பேச்சுத் திறமை
வைஷாலி சிறு வயதிலிருந்தே மிகவும் துடுக்காக பேசக்கூடியவள். அவள் பள்ளி, கல்லூரியில் தன் பேச்சு திறமையால் பல கோப்பைகளை கைப்பற்றியவள். தமிழ்ப் புலமை கூடுதல் தகுதி என்பதால் பட்டிமன்றத்திலும் பங்கு கொள்வாள்.
அவள் பேச்சில் உண்மை, பொய், நகைச்சுவை என்றில்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் இருப்பதுண்டு. பல இடங்களிலும் மக்கள் அவள் பேச்சை ரசித்து தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்திய சம்பவங்களும் உண்டு. இதனால் பெருமையில் மிதந்தது அவளும் அவளின் அளவான குடும்பமும்.
யாரைப் பார்த்தாலும் "உனக்கென்னடி குறைச்சல் " என்ற வார்த்தையை அவளிடம் தவறாமல் உதிர்ப்பதுண்டு. சொந்தங்களும் " உன் படிப்பு முடியட்டும், நீ - நான் என மாப்பிள்ளை வீட்டார் போட்டி போடுவார்கள்" என்று சொன்னவர்களுக்கு " இன்னும் நான் படிக்கணும்" என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்தாலும் அவளும் பருவப் பெண் தானே? ஆசை மனதில் இருக்காதா? இதை அவள் அம்மாவும் கண்டுபிடித்திருந்தாள். மகளின் செய்கை பற்றி தெரியாதா தாய்க்கு?
வைஷாலியும் தன் முதுகலை பட்டத்தை முடித்தாள். இளங்கலை பட்டம் முடிக்கும் போதே வைஷாலியின் ஜாதகம் பல இடங்களுக்கு அனுப்பியிருந்தாலும் அதற்கு பதில் ஏதும் வரவில்லை. பெண் பார்க்கும் படலமும் அரங்கேறவில்லை. வைஷாலியின் பெற்றோருக்கு இது வருத்தத்தை தந்தது. மனதில் இருந்தாலும் வைஷாலி இதை வெளிக்காட்டவில்லை.
நாட்கள், வருடங்கள் ஆகவும் அவள் இருபத்தியாறு வயதை எட்டிப் பிடிக்க, தன் தோழியருக்கு எல்லாம் ஒருவருக்கு பின் ஒருவராக திருமணம் ஆகி விட, விருந்து சாப்பாட்டை மட்டும் அங்கே ருசித்தாள். இருந்தாலும் அவள் பேச்சு திறமைக்கும் வருமானத்திற்கும் குறைவில்லை தான்.
அவளுடைய பேரும் புகழையும் ரசிக்கும் கூட்டம் அவளை தன் வீட்டு மருமகளாகவோ மனைவியாகவோ ஏற்க மறுத்தது. அவளுடைய பேச்சாற்றலே அவளுடைய திருமணத்திற்கு தடையாய் இருந்தது. பட்டிமன்றத்திலேயே இப்படி பேசுபவள் வீட்டில் எப்படி பேசுவாள் என்ற நினைப்பு தான் திருமணம் முடியாததற்கு காரணம் என்று எண்ணிய படியே படுக்க சென்றாள்.
வேதனையிலிருந்த வைஷாலி ஒரு கட்டத்தில் தன் சங்கடத்தை கடவுளிடம் முறையிட கோயிலுக்கு சென்றாள். மனதினுள்ளே உருகி கடவுளிடம் " என்னை நீங்கள் ஊமையாய் படைத்திருக்கலாமே? இவ்வளவு பேச வைத்து என் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமற் தவிக்க விடுகிறீர்களே! ஏன் ?" என்று கேட்டாள்.
" உன்னை ஊமையாய் படைத்திருந்தாலும் உனக்கு திருமணப் பிராப்தம் இல்லை. உன் பூர்வ ஜென்ம பலன் தான் இதற்கு காரணம்" என்றார் கடவுள் அவள் மனதிலே.
" நான் யாரையும் வஞ்சிக்காமல் தான் பேசுகிறேன். என் பேச்சுக்கு ரசிகர்கள் பலர் இருந்தாலும் ஏன் இந்த நிலை எனக்கு?" என்று மறுபடியும் கடவுளிடம் கேட்டாள் வைஷாலி.
அதற்கு கடவுள்
" என்னை பார்! நான் என்னை தேடி வரும் பக்தர்களிடம் நேரே நின்று பேசுவது கிடையாது. அவர்கள் படைக்கும் நிவேதனத்தையும் உண்ணுவது கிடையாது. இருந்தாலும் அவர்கள் அதை விரும்பி செய்கிறார்கள். ஒருவேளை நான் அவர்கள் கஷ்டங்களை காது கொடுத்தும் அவர்கள் படைக்கும் பொருளை உண்டாலும் என்னையும் பழிப்பார்கள். நான் ஏதும் பேசாமல் இருப்பதாலும் உண்ணாததாலும் தான் எனக்கு படைக்கிறார்கள். நான் சாப்பிடுவேன் என்று தெரிந்தால் எனக்கு படைக்கவும் மாட்டார்கள், என்னிடம் கேள்வி கேட்க தயங்கவும் மாட்டார்கள். பார்த்துக் கொள்! எனக்கே இந்த நிலைமை என்றால் உன் நிலையை கொஞ்சம் சிந்தித்துப் பார். " என்று சொல்லவும் இனி இவரிடம் கேட்டு பிரோசனமில்லை என்று கோயிலிலிருந்து வைஷாலி மௌனமாய் தன் நடையைக் கட்டினாள்.
"ஹாய்! வைஷு! சாரி, கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் இருந்தது. அதனாலே உன்னை லேட்டா ரூமுக்கு அனுப்புங்க ன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு போனேனே? என்று மதன் வந்து அவளை தட்டி எழுப்பவும் சுற்றி முற்றி பார்த்த வைஷாலியிடம்
" என்ன! நான் வருவதற்குள் தூக்கம் வந்து கனவும் கண்டுட்ட போலயே? என்று கிண்டலடிக்க, "ஆமாம் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இப்படி தான் வருவாங்களா? உங்க அம்மா லேட்டா அனுப்பினா போதும் என்று சொன்னாலும் எங்க அம்மாதான் சாஸ்திரம், சம்பிரதாயம் ன்னு சொல்லி ரூமுக்குள்ள சீக்கிரம் அனுப்பிட்டாங்க, " என்று சொல்லியதும் சிரித்துக் கொண்டே அவளைப் பற்றினான் மதன்.
ஆமா! எனக்கு கல்யாணம் ஆகாது ன்னு கடவுள் சொன்னாரே? பின் எப்படி மதனுடன்... என்று சந்தேகத்தோடு போட்டோவில் தொங்கிக் கொண்டிருந்த கடவுளைப் பார்த்து கேட்க, " ஐ ' ம் சாரி, அன்னிக்கி பக்தர் ஒருவர் கொண்டு வந்த பிரசாதத்தின் சுவையில் நான் மயங்கியிருந்த போது நீ உன் வேதனையை சொன்னாய், நானும் வேறு வைஷாலிக்கு சொல்வதை உன்னிடம் சொல்லி குழப்பி விட்டேன். நீ மதனை இறுக பற்றிக்கொள் என்று சொல்லியது போலவும் தன்னை பட்டிமன்ற பேச்சாளராக உருவாக்கிய கடவுளுக்கு என்ன பேசத் தெரியாதா என்றும் தன் கனவில் வந்தது நிஜமில்லாமல் போனதற்கு கடவுளுக்கு மனதினுள் நன்றி சொல்லி மதனின் அணைப்பில் தானும் கலந்தாள்.

No comments:
Post a Comment