காலை மலர்
இன்று அதிகாலை என் கண்கள் மலர்ந்ததும் காதில் கேட்டது சுப்ரபாதம் அடுத்த வீட்டிலிருந்து. எதைப்பற்றியது என்று என் காதுகளை அந்த வீடு வரை நான் நீட்டிக்க, அதில் தோல்வியே மிஞ்சியது.
கடமைகள் முடிந்து தனித்திருக்கும் கணவன், மனைவி இருக்கும் வீட்டிலும் சண்டை வருமா? மனைவியின் சப்தம் விண்ணை பிளக்க, அடக்கி வாசித்தது கணவனின் குரல். அடக்கி வாசிப்பதால் கணவன் தான் தவறு செய்திருப்பார் என்று முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் பொதுவாகவே அவர் குரல் பூனையின் "மியாவ்" சப்தத்தை போன்றது. மனைவியின் சப்தமோ சிங்கத்தின் கர்ஜனை போலிருக்கும். எனக்கும் இந்த அனுபவம் அவரிடம் உண்டு என்பதால் இந்த விசயம் எனக்கு தெரியும்.
பேசும் போது ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். சிலநேரம் நானும் அவர் பேச்சை ரசித்ததும் உண்டு.
இப்படியே நேரம் கழிய, ஓசை அடங்கியது. மனைவியிடம் கணவன் ஒடுங்கியதால் வந்த விளைவு என்று நினைத்தவாறே, பால் வாங்குவதற்காக என் வீட்டு வாசலில் வந்து நான் நிற்கவும் கணவன் ஒரு பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போதும் அவரை மனைவி விட்டபாடில்லை.
" போங்க! போங்க! எத்தனை நாள் தான் பொண்ணு, பையன் வீட்டுல இருப்பீங்க? என்று பார்க்கிறேன். மறுபடியும் இங்கு தானே வந்தாகனும்." என்று கூப்பாடு போட்டு கணவரை குழப்பியும் விட்டார்.
அங்கே நின்றுருந்த என்னை கூடப் பார்க்காமல் தலை குனிந்த படியே சென்னை பேருந்து பிடிக்க சென்றார் அம்மனைவியின் கணவன்.
நான் நிற்பதை பார்த்த மனைவி, எனக்கு விசயம் தெரிந்து விட்டதாக எண்ணி, சண்டைக்கான காரணத்தை என்னிடம் பகிர வந்தார்.
எல்லாம் சரிதான். ஊருக்கே தெரிந்த மனைவியின் சப்தம், எனக்கு மட்டுமே தெரிநதிருக்கிறது என்று மனைவி நினைக்க காரணம் என்ன? என்ற கேள்வி என்னுள் எழுந்தது உண்மை தான்.
இருந்தாலும் தன் வேதனையை என்னிடம் எப்போதும் கொட்டும் மனைவியை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.
" பாரும்மா! போன வாரம் வாரம் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு போயிருக்கிறார். ஏன் சொல்லாமல் போனீர்கள்? " என்று தான் கேட்டேன். அதற்கு பதில் பேசவில்லை.
" சரி , போனது போனீர்கள் உங்கள் அலைபேசியையாவது எடுத்துக் கொண்டு போனால் என்ன? நானாவது போன் செய்து நீங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வேன் தானே? என்று ஒரு கேள்வி தான் கேட்டேன். மறுபடியும் பையை தூக்கி கொண்டு கிளம்பிட்டார்." என்று சொல்ல, நான் பதில் பேச நினைத்தும் வாயடைத்து நின்றேன்.
கணவன் மனைவி சண்டைக்குள் நுழைவது அநாகரிகம், அது சந்தைக்கு வரும் வரை என்பதை நான் தெரிந்து வைத்திருந்ததால்.
நீங்கள் எப்படி?

No comments:
Post a Comment