நாச்சியாரின் பயணம்
- நாச்சம்மை
மாதா பிதா குரு தெய்வம். எனவே முதலில் தாய் தந்தையரை பற்றி சொல்ல விரும்புகிறேன். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.
என் தாய் காரைக்குடி என்ற செட்டிநாட்டு ஊரில் 1916 இல் பிறந்தவர். பெண்கள் பள்ளிக்கு செல்வதே அரிதானது. அந்தக் காலத்தில் என் அன்னை எட்டாவது வரை படித்தார். வயதுக்கு வந்ததால் அதன் பிறகு பள்ளிக்கு செல்லவில்லை. எட்டாவதில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தார். இது ஒரு பெரிய விஷயம்.
பிறகு பாட்டு வாத்தியார் வைத்து வீட்டிலேயே பாட்டு கற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் வெளிநாட்டுக்கு பெண்களை அழைத்து செல்வதில்லை . என் அம்மாவின் அப்பாவும், அப்பாவின் அப்பாவும் பர்மாவில் அடுத்தடுத்து வட்டிக்கடை வைத்திருந்தார்கள். அங்கே இருவரும் சம்பந்தியாக முடிவெடுத்து பேசினார்கள். என் அப்பாவின் அப்பா என் பெரியப்பாவின் மூன்றாவது கல்யாணத்துக்காக வந்தபோது கல்யாணம் முடிந்த மறுநாள் கிணற்றடியில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டார். என் பெரியப்பாவும் அப்பச்சி பேசி வச்ச பெண்ணையே தம்பிக்கு மணமுடித்து விடலாம் என்று சொல்லி திருமணம் செய்துவைத்தார். அந்தக் காலத்தில் வைர நகை( நெக்லஸ்) போட்டு மருமகளை அழைத்து வருவர்.
என் தாயின் தந்தை தந்தையின் தந்தையை விட பெரிய பணக்காரர். இப்போதும் 2000 ஏக்கர் நிலம் பர்மாவில் உள்ளது. அந்தக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஆண்கள் இந்தியாவிற்கு வரும் வழக்கம் இருந்தது. எனவே சில ஆண்கள் அங்கேயே குடும்பம் நடத்தினார்கள். அந்த ஊர் பெண்களுடன், அப்படி என் தாத்தாவுக்கு அங்கிருந்த குடும்பத்தில் பிறந்த பையனுக்கும் என் அம்மாவின் தம்பிக்கும் தகராறு ஏற்பட்டு என் மாமா காணாமல் போய்விட்டார்.
இரண்டாம் உலகப் போர் நடந்த ஏழு வருடங்களில் என் தாத்தாவும் இறந்துவிட்டார். ஆனால் கடிதப் போக்குவரத்து இல்லாததால் என் அன்னை குடும்பத்தாருக்கு விபரமே தெரியவில்லை. ஏழு வருடம் கழித்து தாத்தாவின் ஏஜென்ட் போட்ட கடிதம் மூலமே என் தாத்தா இறந்ததும் மாமா காணாமல் போனதும் தெரியவந்தது. என் அன்னையின் அன்னை நிலமையை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் பெண்கள் நிலைமை இதுதான்.
காரைக்குடி வீட்டில் என் அம்மாவின் அண்ணன் என் தந்தையும் தாயும் வருவதைப் பார்த்து விட்டு மாடிக்கு சென்று தூக்குமாட்டி இறந்து விட்டார். என் தந்தை இந்த விஷயம் பிரச்சனையாகமல் முடித்து வைத்தார். என் பாட்டியின் நிலைமை மிகவும் இக்கட்டானது .ஏனென்றால் என் பெரியம்மாவின் கணவர் மைனராக வாழ்ந்தார். இருந்த சொத்தையெல்லாம் கரைத்து தம்பி மேலேயே கேஸ் போட்டு ஏழு வருடம் கேஸ் நடத்தி கால் பங்கு வீடு அவருக்கு தீர்ப்பானது. அந்தக் காலத்துப் பெண்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று நினைத்தாலே மனது கனக்கிறது. என் பாட்டியும் பெரியம்மாவும் அப்படி ஒரு நிறம். அப்படி ஒரு அழகு. ஆனால் வாழ்க்கையோ என்ன சொல்வது . உயர்குடியில் பிறந்தும் பணங்காசு இருந்தும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்து பெண்களால் வெளிவர முடியவில்லை.
என் தாய் பாட்டுபாடிப் ஒருநாளும் நான் கேட்டதில்லை. எந்த ஒரு விஷயமும் தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை. கணவருக்கும் ,ஆண் பிள்ளைகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்து மறைந்து விட்டார் . பத்துப் பிள்ளைகள் பெற்றவர் , முதல் குழந்தை பிறந்த மறுநாளே இறக்க ,மூன்றாவது குழந்தை (பெண்) டிப்தீரியா வந்து இரண்டரை வயதில் இறந்து போனது. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஒரு வாரத்தில் என் ரெண்டாவது அண்ணன் பிறந்தார். அடுத்தடுத்து துன்பமும் இன்பமும் ஏற்பட என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார் நினைக்கவே பயமாக இருக்கிறது.
பயணம் இன்னும் தொடரும் ,
நாச்சம்மை.


அம்மா ...மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு 🙏🙏🙏
ReplyDeleteThank you Akhila. 😊
DeleteNice one amma
ReplyDeleteThank you Veena! 😊
DeleteArumaiyana Amma
ReplyDeleteThank you. 🙂
Deleteஅருமையான பதிவு அம்மா🙏😊
ReplyDeleteThank you Vidhya. 😊
ReplyDeleteசாதனைகள் நிறைந்த பெண்கள் பலபேர்....சமையலறையிலே வாசனை இல்லாமல் போய் விடுகின்றனர் அம்மா!
ReplyDelete