எங்கே?

ஊசலாடும் கயிற்றிலா?

கழுத்தில் ஏறிய கயிற்றினாலா?

எங்கும் கரங்கள்

மட்டும் விரிக்க

அடைபடுவதும் எதுவோ?

வாழ்வும் வழியும் ஒன்றானால்

அன்பும் அரவணைப்பும்

ஒன்றாகும்

எதுவும் கடமை

இங்கே

வயிற்று பசியாற்ற 

ஒன்று

உடல் பசியாற்ற மற்றொன்று

இரண்டிலும் 

அடைபட்டு நின்றது

இளகிய மணமுடைய 

பெண்ணினமே!

- Veena 

ஒரு சாண் வயிற்றுக்கு காட்டிய

 வித்தை,ஆட்டம் முடிந்ததும்

 கலைந்த கூட்டம் ,தினம் தினம்

 படும் வேதனை,என்று கழியுமோ

 இந்த கோலம் ,உடலிலும்,

மனதிலும் வலுவுள்ள

 வரை,நம்மோடு முடியட்டும் இந்த

 ஆட்டம்,யாருக்கும் வேண்டாம் இந்த

 நிலை!

- Vidhya 

Tuesday, February 3, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


இலையிலும் பசியாற்றும் 

இலையும் பசியாற்றும்

ஆற்றும் இடம் மட்டும்

உள்ளே வெளியே


ஆட்டம் முடிந்தால்

 ஓட்டம் விடும்

ஆட்கள்

உறவில் மட்டுமல்ல

உண்ட இடத்திலும்


 பசிக்கான உணவு

இங்கே

ஆடம்பரமானதால் 

பசியாற்றியது பந்தி 

முடிந்த பின்னும்

குப்பைத் தொட்டியை

எதிர்ப்பார்த்து நிற்கும் 

உயிர்களுக்கு


 உறவுக்கு கை

 கொடுக்கும் நிலையில்

உதிர்ந்த இலைகள்

அதே உறவின்

மரியாதை எனும் பிரிவினையால்


பசி உண்டோ இல்லையோ 

முந்திட வேண்டும்

இங்கே

ஏமாற்றத்தை தடுக்க

பதார்த்தங்களின் அணிவகுப்பில்

பந்தி இலையும் 

அழகானது

உண்ட பின் மட்டும் 

முரண்பாடு

காரணம் அறிய 

என்னுள் கேட்டேன்

ஒரு சாண் வயிற்றில்

கொள்ளும் அளவு

மட்டும் மிகையோ?


 மண் தரையில் அமர்ந்து

பந்தியில் 

தலை வாழை இலையில்

சோறு இட்டு

பந்தங்கள் ஒன்று

 சேர அமர்ந்து

வாய்ச் சொல்லில் 

வென்று வெற்றியாளனை 

கண்ட இடம் இதுவே

முன் கண்ட காலம்

அல்ல இது

அவசர கதியில்

வருகை பதிவினையும் கொடுத்து

ஓட்டம் எடுத்து

பந்தயத்தில் வெற்றி

பெற நினைக்கும்

பந்தயக் களமும் இதுவே

- Veena 


லை வாழை

-தமிழரின் விருந்து ராணி👸


என்றும் இவளுக்கு நாங்க ஜொள்ளு விடுவோம்😂


இன்றும் இவளுக்கு

பல விதம்- பல ரகங்கள்

மேக்கப் போடுவோம்🥰


மேசைக்கு வருமுன் 

அமோகமாக கொண்டாடுவோம்🥳


காரியம் ஆனபின் தூக்கி எறிவோம்- 

பல வடிவங்களில்,

பல வண்ணங்களில், ப்ளாஸ்டிக் சிங்காரியை ரசிப்போம்- ருசிப்போம்😅

நாங்க அப்படித் தான்😎

- Akhila 

உறவை ,குணத்தை  வாழையில்

 வைத்தவனே ,வாழையடி வாழை

 என்றான்..

பந்திக்கு முன் அவசரம் ,ஆவல்,பசி

 ருசியை மறக்க ..

பின் வயிறு புடைக்க,போனது

 வந்தது காதில் ஏற,மண்டை

 வெடிக்க,புத்தி மந்தமாக, 

கைகழுவிய கையோடு,

சொல்லாமல் சென்றபந்தம்..

-   Vidhya 



Monday, February 2, 2026

படமும் கருத்தும் by Winmeengal

 


செல்லாக் காசுகள் 

தரையில் இருந்தால் என்ன

கையில் இருந்தால் என்ன?


நகரும் வாழ்விற்காக

ஓடும் மனங்கள்


 வாக்காளர்களின் இடத்தில் தஞ்சம் கொள்ள 

இருந்த நோட்டுக்கள் இங்கே

அமைதியாய் சிரிக்கின்றன 

அல்லோலப்படும் என் நிலையை

எண்ணியாவது திருந்துங்கள்

மனித மனங்களே என்று


எதற்கும் மதிப்பில்லை

இவனுக்கு அல்லாது

இவருக்கே மதிப்பில்லை

என்றாகும் போது

எதற்கு மதிப்பு கொடுக்கும்

இவ்வினம்?

அன்பு

பாசம்

மனிதநேயம்

மட்டுமே என்றும் வெல்லும்


எவர் வாழ நீ இறந்தாய் பணமே?

எதை இழக்க நீ மறந்தாய் மனமே?

பிறப்பு உண்டெனில்

இறப்பும் உண்டு

காலம் மட்டுமே

நிர்ணயயிக்கும் 

இதை


 பாராட்டி 

தாலாட்டி 

சீராட்டி 

வளர்த்தவனை

தெருவில் விட்டாயோ?

அவனை என்ன பாடு தான் படுத்தினாயோ?

இல்லத்தில் இடம்

கொள்ளாமல் 

இடம் மாறி இறைந்து நின்றாயோ?

களவாடும் கள்வன்

இல்லை என்பதால்

சிரித்து வீழ்ந்து

கிடந்தாயோ?


இல்லை


உன் வருகையால்

மனித நேயம் மறந்து

மன நிம்மதி இழந்து

உன்னை அனாதையாக்கினானோ?

கொண்ட வரை 

போதும் என்ற எண்ணம் கொண்டானோ?

உன் பின்னால்

மடத்தனமாய் ஓடி

மந்தியாய் மாறியதால்

உன்னை வீசி

எறிந்தானோ?

வாரி கொடுத்தும் 

இருக்கை கிட்டாமல்

போனதால் உன்னை

கை விட்டானோ?


இருக்கும் இடத்தில் மதிப்பு

இல்லாதவனிடத்தில் தவிப்பு

இதுவே வாழ்வின் அமைப்பு

கொள்ளவும் கொண்டாடவும்

வேண்டுமோ இவனை?

- Veena 


!!மனிதர்கள் தேவை!!


பணம் ருசிக்க, செல்வம் சுவைக்க,

அன்பின் பாதையில் சலிப்படைந்தோர், உடனடியாகத் தேவை!!


அனுகவும்:


செல்வராஜா,

அம்பானி இல்லம்,

கோடீஸ்வரர் தெரு,

குபேரன் நகர்,

சீனப்பட்டினம்.

- Akhila 

உழைத்தவருக்கோ அது சொந்தம்

 இல்லை

சொந்தமானவருக்கு செலவழிக்க

 உரிமையில்லை,மொத்ததில் அது

 குப்பை,அதை திங்கக்கூட முடியாது

 என்று எந்த கழுதையும்

 சீண்டவில்லை!

பணம் குப்பையிலே உழைப்பு

 அடகுகடையிலே எதைக்கொண்டு

 மீட்க விட்டதை!

எல்லாம் டிஜிட்டல் மயம்

திருடக்கூட என்ஜினியரிங் படிக்க

 வேண்டுமோ,அங்கு இருந்து தானே

 வந்தேன் இனி ...மரத்தை நடு!

- Vidhya 




இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...