தோழனா ? - எதிரியா?
தமிழ் வகுப்பு என்றாலே மாணவர் அனைவருக்கும் அல்லாது அடுத்த பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பொருட்டு இல்லை தான். ஆனால் பத்தாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ரங்கசாமி இதற்கு விதிவிலக்கு என்றே சொல்ல வேண்டும். அவர் பாடத்தில் எந்த ஒரு மாணவனும் தோற்பதில்லை , குறையாமல் எழுபது விழுக்காடு எடுத்து விடுவர். இத்தனைக்கும் அவர் வகுப்பை பல ஆசிரியர்கள் சூறையாடினாலும் வெற்றி அவர்பகம் தான். "ஐயா, உங்கள் பாடத்தில் மாணவர்கள் எழுபது விழுக்காடு எடுத்துவிடுகிறார்கள், அதனால் நீங்கள் எப்படியும் பாடத்தை தேர்வுக்குள் முடித்து விடுவீர்கள். எங்களுக்கு தான் சிரமம்" என்று மற்ற ஆசிரியர்கள் சொல்வது வழக்கமாகி விட்டது. பாடத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுப்பது என்பது ஒரு சவால் தான். பல பேர் மேலோட்டமாக நடத்துவர். சிலர் விளக்கம் கொடுத்தே நேரத்தை கழிப்பர். ஒரு சிலரே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பர். அதில் விளக்கம் நிறைய கொடுக்காமல் செயல்முறையிலே பாடம் நடத்துவதில் வல்லவர் ரங்கசாமி.
நடைமுறைக்கு தேவையான பாடங்களையும் தன் தனி மற்றும் தமிழ் திறனை கொண்டே வளர்ப்பார்.
ஒவ்வொரு வாரக் கடைசி தினத்தில் மாணவர்களின் செயல் திறனை சோதிப்பார்.
அன்றைய தினம் வார இறுதி நாள் என்பதால் மாணவர்களை ' தோழன் அல்லாதவர்களுக்கு ' கடிதம் எழுத பணித்தார். எல்லோரும் ஒரு தாளில் தங்கள் கருத்தை கடிதம் வாயிலாக எழுதி முடித்து ஆசிரியரிடம் கொடுக்கவும் பள்ளி மணி அடிக்க, ரங்கசாமி அடுத்த வாரத்தில் இதன் முடிவை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார்.
அடுத்த வாரம் வரை மாணவர்கள் காத்திருக்க, அந்த நாளும் வர எல்லோரிடமும் அவரவர் தாளை ரங்கசாமி வழங்க, அனைவருக்கும் பூஜ்யம் மதிப்பெண் இடப்பட்டிருந்தது குறித்து மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர்.
மாணவர்களின் நிலையைக் கண்ட. ஆசிரியர், " இது வரை யாரும் இந்த மதிப்பெண் வாங்கியதில்லை என்று எனக்கு தெரியும். நீங்கள் உங்கள் கருத்தை கடிதம் வாயிலாக எழுதியது ஏறக்குறைய சரியென்றாலும் என் தலைப்பை மீண்டும் சொல்கிறேன்" என்று தலைப்பை மறுபடியும் சொல்ல, மேலும் அவரே "தோழன் அல்லாது என்றால் எல்லோரும் எதிரி என்று பொருள் கொண்டு உங்கள் கடிதத்தை எழுதியுள்ளீர்கள். எதிரியை வசப்படுத்தும் திறமையும் உங்கள் எழுத்தில் தெரிய வந்தாலும் நான் நினைத்தது அதுவல்ல. தோழன் அல்லாது அதற்கு எதிர்ப்பதமாய் "தோழி" என்ற சொல் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டதும் எல்லோரும் ஒரு நிமிடம் அசந்து விட்டனர்.
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவார் ரங்கசாமி. இதையே நாளைக்கு ஒரு தாளில் வீட்டுப் பாடமாக எழுதி வரச் சொன்னார் .
விளக்கமான பாடத்தை விட திறனறி தேர்வு வைத்து பாடங்களை நடத்துவதில் இவருக்கு மிஞ்சியவர் அவரே!
மனனம் செய்வது கடினம். புரிந்து படிப்பது எளிது.

No comments:
Post a Comment