Saturday, June 22, 2024

என்னை ஈர்த்த கோலம் by Veena Shankar

 


என்னை ஈர்த்த கோலம் 


என் திருமணத்திற்கு பின் ஓரிழையிலல்ல ஈரிழையில் கூட அழகாய் இழுத்து வளைத்து கோலம் போட கற்றுக் கொண்டேன். கோலம் என்றாலே முன்பு அரிசிமாவில் இடுவது தான் மரபு. ஆனால் தற்போதெல்லாம் சுண்ணாம்பு கோலப்பொடி தான் கிடைக்கிறது. அதற்கு நாமும் பழகிவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். 


என்றும் நிறைவாய் இருக்கும் கோலப்பொடியும் தான, தர்மம் செய்தது போக சிறிது சிறிதாய் கரைந்து கொண்டிருந்தது. எப்போதும் வாசலில் கூவி கூவி அழைத்து விற்பவரும் காணவில்லை. கடைத்தெருவிற்கு போய் வாங்கி வர சோம்பல். 

பிறகென்ன அரிசிமாவு கோலம் தான் மூன்று நாட்களுக்கு அரங்கேறியது . 


அன்று வெளியே செல்ல வேண்டியிருந்ததால் வீட்டை பூட்டி வெளியில் நான் வர, நான் போட்ட கோலத்தின் வடிவத்தில் எறும்பு கூட்டத்தை கண்டதும் என்னுள் பிரமிப்பு. அன்று காவியும் இடாமலே என் கோலம் சிவந்திருந்தது. சரி அடுத்தவரிடம் பகிர ஒரு புகைப்படம் எடுப்போம் என்று எண்ணி அலைபேசியில் படம் எடுப்பதற்குள் கார் ஒன்று வர, அந்த காற்றின் வேகத்தில் எறும்புக் கூட்டம் கலைந்தது. காரை கடிந்தவாரே என் மனக் கண்ணால் மட்டுமே படம் பிடித்து நகர்ந்தேன் என் காலை எட்டி எட்டி வைத்து.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...