Saturday, January 25, 2025

ரயில் கொடுத்த உரிமை by Veena Shankar

 


ரயில் கொடுத்த உரிமை


வெளிநாட்டிலிருந்து திரும்பி நம் சொந்த ஊருக்கு வருவதென்றால் எல்லோருக்கும் குஷி தான். என்ன தான் அங்கே சம்பளம் கொட்டி கொடுத்தாலும் இங்கே இருக்கும் சுதந்திரம் நாம் இனிதாய் கடந்த நாட்களும் மக்களும் நினைவிலிருந்து நீங்க மாட்டார். இங்கே உள்ள காற்று மாசு, வெயில், குளிர் எதுவும் நமக்கு பழக்கமானதே. இங்கு இருக்கும் போது வெளிநாட்டை பற்றி பேசும் நாம் அங்கே சென்ற சில நாட்களில் நம்மூரை நினைக்க தொடங்கி விடுவோம் என்பதே உண்மை. அதை வெளிக்காட்ட மனம் சிலசமயம் மறுக்கவும் செய்யும்.

சென்னை வந்திறங்கியவுடன் அக்கம் பக்கத்து சுற்றத்தாரை காண வேண்டி கார் பிடித்து சந்தித்த நிலையில் நான்கு நாட்கள் கடந்து விட்டது. என் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் தான் முன் பதிவு செய்து பயணித்தேன். குளிர்சாதனப் பெட்டியில் வரும் அளவிற்கு வசதி இருந்தாலும் நம் ஊர் மண்ணைத் தொட்டதும் சிக்கனம் நெஞ்சை பற்றிக் கொண்டது. வளர்ந்த விதம் அப்படி. மேலும் அங்கே ஒவ்வொரு இடத்திற்கும் ஆகாய வழி பிராயணம் செய்து அலுத்து போய்விட்டது. அதான் சாதாரணப் பெட்டியில் பயணம் செய்து மக்களின் நிலையை அறிய ஆவலும் மேலோங்கி இருக்க பயணப்பட்டேன். இரவு நேரப் பயணம் என்பதால் அனைவரும் தூங்க நான் மட்டும் கோட்டானாய் விழித்திருந்தேன். டிக்கெட் பரிசோதகர் பல முறை வந்து தன் வேலையை செய்து கொண்டிருக்க ஒரு ஆணை சரமாரியாக கடிந்து கொண்டார். அவனும் அப்படி இப்படி என்று நடந்து மழுப்ப வேறு பெட்டிக்கு மாறும் படி சொல்லி நகர்ந்தார். அவனும் நான் மட்டும் விழித்திருந்ததால் தன் பெட்டியை ஒரு ஒரமாக வைத்து விட்டு அதை என்னிடம் பார்த்து கொள்ளுமாறு சென்று விட்டான். கதவோரம் என் இருக்கை என்பதாலும் அவன் பெட்டியின் சுமையை என்னிடம் ஒப்படைத்ததாலும் கண் அயர இருந்த நானும் முழித்து கொண்டே வந்தேன். இங்கே மட்டும் தான் அடுத்தவரிடம் நம் உரிமையை இலகுவாக திணிக்க முடியும் என்று எண்ண தோன்றியது எனக்கு. பிறகு என்ன? செய்யாத தவறுக்கு அனுபவிக்கும் தண்டனை போல நானும் அவனுடைய பெட்டியை பாதுகாத்து வந்தேன் அவன் இறங்கும் வரை. அவனுடைய என் மீதான நம்பிக்கை கூட எனக்கு பிடித்திருந்தது.


 உரிமைகள் இலவசம் என்றாலும் அது பூப்பது அழகான அன்பினாலே!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...