புண்பட்ட மனம்
வாரம் ஒருமுறை ஊரில் இருக்கும் பெரிய சிவன் கோவிலுக்கு தாரிணியும் அவள் கணவன் பாலுவும் செல்வது வழக்கம். அப்படி செல்லும் பொழுது கோயிலுக்கு வெளியே வாசலில் யாசித்து கொண்டிருப்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும் தலா ஐந்து ரூபாய் கொடுத்த பின் தான் கோயிலுக்கு உள்ளேயே செல்வாள் தாரிணி. கோயில் பெரியது என்பதால் கோயிலுக்கு உள்ளே சில ஆண் - பெண்கள் தூய்மை பணியில் தாங்களாகவே முன் வந்து கோயிலை சுத்தம் செய்வது வழக்கம். இதில் வயதானவர்களும் அடக்கம். அவர்களால் முடிந்த உதவிகளை செய்வதாலும் வயோதிகத்தை எண்ணியும் அவர்கள் செய்யும் செயலுக்காக பக்தர்கள் பலர் பண உதவி செய்வர். தாரிணியும் அப்படித்தான் கோயிலுக்கு வரும் போது அவர்களுக்கு சன்மானம் கொடுத்து வந்தாள். ஆனால் அவள் கொடுப்பதை வாங்க முதலில் மறுத்த வந்த அவர்கள், நாளடைவில் அந்த பணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஒரு சில நாட்கள் பக்தர்கள் பலர் தங்கள் கடனை கழிக்க, அன்னதான பொட்டலத்தை காலையிலேயே அங்கே இருப்பவர்களுக்கு வழங்கி செல்வார்கள். அது அங்கே வேலை செய்பவர்களுக்கும் யாசிப்பவர்களுக்கும் காலை பசியை தீர்க்க உதவியது. மேலும் கோயிலில் அன்னதான திட்டத்தின் கீழ் மதிய உணவு இலவசமாக கிடைப்பதாலும் பிறர் கொடுத்து உதவும் காசும் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட போதுமானதாக இருந்தது.
அன்றைய தினம் பாலு வெளியூர் சென்றதால் தாரிணி மட்டும் தன் குழந்தையுடன் கோயிலுக்கு சென்றாள். கணவன் சகிதமாக கோயிலுக்கு வருவதால் அவள் தன் கைப்பையை என்றும் தன்னுடன் எடுத்து வருவதில்லை. அன்று அவர்களுக்கு கொடுக்க வேண்டி, தான் கிளம்பும் போது தன் கைப்பையின் பக்கத்திலேயே பத்து ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து வைத்திருந்தாள். ஆனால் அவசரத்தில் அதை தன் கைப்பையில் எடுத்து வைக்க மறந்து விட்டாள். தன் இருசக்கர வாகனத்தை கோயிலுக்குப் பக்கத்தில் நிறுத்தி விட்டாள். படி ஏறும் பொழுது கையேந்தி நிற்பவர்களை பார்த்ததும் தான், தான் தன் கைப்பையில் பணத்தை வைக்க மறந்ததை உணர்ந்தாள். தன்னுடைய கையில் உள்ள பணம் எல்லோருக்கும் கொடுக்க போதுமானதாக இருக்காது என்பதால் அடுத்த முறை கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டே குனிந்த தலை நிமிராமல் தன் குழந்தையுடன் கோயிலுக்கு உள்ளே சென்றாள் தாரிணி. இவள் வருகையையும் அவள் கொடுக்கும் பணத்தையும் எதிர்பார்த்திருந்த கூட்டத்திற்கு அது ஏமாற்றமாக அமைந்தது.
கோயிலை சுத்தம் செய்துவிட்டு இளைப்பாற அமர்ந்த கூட்டம் இவளைப் பார்க்க, தாரிணி அவர்களை பார்க்காதது போல் நேரே சிவன் சன்னதிக்குள் சென்று விட்டாள். அர்ச்சனை, தீபாராதனை காட்டிய முதியவருக்கு மட்டும் ஐம்பது ரூபாய் நோட்டை தட்டில் போட்டு விட்டு விபூதி பிரசாதத்தை பெற்றுக் கொண்டாள். கோயில் பிரகாரத்தை சுற்றி வெளியே வந்தாள். அப்போது பணக்கார தோரணையோடு இருந்த பெண்மணி ஒருவர், அங்கு இருக்கும் அனைவருக்கும் நூறு ரூபாய் கொடுத்து கொண்டிருக்க தங்கள் கைகளை கட்டிக் கொண்டு, வாயில் பல் தெரிய “நூறு ரூபாய் கொடுத்திருக்கீங்க! மகராசி நீங்க நல்லா இருக்கணும்.” என்று அக்கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அனைவரும் அப்பெண்மணியை வாழ்த்தினார்கள். மேலும் “அஞ்சு - பத்து போடுறவங்க மத்தியில இந்த அம்மா நூறு ரூபாய் கொடுத்து இருக்காங்க” என்று ஒருவரை ஒருவர் சொல்லிக் கொண்டு தாரணியை ஓரக்கண்ணால் பார்த்து, மட்டம் தட்டியபடியே பேசியது தாரணியின் காதிற்கு விழாமல் இல்லை.
ஒருநாள் கிடைக்கும் பணத்திற்காக தன்னைத் தாழ்த்தி பேசிய அவர்களை நினைத்ததுமே சற்று கோபம் வரத்தான் செய்தது தாரிணிக்கு. இருந்தாலும் அவர்களை இழிவு படுத்த அவள் விரும்பவில்லை. அவள் அப்படி பேசியிருந்தால் அவர்களுக்கும் தனக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது என்று மட்டும் நினைத்தாள். இனி அவர்களின் வேலைக்காக தான் சன்மானத்தை கொடுக்கப் போவதில்லை என்றும் முடிவெடுத்தாள். அதற்கு பதிலாக உண்மையாகவே ஏழ்மையில் தவிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என நினைத்து தன் ஊரில் உள்ள பெரிய அரசு பள்ளியை நாடிச் சென்றாள். இறைவன் கோயிலில் மட்டும் குடியிருப்பது இல்லை; கற்கும் கூடத்திலும் இருக்கிறார் என்பதை மனதார உணர்ந்தாள். அவளின் வருகைக்காக கோயிலில் காத்திருந்த கூட்டம் அந்நியமானது அவளுக்கு, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அன்பை கண்டதும். மற்றொரு நாள் “கோவிலுக்கு வாங்க” என்று தன் கணவன் பாலுவை அழைத்துக்கொண்டு தாரிணி பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். விழித்து நின்ற பாலுவுக்கு கோயிலில் புண்பட்ட தன் மனதிற்கு விடை கிடைத்தது இங்கே தான் என்று காட்டினாள் தாரிணி.
கொடுக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை தான். ஆனால் அதை யாருக்கு கொடுக்கிறோம் என்பதில்தான் நம் அறிவு பொதிந்திருக்கிறது.
கொடுக்கும் குணம் பெரியது. அதை ஏற்றுக் கொண்டு கொடுத்தவரை சாடாமல் இருப்பது அதைவிடப் பெரியது.

No comments:
Post a Comment