காலையில் நான் கண்ட காட்சி
எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கும் பழக்கம் உள்ளது. நகரத்தில் செய்தித்தாள் போடுபவர் போல செய்தித்தாளை தூக்கி எறிந்து வீசாமல் எங்கள் கதவில் சொருகி வைப்பது எங்கள் ஊர் செய்திதாள் போடுபவரின் வழக்கம். அன்றைய தினம் என் கணவர் வெளியூர் சென்றிருந்ததால், அதை எடுப்பதற்காக என் வீட்டு வெளிக் கதவுக்கு சென்றேன். செய்திதாள் எடுக்க செல்லும் பொழுது என் வீட்டிற்கு வெளியே இருந்து ஒரு என்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எங்கள் வீட்டு கதவின் முன் வைக்கப்பட்டிருந்த செய்தித்தாளை முழுவதுமாக வாசித்து மறுபடியும் அதே போல் சொருகி வைத்தார். இந்த வயதிலும் தன் இயலாமை கண்டு சோர்ந்து போகாமல் தினமும் வெளியில் நடைபயிற்சி சென்று வரும் பொழுது வீட்டிற்கு தேவையானதை வாங்கி வருவார் போல. அதுவும் அவர் கையில் பை இருப்பதை பார்த்து தெரிந்து கொண்டேன்.
அண்மைக் காலங்களில் செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் குறைந்து வருவதாக நினைக்கிறேன். இருந்தாலும் அந்த முதியவரை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாருக்கேனும் செய்தித்தாள் வாங்கும் வசதி இல்லாவிட்டாலும் அதை படிக்கும் ஆர்வம் அவர்களை விட்டு நீங்குவது இல்லை. மேலும் அந்த முதியவரை பலமுறை எங்கள் ஊர் நூலகத்தில் பார்த்துள்ளேன். மேலே இந்த காட்சியை கண்டதும் என்னால் முடிந்த வரை எங்கள் ஊர் நூலகத்தில் ஏதாவது ஒரு தினசரி தமிழ் செய்தித்தாள் போடும்படி என் கணவரிடம் கேட்க எண்ணியிருக்கிறேன். தெரிந்தவர்களிடமும் விருப்பமிருந்தால் தாங்கள் படித்து முடித்ததும் அன்றைய தின செய்தித்தாளை நூலகத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டி உள்ளேன். உங்கள் ஊரிலும் இதே போல ஆர்வம் உள்ளவர்கள் செய்யலாம். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்பதை தெரிந்து வைத்திருக்கும் நாம் ஒருவரின் அறிவுப் பசிக்கு தீனி போடவும் மறுக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.

No comments:
Post a Comment