Friday, December 23, 2022

கடையில் ஒரு நகைச்சுவை by Veena Shankar

 


கடையில் ஒரு நகைச்சுவை 


                                      ஒரு பலசரக்கு கடைக்கு சென்ற முதியவர் ஒருவர் ‘சாக்குப்பை கொடுங்க.” என்றார். கடைக்காரரும் “எத்தனை வேண்டும்?” என்று கேட்டபடியே அதை எடுத்து வர உள்ளே சென்றார். “ஒன்று எத்தனை ரூபாய்?” என்று விசாரித்த பெரியவருக்கு உள்ளே சென்றவர் பதிலளிக்கவில்லை. வரும் பொழுது நாலைந்து சாக்குப் பையை தன் கையில் எடுத்து வந்தார். “எத்தனை வேண்டும்?” என்று மறுபடியும் கடைக்காரர் கேட்க, “ஒரு சாக்கு பை எத்தனை ரூபாய்?” என்று மறுபடியும் விசாரித்தார் பெரியவர். “ ஒன்று இருபத்தைந்து ரூபாய் வரும்” என்று கடைக்காரர் சொல்ல, “அவ்வளவு ஆகுமா?” என்று சொன்னவரிடம் “சரி நீங்க பதினைந்து ரூபாய் மட்டும் கொடுங்க போதும் “ என்று அவர் கையில் சாக்குப் பையை திணிக்க, பெரியவர் ஒன்றும் புரியாமல் விழித்து நின்றார். “ என்ன பெரியவரே சாக்கு பை கேட்டு அதை வாங்க இவ்வளவு நேரமா?” என்று கடைக்காரர் கேட்க, “நான் இதைக் கேட்கவில்லை. சாக்குப்பை எனக்கு எதற்கு? என் பேரன் சாப்பிட சாக்குப்பை கேட்டான். அதை கொடுங்க. இன்று அவன் பிறந்த நாள் என்பதால் அவனுக்கு அந்த தின்பண்டத்தை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுகிறேன்.” என்று சொல்ல, இப்போது கடைக்காரர் விழித்து நின்றார். பெரியவர் சொல்வது என்ன என்பது போல் சுற்று முற்றும் இருந்தவர்களை பார்க்க, அப்போது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த சிறுவன் ஒருவன், “தாத்தா சாக்குப்பை கேட்கலை அண்ணே! அவரு “ சாக்கோ பை பிஸ்கட்” கேட்கிறார் என்று சொல்லி கடைக்காரருக்கு புரிய வைத்தான். “ஆமாம். ஆமாம்” என்று தலையை ஆட்டி மறுபடியும் “எத்தனை ரூபாய் அது?” என்று கேட்டார் பெரியவர். தலையில் அடித்துக்கொண்டே “ஒரு பிஸ்கட் இருபது ரூபாய்” என்று சொல்லி எத்தனை வேண்டுமென பெரியவரிடம் கேட்டார் கடைக்காரர். “மூன்று கொடுங்க” என்று சொல்லி ஆசையுடன் தன் பேரனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொண்டு சென்றார் அந்த பெரியவர்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...