சமையல் சந்தேகம்
தலைவலியோடு வீட்டிற்குள்ளே வந்த வந்தனா, பில்டர் காபி போட்டு குடித்தாள். மணி ஏழரையை தொட ராத்திரிக்கு என்ன டிபன் செய்யலாம் என ஆபீஸ்லையே முடிவெடுத்து வந்திருந்தாள். தன் கணவன் முகுந்தனுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தாள். திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தனி குடுத்தனம் வந்த வந்தனாவுக்கு சமையல் அவ்வளவு தெரியாது என்றாலும் தன் அம்மாவை கேட்டு கேட்டு செய்ய தொடங்கினாள். ஒரு மாதம் வரை ஹோட்டல், மெஸ் , ஸ்விக்கி என்று ஆர்டர் செய்து சாப்பிட்டனர். சில உடல் உபாதைகளின் காரணத்தினால் தானே சமைக்க முடிவெடுத்தாள் வந்தனா.
தன் அலைபேசியை கையில் எடுத்தாள். "அம்மா இன்னைக்கு ராத்திரிக்கு முகுந்தனுக்கு பிடிச்ச பால் கொழுக்கட்டை செய்யலாம்னு இருக்கேன். கொஞ்சம் செய்முறையை சொல்லுமா" என்றாள். "இப்பத்தான் யூட்யூபில் வருகிறதே. அதை பாரு. உன் வயசுல நான் இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டேன். வயதுக்கு வந்து விட்டாலே சமையல்கட்டு பக்கம் எட்டி பார்க்கணும். இல்லைன்னா தோலை உரிச்சிடுவாங்க எங்க அம்மா. உப்பு , புளி எல்லாம் அம்மா அளவு சொல்ல , நான் தான் சமையல் செய்வேன். உன்னை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. நீ டான்ஸ் கிளாஸ், டியூஷன்னு நிறைய படிக்க வேற இருந்தது . அதனால நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல." என சொல்ல , "அம்மா!ரெசிபி மட்டும் சீக்கிரம் சொல்லுமா. நேரமாகுது. முகுந்தன் வந்துடுவாரு" என்று வந்தனா சொல்ல, "நானும் இன்னைக்கு அப்பாவுக்கு பிடிக்குமுன்னு பால் கொழுக்கட்டை செய்யலாம்னு இருக்கேன். அதனால முடிஞ்சா எட்டு மணிக்கு வீடியோ கால்ல வா. இல்லைன்னா இன்னைக்கு மட்டும் ஸ்விக்கி ல ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க. நாளை காலையில பார்த்துக்கலாம் ." என சொன்னதும் " அம்மா! இல்லம்மா ஷார்ப்பா எட்டு மணிக்கு வீடியோ கால் பண்றேன். இன்னிக்கு முகுந்தனுக்கு பிறந்த நாள். என் கையால அவருக்கு பிடிச்சதை செய்யணும்னு ஆசைபடறேன். " என்று வந்தனா சொன்னாள். " ஆமா! காலையில மாப்பிள்ளைக்கு விஷ் பண்ணதையே மறந்துட்டேன்." என்று அம்மா சொல்லி வந்தனாவின் அழைப்பை துண்டித்தாள். மணி எட்டானதும் வந்தனா அம்மாவிற்கு வீடியோ கால் போட, அம்மா ஒவ்வொன்றாக சொல்ல, இரு வீட்டிலும் பால் கொழுக்கட்டை அரங்கேறியது. நடு நடுவே வந்தனாவின் அப்பாவும் தலையைக் காட்டினார்.
ஆறு மாதங்கள் சென்ற நிலையில் மறுபடியும் ஏற்கனவே தான் கேட்டு சமைத்திருந்த வத்தல் குழம்பு பற்றி வந்தனா தன் அம்மாவிடம் கேட்க," யூடியூபில் பார்த்துக் கொள்" என்ற அம்மாவுக்கு "எனக்கு நீங்க செய்யற டேஸ்ட் வேணும். அதனால தான் கேட்கிறேன்" என்று வந்தனா கோபப்பட, "வந்தனா! 'எங்க ஊர் சமையல் போய்' பார் " என்றாள் அம்மா. "அந்த சேனல் நல்லா இருக்குன்னு லதா ஆபீஸ்ல சொன்னா " என்று வந்தனா சொல்லவும் "அடி மக்கு! அது என்னுடைய சேனல் டி. உனக்கு ஒவ்வொரு ரெசிபி சொல்லிக் கொடுக்கும் போதும் உன் அப்பா அதை வீடியோவா பிடிச்சு சேனல்ல போட சொன்னாங்க. புது சேனல் ஆரம்பிச்சது பற்றி நான் மாப்பிள்ளை கிட்ட சொன்னேன்." என்றாள் அம்மா. "ஆமா! அவரு என்கிட்ட சொன்னாரு. ஆனா அது உங்க சேனல்ன்னு எனக்கு தெரியாது. அவருக்கு சமையல் பற்றி என்ன தெரியும் என்பதால் நான் அதை பெருசா எடுத்துக்கல. ஆனால் புதுசா ஆரம்பிச்ச சேனல் பத்தி ஏன் நீங்க என்கிட்ட சொல்லல? ஆரம்பிச்சு எத்தனை நாள் ஆகுது? " என செல்லமாக கடிந்து கொள்ள, "நான் உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சப்போ, அப்பா இப்ப சொல்ல வேண்டாம். இன்னும் ஏதாவது ஒரு ரெசிபியை வந்தனா இரண்டாவது முறையாக கேட்கும் போது சொல்லிக்கலாம். ஆனால் மாப்பிள்ளை கிட்ட மட்டும் சொல்லு என்று சொல்லிட்டாரு. ஆனாலும் மாப்பிள்ளை உனக்கு ஜாடையாக சொல்லியிருக்கிறார் . உனக்கு தான் தெரியும் இல்ல நான் அப்பா பேச்சை கேட்கிறவள் என்று" அம்மா சொன்னதும் நான் தான் முகுந்தன் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்று தன்னையே நொந்து கொண்டு தன் அம்மாவின் சேனலுக்கு ஒரு லைக் போட்டு வீடியோவை பார்க்க தொடங்கினாள் வந்தனா.

புது புது எண்ணங்கள் பல சந்தேகமாக வீணாவிற்கு மலர வாழ்த்துக்கள்👌🏻
ReplyDeleteநன்றி வித்யா
Delete