நாச்சியாரின் பயணம் தொடர்ச்சி
-நாச்சம்மை
என்னுடைய சிறுவயது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .நான் பிறந்த ஊர் உடுமலைப்பேட்டை இரண்டேகால் வயதில் அங்கிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம். காரணம் என் பெரிய அண்ணன் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக( எனக்கும் அவருக்கும் பதினாலு வயது வித்தியாசம்).
ஒருநாள் சந்திர கிரகணத்தன்று உடுமலைப்பேட்டையில் இருந்து ஒரு தம்பதியர் வீட்டுக்கு வந்தனர் .வந்த உடனேயே என்னை கொஞ்சிவிட்டு உடுமலைப்பேட்டையில் உன்னை கொஞ்ச தவர் இல்லை எனக் கூறினார்கள். சந்திர கிரகணம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல் எல்லோரும் குளித்து பின் உணவு அருந்தினோம்.
எனக்கு அ,ஆ எழுத்து சொல்லிக் கொடுத்து பின் பள்ளியில் சேர்த்தது என் பெரிய அண்ணனும் தாயும் தான். என் பிறந்த தேதியை ஒரு வாரம் முன்னதாக கொடுத்துவிட்டார்கள். பெரியண்ணா வேலைக்கு சென்ற பிறகு பணம் கட்டி எனக்காக 'கண்ணன்' என்ற புத்தகத்தை தபாலில் வரும்படி செய்தார்.
தி.நகரில் இராமன் தெருவில் தான் எங்கள் வீடு. எதிர்த்த வரிசை 'ஹோலி ஏஞ்சல் கான்வென்ட்' ராமன் தெருவிலிருந்து திரும்பினால் நாயர் தெரு. அதில் குறுக்கே சென்றால் ராமகிருஷ்ணா மிஷன் எலிமெண்டரி ஸ்கூல் இருக்கும் .எங்கள் வீட்டில் எல்லோரும் ஐந்தாவது வரை அங்குதான் படித்தோம் .மூன்றாவதில் முதல் ராங்க் வந்ததால் (நான்கைந்து செக்க்ஷனுக்கும் சேர்த்து )அப்போது முதல் மந்திரியாக இருந்த திரு .காமராஜர் அவர்கள் கையால் பரிசு வாங்கினேன் .அப்ப போட்டோ எடுக்கும் பழக்கம் இல்லை .அந்தப் பரிசு திருமதி சரோஜினி நாயுடுவை பற்றிய புத்தகம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. பாட்டு நடனம் பேச்சு எதுவாக இருந்தாலும் என்னை சேர்த்து விடுவார்கள்.
நேரு பிறந்த நாளுக்காக நேரு கிரவுண்டில் நடனம் ஆடுவோம். நேருவுக்கு பிடித்த மலர் ரோஸ் என்பதால் உடை ,ரிப்பன் , வளையல் என எல்லாமே ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டும். அதற்காக ரோஸ் நிறத்தில் சாட்டின் துணி வாங்கி (பளபளவென இருக்கும்) தையற்காரரிடம் கொடுத்து தைத்தது நன்றாக நினைவிருக்கிறது. அந்த நடனப் பயிற்சி கொடுத்த தமிழ் மாஸ்டர் சரியாக ஆடவில்லை என்றால் காலிலேயே கம்பால் அடிப்பார் . அப்பொழுது எனக்கு கைக்கொள்ளாமல் தலைமுடி இருக்கும் .நிஜ முடியா இல்லை பொய் முடியா என என்னை கிண்டல் அடிப்பார்கள்.
எலிசபெத் ராணி சென்னைக்கு வந்தபோது அதே நடனத்தை ஆடி வரவேற்பளித்தோம். தாமரை மலர் போன்ற வடிவம் கொண்டது அந்த நடனம். தாமரை மொக்கின் ஓரத்தில் நின்று ஆடியதால் ராணியை நன்கு பார்த்தேன். சிறுவயது முதலே வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் எனக்கு தோழிகளாக இருந்தனர். எங்கள் வீடு பாண்டி பஜாருக்கு நேர் பின் தெரு. அதேபோல் அந்தப்பக்கம் பின் தெருவில் என் தோழி ராஜலட்சுமியின் வீடு இருந்தது. அப்போதே அவள் வீட்டில் டெலிபோன் இருந்தது. அவள் பேசுவதை நாங்கள் ஆச்சரியமாக பார்ப்போம். அறுபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு. எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு பழனியப்ப செட்டியார் வீடு. இப்போது அமிஞ்சிக்கரையிலுள்ள 'அம்பா ஸ்கைவாக்' ஓனர் பழனியப்பனின் தாத்தா .அவர்களுக்கு எஸ்டேட் ,சினிமா டிஸ்ட்ரிபியூஷன் என நிறைய பிசினஸ் இருந்தது .அவர்கள் மேனேஜர் ட்ரங்க் கால் புக் பண்ணி பேசுவது எங்கள் வீட்டுக்கு கேட்கும். ட்ரங்க் கால் கத்தி பேசினால் தான் எதிராளிக்கு கேட்கும்.
அந்த காலத்தில் பி .எஸ் வீரப்பா என்ற பெரும் நடிகர் இருந்தார். அவர் அடுத்த வீட்டுக்கு வந்திருந்தார் என்பது அவரது சிரிப்பு சத்தத்திலேயே புரிந்துவிடும். தேவர் பிலிம்ஸ் தேவர் அவர்களும் பக்கத்து வீட்டுக்கு வருவார். பழனியப்பன் அவர்கள் சினிமா பைனான்ஸ் செய்தார். ராசிக்காக அவரிடம் எல்லோரும் பணம் வாங்குவார்கள்.
எங்கள் வீட்டு கேட்டில் மாடு கொண்டு வந்து கட்டி பால் கேனை காட்டி பால் கறந்து கொடுப்பார் பால்காரர். அப்போது நான் போய் நிற்பேன் . பால் மாட்டின் மடியில் இருந்து வருவதும் ம அதை பால்காரர் சொர் சொர் என்று பீய்ச்சி பாத்திரத்தில் விடுவதும். அது பொங்கி நுரை ததும்புவதும் என கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆறு தென்னை மரங்கள் இருந்தன . நான்கு மாதத்துக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பவர் ,தென்னை மரத்தில் ஏறுவதை பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கும். வேகவேகமாக காலில் வளையத்தை கட்டிக்கொண்டு ஏறுவார். இளநீர் ,முற்றின தேங்காய் என பறித்துப் போடுவார் . அவற்றை வீட்டுக்குள் கொண்டு சென்று அடுக்கி வைப்பது பெரியவேலை. சித்தாள் வேலை எட்டாள் வேலை ,செய்யுங்கள் என்று என் பெற்றோர் சொல்வர்.
ஒரு பாட்டி வாராவாரம் சனிக்கிழமை கூடையில் வேர்க்கடலை கொண்டு வருவார். வீட்டுப் படியில் வந்து அமர்ந்து எல்லோருக்கும் வேர்க்கடலையை பொட்டலம் மடித்து தருவார் . ஒரு பொட்டலம் பத்து பைசா இதேபோல் தெருவில் செல்லும் அருண் ஐஸ் கிரீம் வண்டியில் வாரம் ஒரு முறை பால் ஐஸ் வாங்கி சாப்பிடுவோம். அதுவும் பத்து பைசா தான் . அப்போது பஸ்சில் சென்றால் 4 நிறுத்தங்களுக்கு பத்து பைசா தான்.
தொடரும்...


அப்படியே 63 வருடம் பின்னால கூட்டிட்டு போய் அப்போ எப்படி இருந்ததுனு காமிச்சுட்டீங்க..
ReplyDeleteஅருமை..உங்களுடைய பயணம் தொடர ஆசைப்படுகிறேன்.
ReplyDelete