நாச்சியாரின் பயணம் தொடர்கிறது..
-நாச்சம்மை
தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் தந்தைக்கும் உண்டுதானே. உய்யக்கொண்டான் சிறுவயல் என்ற ஊரில் 1916-இல் பிறந்தார். அவரது ஒன்பதாவது வயதில் தாயை இழந்தார். எனவே என் தாத்தா மகனை பர்மாவிற்கு அழைத்துச் சென்றார். முதலாளி மகனாக இருந்த போதும் வேலையால் போன்றே நடத்தப்பட்டார். படிப்படியாக தொழிலை கற்றுத் தேர்வதற்காக அப்படி நடத்துவார்கள். நாலு மணிக்கு எழுந்து குளித்து இடுப்பில் ஒற்றை துண்டுடன் உடம்பு முழுக்க விபூதி பூசி தேவாரம் ,திருவாசகம் ,திருப்புகழ் பாடல்களை ஒப்புவிக்க வேண்டும். இல்லையென்றால் பிரம்பு அடிதான். அப்படி ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை. 12 வயதில் இந்தியாவிற்கு திரும்பி பள்ளத்தூர் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்தார். எனவே எஸ்.எஸ்.எல்.சி படிப்பை 18 வயதில் தான் முடித்தார். அதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது.
சென்னைக்கு (அப்போது மெட்ராஸ் ) வந்து வாடகை வீட்டில் என் தாயுடன் இருந்து பியூசி முடித்தபிறகு பிரசிடென்சி காலேஜ் இல் பி எஸ் சி பிசிக்ஸ் படித்தார். இடையில் முதல் குழந்தை பிறந்து இறக்க என் தாயாரை வீட்டிலேயே வைத்துக் கொண்டு மாமியாரை வரவழைத்து பிரசவம் பார்த்தார். டி. நகர் ராமன் தெருவில் நாலு கிரவுண்ட் இடம் வாங்கி வீடு கட்டினார். இடையில் கல்லூரியில் கட்டை வண்டி என்ற நாடகத்தில் வேறு நடித்தார். படிப்பு முடிந்தவுடன் சிறுவயலுக்கு முதல் கிராஜுவேட் ஆக சென்றார். அந்த ஊரில் முதல் கார் என் தந்தை வாங்கியதே. பேபி ஆஸ்டின் கார் மாட்டு வண்டி (ஊர் விட்டு ஊர் போக) ரேக்ளா வண்டி( ரேக்ளா வண்டி ரேஸில் சென்று கலந்து கொள்வார்). பால் மாடுகள் என மாடுகள் கட்டி வைக்கும் தளைகள் இன்றும் சிறுவயலில் நிறைய இருக்கிறது. வண்டிகள் வைக்க வண்டி கட்டு என்ற இடம் உண்டு. வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார். இறுதி காலம் வரை கர்நாடக சங்கீதத்தை ரேடியோவில் கேட்டுக் கொண்டிருப்பார் .சங்கீத புலமை மிக்கவர்.
திடீரென்று பர்மா நொடிந்துப் போக அவரது வாழ்க்கை தலைகீழானது. வேலை தேடி சிபாரிசுக்கு ஒருவரிடம் செல்ல அவரோ நீ என்னிடம் வேலைக்கு சேரு பாங்க்கை விட அதிக சம்பளம் தருகிறேன் என்று வெங்கடேசா மில்லில் மேனேஜராக சேர்ந்தார். அதேசமயம் பேங்க் வேலையில் சேர்ந்த கதிரேசன் செட்டியார் ஐ.ஒ.பி யில் ஜெனரல் மேனேஜராக ரிடையர் ஆனார். இதை தான் தலையெழுத்து என்பதா .இல்லை அதே கதிரேசன் இடம் மாப்பிள்ளைக்காக சிபாரிசுக்கு சென்றாரே அதை சொல்வதா.
ஒரு சமயம் கோதுமை உப்புமா சாப்பிட மறுத்த எனக்கு அவர் கதையை கூற எனக்கு கண் கலங்கியது. ராஜ வாழ்க்கை வாழ்ந்த அவர் (டி .நகர் வீட்டில் 6 வேலையாட்கள் வைத்திருந்தார்) காந்தியின் கொள்கைகள் பிடித்ததால் அவர் சொல்படி நடந்தார். கதரை தவிர வேற உடைகள் அணிவதில்லை. அவருடைய துணியை அவரே துவைத்து, நீவி காயப் போட்டு மடித்து வைப்பார். வெளிவேலை ,உள்வேளை என எதற்கும் அஞ்சியது இல்லை.
நாங்கள் எட்டு பிள்ளைகள் தவிர பெரியப்பாவின் பிள்ளைகள் நான்கு பேர் மொத்தம் 12 பேர் ,8 ஆண் பிள்ளைகளையும் தன் வீட்டில் ஒவ்வொருவராக அழைத்து வந்து வேலைக்கு சேர்த்து விட்டு வீட்டிலேயே தங்கச் சொல்லி பராமரித்தார். அது போதாதென்று என் மாமா மகன் ,அத்தையின் கடைசி மகன் எல்லோரும் எங்கள் வீட்டில் தங்கி படித்து பிறகு வேலைக்கு சென்றார்கள். உறவினர்கள் எல்லோரும் நாங்கள் சென்னையில் இருந்ததால் அடிக்கடி வருவார்கள். அத்தையின் கணவர் சைகோனில்(வியட்நாம் ) இருந்தும் அவர் மகன் சிங்கப்பூரில் இருந்தும் எல்லாமே எங்கள் வீட்டில்தான் ,அந்தக்காலத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் சாமான்களுக்கு டியூட்டி கட்டித்தான் கொண்டு வர முடியும். பணம் கொண்டு சென்று அவர்களை அழைத்து வருவார்.
எங்களை அவர் அடித்ததே இல்லை ஒரே பார்வை தான் எல்லோரும் அடங்கி விடுவோம். பம்ப் ஸ்டவ் , கேஸ் ஸ்டவ் என எல்லா சாமான்களையும் அவரே ரிப்பேர் செய்து விடுவார். ரேடியோ மெக்கானிசம் படித்தார் .கடவுள் அருளால் என் அண்ணன் தம்பி ஐந்து பேரும் மிக நன்றாக படித்தார்கள். அவருக்கான வேலையை அவர்களே தேடிக் கொண்டனர். டாப் மோஸ்ட் போஸ்டில் இருந்துதான் எல்லோரும் ரிட்டையர் ஆனார்கள். முதல் அண்ணன் நெய்வேலி மைன்ஸ் எஸ்.இ ஆக ரிடையர் ஆனார் .இரண்டாவது அண்ணன் மிலிட்டரியில் கர்னலாக ரிடையர் ஆனார் . மூன்றாவது அண்ணன் பேங்க் ஆப் பரோடா பிரான்ச் மேனேஜர். நான்காவது அண்ணன் கிண்டி ஏ.சி .டெக்கில் படித்து 1969 இல் அமெரிக்காவில் சென்று படித்து அங்கேயே செட்டில் ஆக, என் தம்பி சென்னை( கிண்டி) ஐ.ஐ.டி ல் படித்து , பின்பு அமெரிக்கா சென்று படித்து வேலையில் சேர்ந்து செட்டிலானார். பெரிய அக்காவுக்கு மட்டும் உறவினர்கள் கட்டாயத்தால் 16 வயது முடியும் போதே என் அத்தை பையனுக்கு கட்டிக் கொடுத்தார். சின்னக்கா பிஎஸ்சி கெமிஸ்ட்ரி ,நான் பி.ஏ தமிழ் படித்தோம். அடுத்த வீட்டில் இருந்த என் தோழியின் அம்மா சொல்வார்கள் செட்டியாரை பாருங்கள் 8 பிள்ளைகளையும் எப்படி வளர்த்திருக்கிறார். ஒருவரும் சோடை போகவில்லை. அந்தப் பாராட்டு என் தந்தைக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி ஆகும். தன் தாய் தந்தையருக்கு வருடம் தவறாமல் திவசம் கொடுத்தவர் மறைந்தது, தை அம்மாவாசைதினத் தன்று.

உங்களுடைய வாழ்க்கை எங்களுக்கு நல்ல பாடம்🙏🙏
ReplyDeleteபிரம்பு அடி, முதல் கிராஜுவேட், முதல் கார், வயலின், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் சாமான்களுக்கு டியூட்டி கட்டி அழைத்து வருவது, பம்ப் ஸ்டவ் , கேஸ் ஸ்டவ் ரிப்பேர், ரேடியோ மெக்கானிசம், 12 பிள்ளைகள் வளர்ப்பு....இப்படி பல சுவாரசியமான தகல்வள் ஆர்வ மிகுதி அளித்துள்ளது! அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் அம்மா!!!
ReplyDelete