முதுமையின் முயற்சி
எழுபது வயது ஆனாலும் மங்கம்மாவிற்கு காதும் கண் பார்வையும் சிறிது கூட மங்கி போகவில்லை. அந்தக் காலத்தில் கம்பு, கேப்பை கஞ்சி குடித்து வளர்ந்த உடம்பு தானே? சொல்லவா வேண்டும்? தினசரி மாத்திரை மருந்து என்று ஏதும் எடுத்துக் கொள்ளாமலேயே அவளுடைய ஆரோக்கியம் நன்றாகவே இருந்தது. எப்போதும் தன்னை சந்தோஷமாகவும் நடை, உடற்பயிற்சி செய்து கொண்டும் உடம்பிற்கு ஏதும் நேராமலும் பார்த்துக் கொள்வாள். இந்த வயதிலும் தன் பேரன், பேத்திகளுடன் அரட்டை அடிப்பது மங்கம்மாவிற்கு மிக பிடித்த விஷயம் என்றே சொல்ல வேண்டும்.
வீட்டில் உள்ளவர்களுக்கும் மங்கம்மா தன் கை வைத்தியத்திலேயே அவர்களின் சிறு சிறு உடல் உபாதைகளை சரி செய்து விடுவாள். இன்று வரை மங்கம்மா தனக்கென்று ஆங்கில மருத்துவத்தை பின்பற்றியதும் இல்லை. அவளுடைய வைத்தியத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் தன்னுடைய மகள் - மருமகள் என்று கூட பார்க்காமல் அவர்களை கடிந்து கொள்வாள். வீட்டிலும் வெளியிலும் அவளுடைய குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற கோட்பாட்டினை வகுத்து, அனைவரின் மீது அதை திணித்தும் விடுவாள். வீட்டில் உள்ளவர்கள் மங்கம்மாவின் போக்கினை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் சில நேரங்களில் அவளுடைய அறிவுரைகளும் சமயோஜிதமும் அவர்களுக்கு கை மேல் பலன் கொடுத்திருக்கிறது.
எப்போதும் தங்களுடனேயே அரட்டை அடித்து கொண்டிருக்கும் மங்கம்மாவிற்கு அவளுடைய பேரன், பேத்திகள் பிறந்த நாள் பரிசாக அவளுக்கு ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி கொடுத்தனர். சில சமயங்களில் அவர்களுடைய செல்போனை மங்கம்மா வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு ஒரு ஸ்மார்ட் போனை பரிசளிக்க அவர்கள் நினைத்தனர். அதை எப்படி கையாளுவது என்று அவளுக்கு தெரியாத போதும் அதில் ஆர்வம் கொண்டிருந்தாள். ஸ்மார்ட்போனை பரிசாக பெற்றதும் துள்ளிக் குதிக்கும் கன்றுக் குட்டி போல மகிழ்ந்தாள். அதே சமயம் அதை, எப்படி கையாள்வது என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டாள் மங்கம்மா. அவர்களும் ஒரு நாளைக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தனர். சிறிது பரீட்சையமானதும் தானே வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இன்ன பிற செயலிகளை கையாள தொடங்கினாள்.
இப்படியாக ஒரு நாள் மங்கம்மா யூடியூபில் பார்க்கும் பொழுது ஒரு பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி என்பதை வீடியோ எடுத்து போட்டு இருந்தார்கள். அந்த வீடியோவை பார்த்தாள். ஐந்து நிமிடமாக தொடர்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்த அவள், ஒரு குழந்தைக்கு இத்தனை முறை எண்ணெய் தேய்த்து, சோப்பு போட்டு குளிப்பாட்டுவார்களா? என்ன பிறந்த குழந்தைக்கு போய் இவள் இப்படி செய்து கொண்டிருக்கிறாள்? என அந்த பெண்மணியை சத்தம் போட்டு சடைக்க, அவள் பேத்தி ஒருவளை அழைத்து “வா! இங்கே பார்! ஒரு குழந்தையை இத்தனை தடவை குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறாள்? குழந்தைக்கு சளி பிடிக்காதா?” என சொல்லி அந்த வீடியோவை அவளிடம் காண்பிக்க, பேத்தியோ விழுந்து விழுந்து சிரித்தாள். அவளின் சிரிப்பை கண்ட மங்கம்மா, சற்றே கோபமடைந்து “ எதற்கு இப்படி சிரிக்கிறாய்?” என கேட்டாள். அதற்கு அவள் பேத்தி, “அது ஒன்றுமில்லை பாட்டி. இது ஷார்ட்ஸ் என்னும் சிறு வீடியோ. நீங்கள் அதை மேல் நோக்கி தள்ளாத வரை அது மறுபடியும் மறுபடியும் முதலில் இருந்து காண்பிக்கும். அந்த வீடியோவானது மொத்தத்திற்கு இருபது நொடிகள் தான் இருக்கிறது. நீங்கள் அதை திரும்பத் திரும்ப பார்த்து இருக்கிறீர்கள். ஐந்து நிமிடங்கள் வரை நீங்கள் அதை தொடர்ந்து பார்த்ததால் மறுபடியும் குழந்தையை குளிப்பாட்டுவது போல தோன்றியுள்ளது” என்று சொல்லவும் “அந்த காலத்து பாட்டிமா நான். அப்பவே எஸ்எஸ்எல்சி படித்தவள். எனக்கு தெரியாதா? என்று மழுப்பலான பதிலை உதிர்த்துவிட்டு, தற்போதைய முன்னேற்றத்திற்கு தானும் ஈடு கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அறிவியலை பார்த்து வியக்க தவறவில்லை மங்கம்மா.
அகவையில் முதிர்ச்சியானாலும் முன்னேற்றத்திற்கான முயற்சியும் பயிற்சியும் கொள்வது சிறந்தது.

No comments:
Post a Comment