பால்காரர் பால் ஊற்றும் சமையம் பார்த்து
வெள்ளி பாத்திரம் போல் பள பளவென தேய்த்து வைத்திருக்கும்
பித்தளை வடிகட்டியை
அதன் இடத்தில் அமர்த்தி
ஆட்களுக்கு தகுந்தாற் போல் மூன்று நான்கு தேக்கரண்டி காபி பொடியை அதில் இட்டு
ஒரு தம்பளர் சூடான கொதி நீரின் பாதியளவை வடிகட்டியின் தலையில் கொட்டி
அதன் வாயை மூடியால் மூடி
காபி பொடி சுடுநீரை சற்றே இழுத்து கொள்ளும் வரை அமைதி காத்து
மீதி இருக்கும் சுடுநீரை ஊற்றி வைக்க
அதற்குள் காபியின் மணம் மூக்கை துளைக்க
தானாக பிறந்த உமிழ்நீரும் நம் உணர்வை தூண்ட
அந்நேரம் பால்காரரின் மணி சத்தம் கேட்டு பால் வாங்கி வர ஓட
அப்பொழுதே கறந்த பால் ஆனதால் அதன் சூடும் நம் கையில் ஐக்கியமாகும் வரை காத்திருக்க
அந்த பாலையும் அடுப்பில் ஏற்றி உயிர் கொடுக்க
காய்ச்சும் போதே பசும் பாலின் நல்வாடையும் காபி தண்ணீரோடு இணைய
இருமுறை வடித்த காபி தண்ணீரை மற்றொரு கிண்ணத்தில் ஊற்ற
பால் பொங்குவதற்குள் அதை பல முறை கரண்டி கொண்டு கிளறி விட
பாலும் பொங்கி தன் வேலையை திறம் பட செய்ய
சூடு ஆறுவதற்கு முன் அதன் மேல் படிந்திருக்கும் நுரையையும் பாலடையையும் விலக்கி விட
பாலிற்காக காத்திருந்த
பித்தளையில் செய்த தம்பளர் மற்றும் அதன் இணையான வட்டையும் மேடை மீது முன்னமே ஆசனம் பிடித்து தன்னை நிரப்பிக் கொள்ள
வட்டையில் பாலும் மெல்ல மெல்ல அதன் இடத்தை முக்கால்வாசி அடைத்து நிற்க
இரு முறை வடிகட்டி சேகரித்த அந்த அடர் வண்ண காபி தண்ணீரை ஊற்ற
மீதியிருந்த இடத்தை அடைத்துக் கொண்டு சிறிது நுரையோடு மேலெழும்ப
அந்த காபி மணம் அறையை சுற்றி வர
ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் உயிர்த் தியாகம் செய்து அதில் கரைய
தம்பளரில் உள்ள காபி வட்டைக்கு இரு முறை இடம் மாறி மீண்டும் தம்பளரில் அடைய
அதன் பின் ஒரு தேக்கரண்டி பாலின் நுரையை மட்டும் தம்பளரின் நடுவில் பரவ விட
அதுவும் காணாது என்று மீண்டும் ஒரு முறை காபி தண்ணீரை நடுவில் ஊற்றி அழகுபடுத்த
அதன் நிறம் மற்றும் மணம் காபி குடிக்காதவருக்கும் அதன் அலங்காரம் பிடித்து போய் தங்கள் நாவினை வெளியே நீட்டி உதட்டை நனைக்க
பிற காட்சிகளெல்லாம் அந்நியப்பட்டு தம்பளரில் மட்டுமே நம் கண்கள் லயிக்க
வேகமாக சென்றால் காபி துளிகளை இழக்க நேரிடும் என்ற மனபாவத்தோடு நம் கால்களை மெல்ல செல்ல மூளை பணிக்க
அதை பொறுமையாய் ருசித்து அருந்த நினைக்கும் நாம்
அறையின் ஓரத்தில் இடம் பார்த்து நாற்காலியை முன்னிழுத்து
இடக்கையில் தம்பளரையும் வலக்கையில் வட்டையில் காபியை ஊற்றி
தனியேவும் அமர்ந்து குடிக்கும்
சுகம்
ஆனந்தம்
திருப்தி
அமைதி
என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் தகுமே காபியின் சுவைக்கு
என்றும் நான் அடிமை

No comments:
Post a Comment