Saturday, March 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar:

 யார் மடியில் உறங்கி

யார் மடியில் இளைப்பாறி

யார் பிடியை உணர்ந்து

யார் உறங்க இந்த இருப்பிடம்

சாதனைகள் கொள்ளாமல் போனாலும்

வேதனைகள் ஒருமித்து ஆட்கொண்டாலும்

எவரும் விரும்பார்

தன் உடல் மண்ணில்

உறங்க

குழியில் புதையும் முன் 

ஓர் புதிய சரித்திரம்

படைக்க வேண்டும்

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே

சிறப்பும் வேண்டும்

ஆறடி தேடும் ஆறறிவு

புதைந்தால் வரலாறு

உரைக்கும் 

நம்முள் புதையுண்ட

எண்ணற்ற கதைகளை

எதுவும் நாம் கொண்டு செல்வதில்லை

மரணத்தின் விளிம்பில் 

எதையும் விடுப்பதும் இல்லை

மெத்தை படுக்கையும்

மரணப் படுக்கையாய்

மாறும் வரை

கண்டது காலம்

கொண்டது கோலம்

யார் உறங்க யார் தோண்ட?

யார் இளைப்பாற யார் 

கண்ணீர் உதிர்க்க?

யார் பிறக்க யார் உணர? 

யார் துணையோடு யார் பயணிக்க?

வாழ்வில் 

மனதும் துறந்த பின் உயிர் துறப்பதும் 

மரணப் படுக்கையில் வீழ்வதும்

மரணக் குழியில் துயில்வதும் ஒன்றே!

 Veena Shankar:

 தோண்ட தோண்ட கிடைப்பது பொக்கிஷமே!

ஆனால் வார்த்தைகள் மீறி தோண்ட கிடைப்பது

 பகைமையே!

Vidhya:

தோண்ட தோண்ட கிடைத்தது

 பாட்டன் பூட்டன் எலும்பு அல்ல

 ஒரு சமூகத்தின் அடையாளம்

நாகரீகத்தின் வெளிப்பாடு..

இத்தனை அடி தோண்டி

 புதையுண்ட மண்ணை

 கிளறி,வெளிகொண்ட தூசு

 சொல்லும் அவர்களின் கதை..

வளமைக்கொண்ட உடல்

 இரும்பாக, வலுவிழந்த மண்

தூணாக,வைரம் போன்ற மனம்

 எங்கே உறங்குதோ!

இங்கே கிடைத்ததை கூறு போட

பறக்கும் பருந்து கூட்டம்..

அப்பாட என்று உறங்க போன

 பின்னும் தோண்டி

 வேவு பார்ப்பது  ஏனோ! 

பல அடி தோண்டி உயிரற்றதை

 தேடும் இடத்தில் மடியும் உயிரை

 கொஞ்சம் கவனியுங்க, மேலே

 போக வழிவிடுங்க ,நீங்களே

 இறங்கும் நாள் வரும் வரை

 அடுத்தவரையும் தூக்கிவிட்டு

 போங்க!

 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...