Friday, September 25, 2020

மனநிம்மதி by Veena Shankar

 மன நிம்மதி 

-வீணா

            'விமலா எங்கே அவசரமாய் கிளம்பற? நான் சொல்வது கேட்கமாட்டாயா? என்று பங்கஜம் தன் மகளைக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள்.ஆனால் அதற்கு விமலாவோ பதில் ஏதும் பேசாதவளாய் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தாள். மீண்டும் பங்கஜமே வாய் திறந்தாள். ' நீ நினைக்கிற மாதிரி இல்லை. வாழ்க்கை நரகம் தான்.' என்றாள். ஆனால் விமலாவோ 'எனக்கு அந்த இடம் தான் சொர்க்கம். நீ சொல்வதை நான் கேட்கமாட்டேன்' என்றாள் பதிலுக்கு. 

            இதனை சகித்துக் கொள்ள முடியாதவளாய் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் ராதா. பின் விமலாவைப் பார்த்து 'விமலா ப்ளீஸ்' என்று சொல்ல அவளோ பார்வையாலேயே எரிக்க ராதாவும் மௌனமானாள். ஆனந்த பூங்காற்றாய் இருந்த வீடு புயல் போல் ஆட்டம் கண்டது. பங்கஜத்தின் ஒரே மகள் விமலா. மகன் ரவி. அவன் மனைவி தான் ராதா. பங்கஜத்தின் கணவன் இறந்து ஆறு வருடங்களாகிறது. இருந்த பணத்தை கொண்டு இருவருக்கும் மணம் முடித்தாள். இந்த திருமணத்தில் விமலாவுக்கு விருப்பமில்லை. அவளுக்கு தெரிந்தது எல்லாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான். எப்படியோ கல்யணத்துக்கு சம்மதிக்க வைத்தாள் பங்கஜம். தற்போது மறுபடியும் ஆசிரமத்தில் தஞ்சம் அடைய நினைக்கிறாள் விமலா.

              ' ஏய்! நான் சொல்றத கேளுடி! என்று பங்கஜம் கத்த ராதாவோ ' மாமி விடுங்க!. அவள் தன் இஷ்டம் போல் தான் நடக்கட்டுமே என்று சொன்னது தான் தாமதம். 'உனக்கு என்ன வந்தது? என் பொண்ணுதானே கஷ்டப்படுவாள். ஒரு ஆளு குறைந்தா நல்லது- ன்னு நினைக்கிறாயா? என்று பொருமினாள் பங்கஜம். அதுவரை தன் அம்மாவாக நினைத்த ராதாவுக்கு என்ன இருந்தாலும் மாமியார் தானே' என நினைக்கத் தோன்றியது. மேலும் பேசத் தயங்கினாள். 

                'அம்மா, நீ சொல்றதை எல்லாம் என்னால் ஏத்துக்க முடியாது. இப்படித்தான் கல்யணத்துக்கு முன்னாடியே சொன்னேன். நீ விடவில்லை. இப்ப என்ன ஆச்சு? என விசும்பினாள். ஆம். முதலில் பிடிப்பில்லாமல் தான் தன் வாழ்க்கையை துவக்கினாள் விமலா. ஆனால் அவள் கணவன் ரகுவின் மனது அவளை மாற்றியது. குடும்பத்தின் மேல் ஈடுபாடு வந்தது. விதியின் விளையாட்டால் ஒரு விபத்தில் ரகு இறக்க மறுபடியும் திருமணம் செய்ய ரகுவின் பெற்றோர் எவ்வளவு கூறியும் மறுத்து விட்டாள் விமலா. வயது முதிர்வு காரணமாக ரகுவின் பெற்றோர் இறக்க அம்மா வீட்டில் தஞ்சமடைந்தாள். கடந்த கால நினைவுகள் அசை போட ஆசிரம ஆசை மலர்ந்தது. 'இதப் பாரு விமலா, மரம் வளர்றப்ப கிளைகளை வெட்டி விடுவாங்க. அப்பத்தான் மரம் மேலே வளரும். அது மாதிரி தான் உன் வாழ்க்கையும். ரகு இறந்து விட்டான் என்பதற்காக நீ மறுமணம் செய்யாமல் உன் வேட்கையை தணித்துக் கொள்வது சாத்தியமில்லை. சொன்னால் கேளு!' என்று சற்றே தாழ்ந்த குரலில் அன்போடு சொல்ல 'அம்மா நானும் உன் பாயிண்ட்டுக்கே வரேன். நீ கிளையயை வெட்டினா மரம் வளரும்ன்னு சொல்றே. ஆனா ஒடிந்த கிளை என்ன ஆகும்? என் வாழ்க்கை தொலைந்து போய் விட்டது. அதை தேடும் முயற்சியை நான் எடுக்கவில்லை. பதிலுக்கு தொலைந்து போன முகங்களுக்காக பயன் பட நினைக்கிறேன். ' என்று பங்கஜத்தை விட பக்குவமாக பேசினாள். ' இல்லைம்மா. உன் உயிர் நன்றாக துடிக்கும் வரை தான் இது நடக்கும். பின்னாளில் உனக்குத் துணை தேவைப்படும். அதனால் நீ மறுமணம்' என்று பங்கஜம் முடிப்பதற்குள் ' அம்மா! நான் மறுமணம் செய்து கொண்டால் நான், என் வருங்கால கணவர், குழந்தைகள் என்று என் குடும்பம் மட்டும் தான் சந்தோஷமாக இருக்கும். நான் தேடுவது அது அல்ல. பலர் வாழ்வில் தொலைத்த சந்தோஷங்களை மீண்டும் துளிர்விட உதவுவதே என் சந்தோஷம். . இதற்காக என்னைப் போல் உள்ளவர்கள் இருந்தால் போதும். நான் யாரையும் தத்தம் குடும்பத்தை விட்டு உதவி செய்யுங்கள் எனக் கேட்கவில்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். ப்ளீஸ்' என்றாள்.

          விமலா சொன்னதை ஏற்க முடியாவிட்டாலும் இனி பேசி பலன் இல்லை என முடிவுக்கு வந்து விட்டு மௌனமானாள் பங்கஜம். பறவை கூண்டிலிருந்து பறந்து , பரந்த நீர்நிலையை தேடிச் சென்றது. தண்ணீர் குடிப்பதற்காக அல்ல. அங்கே மரத்தின் மீது அமர்ந்து, மற்றவர்கள் கண்டு மகிழ்வதற்காக. பாசப்போராட்டம் அடங்கியது. அடங்கமறுத்தது மனப்போராட்டம். 

     




No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...