Tuesday, March 4, 2025

அம்மாவின் நினைப்பு by Veena Shankar

 


அம்மாவின் நினைப்பு


ரவிக்கும் ரூபாவிற்கும் கல்யாணமாகி ஒரு மாதம் ஆயிற்று. புதுமண தம்பதிகள் மறு வீடு அழைப்பு, தேன் நிலவு, விருந்து என்று நாட்களை ஓட்டி விட்டனர். ரவி மட்டும் இடையிடையே ஆபிசுக்கு போக, ரூபா மட்டும் ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தாள். இன்னும் இரு தினங்கள் மீதியிருந்த நிலையில் வீட்டு வேலைகளை மாமியாரோடு பகிர நினைத்தாள். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து சாமிக்கு விளக்கேற்றி பேப்பர் பார்த்தவாறே காபி குடித்து முடித்தாள் ரூபா. அடுத்த வேலையாக வீட்டை பெருக்கி துடைத்து, அடுப்படியில் இருந்த தன் மாமியாரிடம் தான் பெருக்கி துடைத்து விட்டதாக சொல்ல, "சரிம்மா! நானும் பெருக்கிட்டு வரேன்" என்று சொல்லி வீட்டை பெருக்க தொடங்கினாள் மாமியார் அன்னம். அவள் செயல் கண்டு ரூபா விழித்தாலும் அப்போது ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. சிறிய நேரம் கழித்து தான் பாத்திரம் கழுவி வைத்து விட்டதாக அன்னத்திடம் சொல்ல, மீண்டும் பாத்திரத்தை தான் கழுவி வைத்து விட்டு வருவதாக சொல்லி அடுப்படிக்கு சென்றாள் அன்னம். '''இது என்ன ரொம்ப புதுசா இருக்கே" என்று நினைத்து மௌனம் சாதித்தாள் ரூபா. துணியை மிஷினில் போட்டு காய வைத்து விட்டதாக ரூபா மறுபடியும் அன்னத்திடம் சொல்லி அவள் நடவடிக்கையை கண்காணித்தாள் ரூபா. ரூபா காய போட்ட துணியை அன்னம் மீண்டும் இடம் மாற்றி போட்டதை பார்த்தாள் . ஆனால் மாமியாரிடம் இது பற்றி ஏதும் கேட்காத நிலையில் ஒரு வாரம் இப்படியே கழிந்தது. தான் வேலைக்கு போகும் போது முக்கால்வாசி வேலையை முடித்து விட்டே செல்வாள் ரூபா. ஆனால் இவள் செய்த வேலைகளை அவள் மாமியார் மறுபடியும் செய்வதை தன் கணவனிடம் மெல்ல சொன்னாள். மறுநாள் காலை தான் தன் அம்மாவிடம் விசாரிப்பதாக சொன்னான் ரவி.

மறுநாளும் ரூபா செய்த வேலையை அன்னம் மீண்டும் செய்வதை பார்த்த ரவி, தன் அம்மாவிடம் இதை பற்றி கேட்க, ரூபா தான் கேட்க சொல்லியிருக்காள் என்று நினைத்து அவளை பார்த்தே " ரூபா! இதை நீ நேரடியாய் என்கிட்ட கேட்டிருக்கலாம்? உனக்கும் எனக்கும் நடுவுல என் பையன் கூட வரக் கூடாது. எனக்கு ரவி ஒரே பையன். பொண்ணு கிடையாது. உன்னை நான் மகளாக தான் பார்ப்பேன். ஆனால் நீ என்னை அம்மாவா ஏத்துக்கணும் ன்னு சொல்லி கட்டயாப்படுத்த மாட்டேன். யாருக்கும் அம்மாவை மீறின பந்தம் கிடையாது. சரி, பரவாயில்லை ரவி கேட்டதற்கு பதில் சொல்றேன். வேலைக்கு போகறதுக்கு முன்னாடி உன்னால் முடிந்த வேலையை நீ செய்கிறாய். நீ போனப் பிறகு வேலையில்லாததால் அப்படியே உட்கார்ந்து நான் டிவி பார்க்க பழகிட்டா அப்புறம் முழு சோம்பேறியாக மாறி விடுவேன். இத்தனை நாள் நான் செய்த இந்த வேலைகள் என்னை சுறுசுறுப்பாக வைத்திருந்தது. அதுவும் நீ உன் அம்மா வீட்டிற்கு போகும் போது மொத்த வேலையை நான் செய்ய கஷ்டமாக இருக்கும். நானே எல்லா வேலைகளையும் செய்கிறேன் என்று நான் சொன்னாலும் நான் இல்லாதப்போ உனக்கும் வீட்டு வேலை மொத்தமாக செய்ய கஷ்டமாகி விடும். அதனால் தான் நீ செய்யும் வேலையை மறுபடியும் செய்கிறேன்" என்று சொல்லி முடித்தாள் ரவியின் அம்மா அன்னம். "அச்சோ! உங்களைப் போய் தப்பா நினைச்சிட்டேன். சாரி அத்தை என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் ரூபா. என்னங்க! இன்னிக்கி என் மனக்குழப்பம் தீர்ந்தது. நான் நிம்மதியா ஆபீஸ் ல வேலை பார்ப்பேன். வாங்க நேரமாச்சு, போவோம் என்று ரவியை விரட்டினாள் ரூபா. 


ஒருவரின் பார்வை மற்றவரிடத்து மாறுபடலாம். அதை தெளிந்து உணர்ந்து கொள்வது சிறப்பு தான் என்றென்றும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...