சொல்வது எளிது
சுதாவின் கணவன் சதீஷ் கிப்ட் ஷாப் ஒன்று நடத்தி வந்தான். சுதாவும் தன் வீட்டு வேலைகளை முடித்தவுடன் அங்கே சென்று கணவனுக்கு உதவுவது வழக்கம். பெரும்பாலும் சுதா தான் கடையில் இருப்பாள். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடனே இருப்பதுதான் சுதாவின் அடையாளம். அந்த சிரிப்புக்கு மயங்கியே கடைக்கு மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவள் சிரிப்பு மட்டும் அல்ல அவளுடைய அணுகுமுறையும் அப்படிதான். வரும் வாடிக்கையாளர்களின் மனதிற்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பொருட்களை காண்பித்து தன் பேச்சு திறமையால் வாங்க வைப்பதில் அவள் கில்லாடி என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு பொருளையும் அடுக்கி வைப்பதிலேயே அவள் செயலின் நேர்த்தி தெரிந்துவிடும். பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி அடுக்கி வைத்திருப்பாள். பொருட்களை தானே மனம் உவந்து வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதில்லாமல் அதைவிட ஒரு படி மேலே போய் வாடிக்கையாளர்கள் கடைக்கு உள்ளே வரும் முன்னே எழுந்து நின்று வரவேற்பது அவளுடைய தனி குணம். இதற்காக சதீஷிடம் அவள் பலமுறை திட்டு வாங்கி இருக்கிறாள். " கடை வாசல் வரை வருபவர்களுக்கு உள்ளே வர தெரியாதா?" என்று கேட்டுள்ளான் சதீஷ். ஆனால் அவளுடைய தாய் சொன்ன மந்திரத்தை மறக்காத அவள் , சதீஷின் பேச்சை இந்த விஷயத்தில் நிராகரித்தாள்.
ஒரு நாள் முதியவர் ஒருவர் தன் மனைவியோடு கடைக்கு வர, கல்லாவில் அமர்ந்திருந்த சுதா அவர்கள் வருவதைக் கண்டும் எழுந்து நிற்காமல் புன்னகை மட்டுமே பூத்து அவர்களை கடைக்கு உள்ளே போய் பார்க்குமாறு சொன்னாள். எப்போதும் ஓடி வந்து வரவேற்கும் அவள் ஏன் இன்று வரவில்லை? என்ற நினைப்போடு உள்ளே சென்ற அந்த பெரியவர், அங்கே புதியதாக வேலையாள் ஒருவள் நிற்பதை பார்த்தார். சிறிய கடை இப்போது பிரம்மாண்டமாக விரிந்து இருந்ததை வியந்து பார்த்தார். "உள்ளே பெரிய கடையா இருக்கு, ஆனா வெளியே இருந்து பார்க்கும் போது தெரியல" என்று தன் மனைவியிடம் சொல்லியவாறே தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை மனைவிக்கு நினைவுபடுத்தினார்.
வந்தவரின் தேவையை கேட்டறிந்து அவர் விரும்பிய பொருளை காண்பித்தாள் வேலையாள். பல பொருட்களை வாங்கினாலும் சுதாவின் செயல் அவருக்கு புதிதாய் இருந்தது. மனதை குழப்பியது. ராசியான இந்த கடைக்கு பலமுறை தான் வந்திருந்தாலும் ஒரு நாள் கூட அவள் இப்படி நடந்து கொண்டதில்லை என்று தன் மனைவியிடம் அவர் சொல்ல, " சரி விடுங்க! இதை போய் பெருசு பண்ணிக்கிட்டு. அது என்ன கவலையில் உட்கார்ந்து இருக்கோ?" என தன் துணையின் கையைப் பிடித்து கல்லா பக்கம் வந்தாள். வாசல் பக்கம் வந்த பெரியவர் " வேலைக்கு ஆள் போட்டு கல்லாவுல உட்கார்ந்தா பழசெல்லாம் மறந்துவிடும் போல, அதுவும் கடையை பெரிசா மாத்திட்டாங்க இல்ல! சின்ன கடையா இருக்கும் போது விழுந்து விழுந்து கவனிப்பாங்க" என்று உரத்த குரலில் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டே கடையை விட்டு இறங்கினார். அவர் சொன்னது சுதாவிற்கு கேட்டது. "ஐயா! ஒரு நிமிஷம் நில்லுங்க " என்று சுதா சொன்னதும் பெரியவரின் துணை நெளிந்தார். சுதா தன் பக்கம் தான் நின்று கொண்டு இருக்கிறாள் என்று எண்ணிய பெரியவர் திரும்பிப் பார்த்தார். ஆனால் சுதா கல்லாவிலிருந்து தன் தோளில் இடுக்கியபடியே ஸ்டிக்கோடு வெளியே வந்தாள். " ஐயா! கொஞ்சம் எனக்காக உள்ளே வர முடியுமா? என்று சொல்லிக் கொண்டே மெதுவாக தாங்கிக் கொண்டு வந்து, தன் இயலாமையை காண்பித்தாள். ஒன்றும் புரியாமல் எப்படி இப்படி நடந்தது என பதறிப்போன அவரிடம்
" இரண்டு மாதத்திற்கு முன்பு மாடியில் இருந்து கீழே விழுந்துட்டேன் ஐயா. அப்போ என்னுடைய இடுப்பு எலும்பு, கால் பகுதியும் செயலிழந்து போயிடுச்சு. ஆப்ரேஷன் பண்ணியும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லிட்டாங்க. அதனாலதான் இந்த மாதிரி கைத்தாங்கலா நடக்க வேண்டி இருக்கு. அதுவும் இந்த ஸ்டிக் இல்லாம என்னால் நடக்க முடியாது. அதனால் தான் வேலைக்கு ஆள் அமர்த்தி இருக்கிறார் இவர். நீங்கள் வரும் போது கூட எழுந்து நிற்க முயன்றேன். முடியல. சரி நீங்க தவறா நினைக்க மாட்டீங்க என்று நினைத்தேன். வீட்ல தனியா இருக்கணும் பிடிக்கல. நாலு பேரை பார்த்தா தெம்பாயிடும் தான் கடைக்கு வரென்" என்று சொல்ல, சுதாவை தவறாக நினைத்ததற்காக பெரியவர் தன்னை தானே நொந்து கொண்டார். " இரண்டு மாசமா நாங்களும் இங்க இல்லை. பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம். நீ விழுந்தது தெரிஞ்சிருந்தா நாங்க பார்க்க வந்திருப்போம். இவர் பேசியதை மனசுல வச்சுக்காத, சாரிமா!" என்று சொல்லி தன் கணவனின் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்தார் அந்த பெரியவரின் மனைவி.
வார்த்தைகளை உதிர்ப்பது எளிது, அதை மறப்பது கடினம்.

No comments:
Post a Comment