ஆசிரியர்களும், காலக்கண்ணாடியும்
அனைவருக்கும் வணக்கம்,
ஒவ்வொருவருக்கும் அவர்கள் தாய் தந்தையர் தான் முதல் ஆசிரியர்கள். யாரும் அதை மறுக்க முடியாது. அம்மா தான் முதல் ஆசிரியர் தன் பிள்ளைகளை கடைசிவரை குழந்தையாக பார்த்து கண்டித்துக் கொண்டே இருப்பவள். அப்பா சரியான நேரத்தில் வாழ்க்கையை கற்றுக் கொடுப்பவர்,சில காலகட்டத்திற்கு மேல் விட்டு விடுவார்கள் பிள்ளைகளை அவர்கள் போக்கில் ,ஆனால் கண்காணிப்பார்கள்.
பள்ளியில் ஆசிரியர்கள் குறிப்பாக இளவயதில் அவர்கள் பங்களிப்பு மிகப் பெரியது . பெற்றோரை ஒரு குழந்தை பிரிந்து கல்வியுடன் கூடிய வாழ்க்கையினை அங்கேதான் தொடங்குகிறார்கள். கேள்வி கேட்கும் திறன் மிக வேகமாக இருக்கும்,எல்லாம் புதிதாக இருக்கும் அந்த வயதில்.
ஆசிரியர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு தொடக்கப் பள்ளிக்கூடம் மிகப்பெரிய பங்களிக்கிறது வாழ்வில் . கலைப்பள்ளி என்னும் தொடக்கப்பள்ளியில் தான் நான் படித்தேன் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். நான் இங்கே தமிழில் இவ்வளவு ஆர்வம் காட்ட வித்திட்டவர் என் தந்தை, அவர்தான் நான் தமிழ் வழிமுறை கல்வியில் தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். பசுமை நிறைந்த, தடுப்பு சுவர் இல்லாத ,இடுப்பு உயர சுவர் உள்ள பள்ளி . ஆசிரியரை நாங்கள் அம்மா என்று தான் அழைப்போம் .
இன்றும் ஞாபகம் இருக்கிறது ஆரஞ்சு மிட்டாய் உடன் பள்ளியின் முதல் நாள் பானுமதி அம்மாவை சந்தித்தது. வாழ்க்கையில் படிப்பில் கவனம் திரும்பியது என்னுடைய மூன்றாம் வகுப்பில் ஏனென்றால் எலிசா அம்மா சிரித்த முகத்துடன் ,இளஞ்சிவப்பு குங்குமப்பொட்டு, பன் கொண்டையில் மல்லிகை பூவுடன் அவர்களை ரொம்ப பிடிக்கும் அதனால் படிப்பில் ஆர்வம் தானாக வந்தது. நான்காம் வகுப்பில் பெரிய வளையம் போட்ட அம்மா, கொஞ்சம் கண்டிப்பானவர். ஐந்தாம் வகுப்பில், மேரியம்மா என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள் பழகியுடன் தான் தெரிந்தது,பாசமானவர். இன்னும் ஞாபகம் இருக்கிறது சில்வர் கூஜாவில் குடிக்க தண்ணீர் கொண்டுவருவார்.
ஹெட் மாஸ்டர் அவரை நாங்கள் அண்ணா என்றுதான் அழைப்போம். எங்கள் பள்ளியில் காலையில் நடக்கும் இறைவழிபாடு சிறப்பு, யோகா முறையில் , பத்மாசனம் போட்டு தலையில் கைகூப்பிய நிலையில் இறை வழிபாடு நடைபெறும் .அப்பொழுது கையை வளைக்காமல் ,முதுகை வளைக்காமல் இருக்க ஆசிரியர்கள் உதவி செய்வர்கள். குறிப்பாக யோகா அண்ணா சொல்லித் தருவார் .
மறக்க முடியாத மற்றொன்று சத்துணவு கூடம் அதிலிருந்து வரும் மணம் மறக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில் பலபேர் அதற்காகவே பள்ளிக்கு வருவார்கள். எங்களுக்கு ஜாலி ஒரு மணி நேரம் கிடைக்கும் வீட்டிற்கு சென்று சூடாக சாப்பிட்டுவிட்டு வருவோம். எப்போதாவது சத்துணவு மிஞ்சி விட்டாள் மாலையில் உருண்டையாக உருட்டி அருகில் இருக்கும் வகுப்புகளுக்கு கொடுப்பார்கள். அதற்காக நானும் ஏங்கி இருக்கிறேன், அதை ருசிபார்த்து இருக்கிறேன். அழகான ,ஆரோக்கியமான கல்வி முறை அது.
குறிப்பாக கலர் டிரஸ் தான் டெய்லி போடுவோம், போகப்போகத்தான் யூனிஃபார்ம் வந்தது, வாரத்தில் ஒரு நாள்.
மேல்நிலைப்பள்ளி ஆரம்பித்தது, பெரிய பள்ளி, பெரிய கனவுகள் , தினமும் யூனிஃபார்ம். முதல் ஒரு வாரம் ஆங்கில எழுத்துப் பயிற்சி தான் இப்போது கேட்டால் சிரிப்பார்கள். புது இடம் ,அங்கு கிடைத்தார் தோழி மாதிரியான எஸ்தர் டீச்சர். அப்போதுதான் உணர்ந்தேன் அறிவியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று மிகவும் பயிற்சி மிக்க ஆசிரியர்.
மரத்தடியில் நடக்கும் டிராயிங் கிளாஸ் ,பாட்டு கிளாஸ் ,உடற் பயிற்சி வகுப்புகள் இன்றும் பசுமையாக இருக்கிறது நினைவுகளில்.. ஏழாம் வகுப்பில் பிரமிளா டீச்சர், சமூகவியல் ஆசிரியரை மறக்கமுடியாது.
எட்டாம் வகுப்பு பெர்சிலா டீச்சர் கிராமர் விளக்கம், இறந்தகாலம் ,நிகழ்காலம் ,எதிர்காலம் விளக்கப்படம் இன்னும் மனதில் பதிந்திருக்கிறது . அறிவியல் மீதான ஆர்வம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது .
அடுத்து வந்தது ஒன்பதாம் வகுப்பு மிகக் கண்டிப்பான ஆசிரியர் பார்த்தாலே நடுங்குவார்கள், பின் ட்ராப் அமைதியாக இருக்கும் வகுப்பறை . நோட்டு புத்தகம் ஒழுங்காக இல்லை என்றால் ஜடையையும் ,காதையும் திருப்புவார். ஒழுங்காக வரையவில்லை என்றால் நோட்டுப் பேப்பரை கிழித்து விடுவார். அப்பொழுது தான் கற்றுக்கொண்டேன் நீட் நர்ஸ் .கணிதம் மிகவும் எளிதாக எனக்கு புரிந்தது. ஒவ்வொரு ஸ்டெப்பும் அழகாக விளக்குவார். இப்ப பார்த்தா கூட அந்த புக்கை கண்ணுல ஒத்திக் கொள்ளலாம்.இன்றும் தொடர்கிறது அந்த டிசிப்ளின் . எனக்கு நல்ல பாடம் கிடைத்தது அவரிடம் என்னுடைய முதல் பனிஷ்மென்ட், வாய் துடுக்காக பேசியதற்கு கிளாஸ் லீடர் பனிஷ்மென்ட் . எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் தான் வசித்து வருகிறார்.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் உங்க மாணவி என்று சொல்லிகொள்ள பயமாக இருக்கிறது இன்றளவும். அவங்க பேரு பிளாரன்ஸ் டீச்சர்.. கண்டிப்பா பியூச்சர் ல போய் பேசுவேன்.
10th ஸ்டாண்டர்ட் அப்பொழுதுதான் என்னை உணர்ந்தேன் ,Vaiola டீச்சர் மிகவும் அருமையான தோழி அவர் சொல்லும் isn't இட் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சயின்ஸ் டீச்சர் நர்மதா, என்னுடைய அறிவியல் ஆர்வத்திற்கு சரியான வித்திட்டவர். பத்தாம் வகுப்பில் தான் எந்த ஒரு பயமும் இன்றி என்னை என்னால் வெளிப்படுத்த முடிந்தது. அதன்பின் அப்பள்ளியில் என்னால் தொடர முடியவில்லை.
11th ஸ்டாண்டர்ட் ஊரிலேயே பெயர் சொல்லும் பெரிய பழைமை வாய்ந்த பள்ளி. ஒரு வகுப்பில் 75 மாணவர்கள். வகுப்பு ஆசிரியர்களுக்கு எல்லா மாணவியர் பெயர் கூட தெரியாது.. அதுவும் புதுசா வந்த மாணவியை பற்றி சொல்லவா வேண்டும். ஆட்டு மந்தை மாதிரி தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்தோம். டியூஷன் கொடிகட்டி பறந்தது, அங்கிருந்த ஆசிரியர்களும் அதில்தான் ஆர்வம் காட்டினர். வெளியுலகை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இருந்தது எனக்கு, அதிலும் நல்ல தோழிகள் கிடைத்தனர். அதிலும் இங்கிலீஷ் டீச்சர், பிசிக்ஸ் டீச்சர் ,கெமிஸ்ட்ரி டீச்சர் மற்றும் பாட்னி டீச்சரை மறக்கவே முடியாது. பனிரெண்டாம் வகுப்பு முதல் முறை காப்பி அடிக்க தெரியாமல் மாட்டிக் கொண்டேன். அதுவும் கிளாஸ் டெஸ்ட் தான் எல்லோரும் செய்கிறார்கள் என்று நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் சுத்தமா படிக்காமல் சென்று விட்டேன் அன்று.பயத்தில் மாட்டிக்கொண்டேன் தாவரவியல் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர்.அதன்பின் அவர் பார்க்கும் பார்வை ஒவ்வொரு முறையும் குத்தும் என்னை அன்று தான் முடிவெடுத்தேன் மீண்டும் இது மாறி தவறு செய்யக்கூடாது என்று. .. இனிதே முடிந்தது என் பள்ளி வாழ்க்கை.
பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் மிகப்பெரிய அடித்தளம் இங்கே கற்றுக்கொள்வதை தான் பிரதிபலிக்கும் வாழ்க்கை முழுவதும்..
இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர் இன்றும் என் பிள்ளைகளிடம் ஒவ்வொரு ஆண்டும் பலவித மாறுதல்கள் பார்க்கிறேன். எப்பெயர் பெற்ற பள்ளியாக இருந்தாலும் ஆசிரியரை பொருத்துதான் ஒரு மாணவன் வளர்கிறான். இன்றும் பல ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் .ஒரு பெற்றோராக பல இடங்களில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்பொழுது இவர்கள் படிப்பதும், கேள்வி கேட்பதும் ,உலகைப் பார்க்கும் விதமும் மிக வேகமாக வளர்ந்து விட்டது, ஆனால் ஆசிரியர் மாணவர் உறவு அதே முறைதான் தொடர்கிறது.
இன்றைய ஆன்லைன் கிளாஸில் ஆசிரியர்கள் பொறுப்பு மிக அதிகம். குடும்பத்துடன் அதையும் மிகவும் திறம்பட புரிகின்றனர்.
முகநூலில் பார்க்கிறேன் பல ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் சிறுசிறு கிராமங்களுக்கு நேரில் சென்று மரத்தடியில் வகுப்பு எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, மிகவும் வரவேற்கத்தக்கது அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.
ஆசிரியர்கள்தான் நாளைய சமுதாயத்தை உருவாக்குவது அப்பேர்ப்பட்ட ஆசிரியர்களை நாம் மதிக்க சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை.
ஒவ்வொரு மாணவனும் ஒரு விதை போல அது மரமாக வளர்ந்து நாளைய சமுதாயத்திற்கு நிழல் கொடுப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கையிலே.
எனக்கு கிடைத்த அனுபவங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.. இது எனக்கு கிடைத்த பாடம் எவ்வளவு பெரிய பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை பல சிறிய பள்ளிகள் கூட பெரிய காட்டை உருவாக்கக்கூடிய பல திறமையுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
அனைவருக்கும் நன்றி,
உங்கள் வித்யா.