Friday, June 14, 2024

பரிசு by Veena Shankar

 


பரிசு


காலை முதல் கூடத்திற்கும் வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த தன் மனைவி லலிதாவை சபரி, என்ன விசயம் என்று கேட்க , "ஒன்றுமில்லைங்க. உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கட்டா?" என்று மறு கேள்வி கேட்டு தன் கணவனை சமாளித்தாள். " ஏய்! என்ன இன்னிக்கு புதுசா கேட்குற! இப்போதான் பல் தேய்ச்சிட்டு வரேன். அதற்குள்ள டிபன் தரவா ன்னு கேட்குற?" என்று குரல் உயர்த்த, சாரிங்க! ஏதோ ஒரு நினப்புல கேட்டுப்புட்டேன்" என சொன்னவளிடம் 

" இல்லை. காபி கொண்டா, பேப்பர் படிக்கல." என்று சொன்னதும் "இதோ கொண்டாரேன் " என்று சொல்லி சமையற்கட்டு பக்கம் ஓடினாள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் மனைவி கையால் காபி, ஓர் தனி சுகம் தான் என்பதை தெரிந்தவன் சபரி. 


என்ன செய்ய? ஒரு குழந்தை பிறக்குற வரைக்கும் தான் இந்த கவனிப்பு இருக்கும். வருஷம் பத்தாகிடிச்சி. இன்னும் ஒண்ணும் காணோம். எப்போ கடவுள் கண்ண தொறப்பாரோ? என்ற கேள்வியுடன் 

காபியை ரசித்துக் கொண்டே பேப்பர் படித்து விட, குளிக்க சென்றான். பின்னாலே மனைவியும் எடுபிடிக்கு சென்றாள். 


குளித்து முடித்து, சாமி கும்பிட்டு , சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு சபரி கிளம்புவது வழக்கம். அதற்காக தான் லலிதாவும் காத்துக் கொண்டிருந்தாள். இடையிடையே அலைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டு பேசினாள், தன் கணவனுக்கு தெரியாது என்று நினைத்து. சாப்பிட்டதும் சாய்வு நாற்காலியில் ஏதோ யோசானையாய் சபரி அமர்ந்தான். 

 

பொங்கல் பண்டிகை வந்தாலே சபரிக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும். ஆம் . ஆளுங்கட்சி கொடுக்கும் இலவச பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் எத்தனித்தாலும் அடுத்த முறை சபரி ஆட்சிக்கு வரும் அளவிற்கு ஆதரவு இருப்பதால் இதை விட கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும் என்ற ஆலோசனையில் இருந்தாலும் ஒரு பார்வையை லலிதாவின் மீது வைத்திருந்தான். இதோ இப்போது கூட

அவன் மனைவி லலிதா, சபரிக்கு தெரியாமல் அந்த மணியோடு வெளியேற துடித்துக் கொண்டிருக்கிறாள் என்று சபரி உணராமல் இல்லை.


போன வருடம் , அதற்கு முந்தைய வருடம் ஏன் இன்னும் பல வருடங்களுக்கு முன்பே லலிதாவிற்கும் மணிக்கும் இதே வேலைதான். எப்படியாவது சபரி கண்ணில் மண்ணைத் தூவி ஓடி விடுவர். இருவரையும் மோப்பம் பிடித்து கையும் களவுமாகப் பிடித்து அவரவர் வீடு சேர்ப்பதே சபரிக்கு பெரிய வேலையாகிப் போனது. 


இந்த முறை அவ்வளவு கேவலமாக தான் இருந்து விடக் கூடாது என்பதற்காக அலுவலகம் போகாமல் வீட்டில் இருந்தபடியே ஆபீசையும் லலிதாவையும் மணியின் வரவையும் கண்காணித்து வந்தான். மணியின் வரவிற்காக லலிதா காத்திருந்தாலும் சபரி ஆபீஸ் போன பிற்பாடே தாங்கள் இருவரும் வெளியே போக முடியும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டே கடிகாரத்தை பார்த்தாள். 


நேரம் கடந்து போக, ஒரு கட்டத்தில் லலிதாவின் அழைப்பு இல்லாமல் மணி வீட்டிற்குள் வர, சபரியை பார்த்தவுடன் மிரண்டான் மணி. அவன் தன்னிலை வருவதற்குள்

" என்னடா மணி! இன்னிக்கு இந்த பக்கம் காத்து வீசியிருக்கு?" என கேட்க, " ஒண்ணுமில்லைங்க, உங்களை பார்த்திட்டு போலாம் ன்னு வந்தேனுங்க " என்று சொன்னான். " ஏதேது, ரொம்ப பாசமா தெரியுது! என்னை பார்க்க வந்தியா, இல்லை லலிதாவை கூட்டிட்டு போக வந்தியா?" என்ற கேள்வியை எதிர்பார்க்காத மணி," இல்லைங்க அத்தான். அப்படி ஏதுமில்லைங்க" என்று சொன்னாலும் அவன் சூட்சமத்தை தெரிந்திருந்தான் சபரி. அதற்குள் " யாரது! மணியா? " என அவன் வருகையை சமாளிக்க குசலம் விசாரிக்க வருவது போல் வந்து கண் ஜாடை காட்டி, அதற்குள் என்ன அவசரம் என்பது போல் அவனை கடிந்தாள் லலிதா. 


" என்ன பொங்கல் பரிசு

ஆயிரம் ரூபாயும் இலவச பொருட்களை வாங்க அக்காவை கூப்பிட வந்தியா? " என சபரி கேட்கவும் இருவரும் ஆமாம், இல்லையென்று சொல்ல முடியாமல் தவித்தனர். "உங்களுக்கு பொங்கல் வந்தா இதே பொழப்பா போச்சு. என் மானம் போகுது. அரசியலில் உள்ள நான், என் மனைவியும் அவள் தம்பியும் பொங்கல் பரிசுக்காக ரேஷன் கடையில் கூட்டத்தில் போய் முண்டியடித்துக் கொண்டு வாங்குறது பார்த்து ஊரே சிரிக்குது. உங்களுக்கு அசிங்கமா இல்ல?" எனக் கேட்க, "போங்க அத்தான்! அதோ அவர் இருக்குறல்லா என்று ஒரு பெரிய அரசியல்வாதியின் பெயரை சொல்லி, அவரே வாங்குறாரு, சுயேட்சையா நிக்குற உங்களுக்கென்ன? நாங்க தானே பொங்கல் பரிசு வாங்க போறோம்" என்று சொன்னதும் சபரிக்கு கோபம் தலைக்கேறியது. சபரியின் கோபத்தை புரிந்து கொண்டவனாய் அக்கா லலிதாவின் பின்னால் போய் அவன் ஒளிய, "க்கும். நடுத்தரமா இருந்த நாமும் இப்படி அரசியல் கட்சிங்க பின்னாடி போய் லஞ்சம் கிஞ்சம் வாங்கி தானே இப்படி வளர்ந்திருக்கோம். இலவசம் எல்லாத்துக்கும் பொது தானே? போன எலக்சனுல நான் கவுன்சிலரா நிக்கிறது தெரிஞ்சும் எனக்கே ஒட்டுக்கு பணம் கொடுத்திட்டு போனானே ஒருத்தன் , அது என்ன கணக்குங்குறேன்? இலவசம் வாங்குறதால மட்டும் என்ன அசிங்கம் ஆகிட போகுது? " என்று தன் பங்கிற்கு ஓங்கி குரல் கொடுத்தாள் லலிதா. 


இப்படி ஒரு நாளும் லலிதாவின் சப்தம் ஓங்கியதில்லை. இது புதுசு தான் என்றாலும் அவள் பேச்சில் நியாயம் இருந்ததை சபரி உணர்ந்தான். இப்படி அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே " அக்கா! அக்கா! " என்று பதறிக் கொண்டு மணி, லலிதாவை தாங்கி பிடித்துக் கொண்டாலும் அவள் கண் சொருகி மயக்கமடைந்தாள். 


டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் பக்கத்து வீட்டு பார்வதியம்மாள் வரவழைக்கப்பட, நாடி பிடித்து பார்த்தவள், சீனியை கொண்டு வரச் செய்து சபரியின் வாயில் திணித்து லலிதா உண்டாகியிருப்பதாக சொன்னாள். அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடுவாள் என்று சொல்லி சபரியிடம் இனாமாக இருநூறை கறந்தாள் பார்வதியம்மாள். 


இதை விட பெரிய பொங்கல் பரிசு லலிதாவிற்கு கிடைக்குமா? என்ற நினைப்பில் அவளை தானே தூக்கி கொண்டு உள்ளே மெத்தையில் கிடத்தினான் சபரி. 


இலவசமும் வசமாகும் நமக்கு, அதனால் நாமும் வசமாகி விடுவோம் அரசியல் கட்சிகளின் சூட்சமத்திற்கு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...