செவித்திற(ன்)மை
"சீக்கிரம்! மணி எட்டு ஆச்சு. இன்னும் என்ன செய்யுற சமையல்கட்டுல ? எட்டேகாலுக்கு எனக்கு பஸ் வந்திடும். தெரியும் தானே? எப்ப பார்த்தாலும் வேலைய மெதுவா செஞ்சு என்னை டென்ஷன் ஆக்குறதே உன் பொழப்பா போச்சு. எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வேலையை சீக்கிரம் பாருன்னு. உன்னோட கத்தி கத்தியே என் ஆயுசு போயிடும் போல, இதுக்கு எதுக்கு நீ காலைல அஞ்சு மணிக்கு எந்திரிக்கணும்? எனக்கு உன் டிபனும் வேண்டாம், மதியம் சாப்பாடும் வேண்டாம் " என்று சொல்லி கொண்டே சமையலறைக்கு குமார் செல்ல, அப்போது தான் உமா தட்டில் இடியாப்பமும் தேங்காய்பாலும் எடுத்து வந்து நீட்டினாள். " உன்னை யாரு இதை காலை வேளையில் பண்ண சொன்னா? லீவு நாள்ல செய்ய வேண்டியது தானே? " என்று மறுபடியும் அவளை கடிந்து கொண்டே பார்க்க, அவள் காதில் வைத்திருந்த காது கேட்கும் கருவியின் சத்தம் குறைக்கப்பட்டிருப்பது தெரிந்து, " ஐயோ இது வேறையா? இவ்வளவு நேரம் நான் சொன்னது எதுவுமே உனக்கு கேட்கலையா ? சரியா போச்சு . எத்தனை முறை சொல்லியிருக்கேன். செவிட்டு மிஷனை சரியா வைன்னு. " என்று சொல்லியவாறே அதை சரி செய்தான்.
குமார், உமாவிற்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலேயே வீட்டு பக்கத்தில் உள்ள கல் குவாரியில் கல் உடைக்க வைத்த வெடியின் அதிர்வால் உமாவின் காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி இழக்க, இப்போது முழுவதுமாக கேட்காமல் போனது.
எனவே டாக்டரின் பரிந்துரையின் பேரில் அவளுக்கு காது கேட்கும் மிஷன் பொருத்தப்பட்டது.
குழந்தைகள் இல்லாததால் விரக்தியில் எப்போதும் குமார் இப்படி தான் உமாவிடம் சண்டை பிடிப்பான். இதனால் இருவருக்கும் வீண் விவாதம் வந்து கொண்டேயிருந்தது.
"சரி! சரி! இந்தாங்க! டிபனும் கட்டிட்டேன்" என்று சொல்லியவாறே சாப்பாட்டு பையை வைத்தாள் உமா. அவனும் அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்பினான். "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டாள் உமா. " எப்ப பார்த்தாலும் நொய் நொய் ன்னு கத்திகிட்டே இருக்கார். இவர் பேசறது கேட்ககூடாதுன்னு நினைச்சு தானே அதுல இருக்குற சத்தத்தை குறைச்சு வச்சேன். இவர் கத்துற கத்தல் எட்டு ஊருக்கு கேட்கும். இதிலே என்னை வேற செவிடுனு கூப்பிடறார. எனக்கு என்ன காதுக்கு மிஷன் வைச்ச பிறகும் கேட்காமலா இருக்கு? எனக்கு என்ன பிள்ளையா? குட்டியா? அவசர அவசரமா வேலை பார்க்கணுமாம் . இதோ இன்னும் ஒருசில வேலைதான் பாக்கி இருக்கு. அதை முடிச்சிட்டு பத்து மணிக்கு நாடகம் பார்க்க உட்கார்ந்தேன்னா இரண்டு மணி வரை பொழுது போயிடும். அப்புறம் சாப்பிட்டு தூங்கி எழ, பால்காரர் வருவார். காபி போடவும் இந்த மனுஷன் கரெக்டா வந்து நிற்பார்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டே வீட்டு கதவை சாத்தினாள் உமா.
கேட்கும் திறன் இழப்பதும் நல்லது தானோ?
எது கேட்க வேண்டுமோ அது கேட்காமல், தேவையில்லாததை கேட்க வைத்து இந்த செவி செய்யும் அநியாயம் இருக்கிறதே சொல்லி மாளாது.
என் கூற்று சரி தானே?

























