Sunday, December 25, 2022

நன்கொடை by Veena Shankar

 


நன்கொடை


                                              கோயில் வாசல் முன் செருப்பு தைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தான் முனியசாமி. முன்பு போல செருப்பு அறுந்து போன உடன் அந்த செருப்பையே தைத்து போடுபவர் இப்போது மிகச் சிலரே என்றாலும் முனியசாமிக்கு தெரிந்த ஒரே தொழில் என்பதால் அதை செய்து கொண்டிருந்தான். அது மட்டுமல்லாது கோயிலுக்கு வெளியே பக்தர்கள் விட்டுச் செல்லும் செருப்பையும் கொண்டு வந்து அதை நன்றாக சுத்தம் செய்து, தைத்து தன் கடை வாசல் முன் வைத்து விற்று வந்தான். சில தோல் பைகளையும் விற்பதற்காக தொங்கவிட்டு இருப்பான். விலை குறைவு என்பதால் அதையும் வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு. அதில் கிடைக்கும் வருமானம் முனியசாமிக்கு போதுமானதாக இருந்ததால் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். கோயில் வாசலுக்கு முன்னே கடை வைத்திருப்பதால் அங்கே வருபவர்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்தான்.


                                                       பள்ளி விடுமுறை என்பதால் முனியசாமியின் மகன், தன் தந்தைக்கு உதவியாக செருப்பு கடைக்கு வந்திருந்தான். அன்று கோயில் வாசலில் நன்கொடை கொடுத்தவர்களுக்கு கோயிலில் நன்றி பாராட்டும் விழா ஒன்று நடைபெற இருப்பதாக பதாகையில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்த முனியசாமியின் மகன். 


                  அப்பா! இந்த பாராட்டு விழா எதற்கு நடக்கிறது?” என்று கேட்டான். அதற்கு முனியசாமி,


                “இந்த கோயிலில் தற்போது தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது உனக்கு தெரியும். அதற்காக நிறைய பொருளுதவியும் பண உதவியும் செய்தவர்களுக்கு அவர்களின் செயலை பாராட்டி ஒரு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. அந்த விழாவினை கோயில் கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.” என்று சொன்னதும்


                             “அப்பா! நீங்கள் இந்த கோயிலுக்கு நன்கொடை கொடுத்து இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.


                     “ஆமாம்பா! நான் இந்த கடையில கிடைக்கிற வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்து சுமார் ஐந்து ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறேன்.” என்று சொல்லவும்  


                                   “நீங்களும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளப் போகிறீர்களா? அந்த கமிட்டியினர் உங்களை அழைத்து உள்ளார்களா?” என்று கேட்டான்


                               “அது எப்படிப்பா என்னை கூப்பிடுவார்கள்? நான் வெறும் ஐந்தாயிரம் தானே கொடுத்திருக்கிறேன். அவர்களெல்லாம் லட்சக்கணக்கில் கொடுத்து இருக்கிறார்கள்.” என்றான் முனியசாமி. 


                            “அப்படி என்றால் அவர்கள் எல்லாம் என்ன தொழில் செய்கிறார்கள் அப்பா?” என்று மறுபடியும் அவன் மகன் கேட்க, 


                              “அவர்கள் எல்லாம் தொழிலதிபர்கள். தொழிலதிபர்கள் என்றால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள். நிறைய பேரிடம் பழக்க வழக்கம், பண பரிவர்த்தனை வைத்துக் கொள்பவர்கள்.” என்று மட்டும் பதில் சொன்னான் முனியசாமி.


                                      “அவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதும், இந்த சின்ன தொழில் செய்து கொண்டு நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்த செயலும் ஒன்றுதானே. அவர்களை விழா வைத்து பாராட்டுகிறார்கள் என்றால் நீங்கள் கொடுத்த தொகையும் நம்மைப் பொறுத்தவரையில் பெரியது தானே? நீங்களும் இந்த விழாவில் பாராட்டப்பட வேண்டியவர் தானே?” என்று கேட்க, ஒரு நிமிடம் தன் மகனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனான் முனியசாமி. அவன் தன் மகனுக்கு சரியான பதிலளிக்க முடியாமல் திகைத்தான். இருந்தாலும் தன் பையனை பார்த்து, 


                           “ பிறருக்கு சரியான நேரத்தில் செய்யும் உதவிக்கும் கோயிலுக்கு அளிக்கும் நன்கொடைக்கும் நாம் பாராட்டு எதிர்பார்ப்பது தவறு. கோயில் கும்பாபிஷேகத்தில் என் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொகையை நான் கொடுத்தேன். அதற்கு பாராட்டு எதிர்பார்த்தால் நான் கொடுத்த நன்கொடைக்கு பலன் இல்லாமல் போய்விடும்.” என்று ஒரு வழியாக தன் மகனை சமாதானம் செய்தான் முனியசாமி.


                               நன்கொடை அளவில் சிறியதாயினும் பெரியதாயினும் நன்கொடை அளித்தவர்கள் பிறரால் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். இருந்தாலும் பிறர் பாராட்டை எதிர்பார்க்காமல் இருப்பது நன்று.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...