வெற்றி கொள்ளும் சிந்தனை
“நான் இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். மாப்பிள்ளை பார்க்காதீங்க” என்று தன்னுடைய முடிவை சொல்லி புறப்பட தயாராக இருந்த ஜனனியை பார்த்து அம்மா சங்கரி கோபித்தாள்., “என்னடி! எப்ப பார்த்தாலும் இதே சொல்லிக் கொண்டிருக்க? உனக்கு அப்பா செல்லம் கொடுப்பதால் தான் இந்த அளவுக்கு பேசுறே.” என்றாள். சங்கரியின் பேச்சிற்கிடையிலிருந்து ஜனனியின் கண்களை தன் பக்கம் திரும்ப செய்தான் அப்பா கதிர். “என்னமா! எங்களுக்கு வயசு ஆகுதுல்ல. காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பேரனும் பேத்தியும் பார்த்தா எங்கள் கடமை முடிஞ்சிடும்.” என்று சொன்னபோது, “அப்பா! நான் மேலே படிக்க ஆசைப்படுகிறேன். இன்னும் இரண்டு வருஷம் படிப்பு இருக்கு. அதை முடிச்சுட்டு நானே உங்ககிட்ட சொல்றேன். அது வரைக்கும் பழைய சினிமா படத்தை பார்த்துட்டு அதே டயலாக்கை மறுபடியும் என்னிடம் சொல்லாதீர்கள்.” என்றாள் ஜனனி.
‘ தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்’ என்பது போல் நான் ஜனனியை வளர்த்தது தப்பாகிவிட்டது என யோசித்தான். ஜனனியின் பதிலை கேட்ட அம்மா சங்கரி, “ என்னடி சொல்ற! அப்பா என்ற மரியாதை கூட இல்லாமல். இந்த காலத்தில இருக்கிற பிள்ளைகள் எல்லாம் சொல்லிட்டா கல்யாணம் பண்றீங்க? காதல் கத்தரிக்காய் என்று சொல்லி அலையறீங்க!. உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கத்தான் எங்க கிட்ட காசு இருக்கு. நீ படிக்க எல்லாம் காசு செலவழிக்க முடியாது” என்று பலவாறு திட்டி தீர்த்தாள் சங்கரி. “உங்க கிட்ட நான் ஒன்றும் காசு எதிர்பார்க்கலை. பார்ட் டைம்ல வேலை பார்த்துகிட்டு நான் படிக்க முடிவு பண்ணி இருக்கேன். முடிஞ்சா உங்களுக்கும் காசு கொடுக்க நான் தயார்.” என்று தன் திறமை மீது நம்பிக்கை வைத்து தான் வெளியே போவதாய் சொல்லி விட்டு நடையை கட்டினாள் ஜனனி. எங்கே செல்கிறாள் என்று கூட சொல்லாத அவளை மனதில் வாட்டி வதைத்தாள் சங்கரி.
தன்னுடன் வெளியே ஊர் சுற்ற வரும் போது வித்யா தன் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்ததாக பலமுறை சொன்னதும் கதிருக்கு நினைவு வந்தது. இதற்கு மேல் ஜனனியிடம் வாதம் செய்ய முடியாது என்று வாயடைத்து தன் மனைவியை மேலே பேச வேண்டாம் என சைகை செய்து அனுப்பினான். சங்கரி சொல்வது போல் ஜனனி ஏதும் காதல் வயப்பட்டு இருப்பாளோ? என சந்தேகம் கொண்டு சேரில் அமர்ந்தான். கதிருக்கு தன்னுடைய கல்லூரி நாட்கள் நிழலாடியது. தன்னுடன் படித்த வித்யாவை மனப்பூர்வமாக காதலித்ததும்; வித்யா மறுத்த போதும் வீட்டிற்கு தெரியாமல் ஊர் சுற்றியதும்; இவர்களைப் பற்றி பெற்றோருக்கு தெரிந்ததும் கதிரின் அம்மா, அவளுடைய அண்ணன் பெண்ணான சங்கரியை மணக்க வேண்டி தன் உயிரை பணயமாக வைத்து மிரட்டியதும்; என்ன செய்வது என்று தெரியாமல் எப்படியோ வித்யாவிடம் நிலைமையை சொல்ல, அவனுடைய இயலாமையை எண்ணி வருத்தப்பட்ட வித்யா, அவள் தன் உயிரை விட்டதும்; அரசல் புரசலாக ஊராருக்கு விஷயம் தெரிய, வித்யாவின் காதலன் கதிர் என்பதால் கதிரை போலீசார் விசாரித்ததும் அந்நாளில் மனதளவில் பாதிக்கப்பட்டான் கதிர். நிலைமையை சமாளித்து சங்கரியை விருப்பமில்லாமல் கைப்பிடித்தாலும் அவளுடைய அன்பிற்கு ஜனனியை பரிசளித்தான்.
“போனது போகட்டும் பழையதை மறந்து வாழ்வோம்” என்ற சங்கரியின் ஒற்றை வரி கதிரின் மனதிலிருந்து வித்யாவை விலக்கி வைத்தாலும் அவள் உயிர் போனதற்கு தான் தான் காரணம் என்ற நினைப்பு மட்டும் அவனிடமிருந்து நீங்கவில்லை என்பது தான் உண்மை. இந்த விஷயம் இது நாள் வரைக்கும் ஜனனிக்கு தெரியாது.
“ என்னங்க! யோசனையிலேயே இருக்கீங்க? இந்த டீயை குடிங்க!” என்று கதிரின் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சங்கரி. சூடான டீ உள்ளே சென்றதும் மனது குளிர்ந்தது போல் இருந்தது கதிருக்கு. இன்னும் பக்குவமாக ஜனனியிடம் பேச வேண்டும் என்பதை தீர்மானித்து, ஜனனியின் வருகைக்காக காத்திருந்தான்.
சமயம் கிடைத்ததும் மெல்ல ஜனனியின் அறைக்கு சென்றான். ஒருவேளை ஜனனி காதல் வயப்பட்டு இருந்தாலும் தன் அம்மா தன்னிடம் காரியத்தை சாதித்து போல் தான் பேசக்கூடாது என முதலிலேயே சங்கரியிடம் சொல்லி வைத்திருந்தான். காதலின் சுகமும் வேதனையும் அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. “ஜனனி!” என்று மெல்லிய குரலில் அழைத்ததும் “அப்பா! என்னப்பா?” என்று கேட்டாலும் தன்னை சமாதானப்படுத்த அப்பா வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தாள் ஜனனி.
“நான் நேரா விஷயத்துக்கு வரேன். உனக்கு யார் மேலயாவது காதல் இருந்தால் சொல்லிடுமா. உன் அம்மாவிடம் பேசி அந்தப் பையனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இந்த ஊரார் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனால் விஷயம் விபரீதமாக ஆகிவிடக்கூடாது. நான் இருக்கும் போது நீ நன்றாக வாழ்வதை பார்க்க விரும்புகிறேன்.” என மறைமுகமாக தன் சென்டிமென்டான வார்த்தைகளை உதிர்த்தான்.
“ அப்பா! நான் உங்கள் பொண்ணு அப்படியெல்லாம் யாரும் எனக்கு இல்லை.” என்று சொன்னதும் கதிருக்கு ‘சுருக்’ கென்று பட்டது. “அப்புறம் எதுக்கு…” என்று கதிர் பேச்சை இழுக்க, “அப்பா! என்னோட இந்த முடிவுக்கு காரணம் ஒரு பையன் தான். அவனிடம் எனக்கு காதல் கிடையாது. ஆனால் அவன் என்னை காதலிக்கிறது பைனல் இயர்ல தான் எனக்கு தெரியும். நல்லா பேசுவான். கண்ணியமாகவும் நடந்து கொண்டான். என்னை அவனுக்கு ரொம்ப பிடிச்சதால என்னை ப்ரொபோஸ் பண்ண, அதற்கு நான் மறுப்பு சொன்னதும் அவனுடைய நடவடிக்கையை மாத்திக்கிட்டு எனக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சுட்டான். அவன் மேல் எனக்கு ஈர்ப்பு இல்லை என்று பலமுறை சொல்லியும் என்னை அவன் வற்புறுத்த, ஒரு கட்டத்தில் என் வாழ்க்கையை ஸ்பாயில் பண்ண பார்த்தான். ஆனா என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அவனை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லி ரிமாண்ட் பண்ண வச்சுட்டாங்க. இந்த விஷயத்திற்கப்புறம் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று முடிவு செய்து தான் படிக்கணும்னு சொன்னேன்.” என்று அழுத்தமாக ஜனனி சொன்னதைக் கேட்டதும் சற்றே அதிர்ந்து போன கதிர், “ஆமா! இதெல்லாம் எங்ககிட்ட ஏன் சொல்லாம மறைச்சிட்ட?” என்று கதிர் கேட்டதற்கு, “ நீங்க ரெண்டு பேரும் பாவம்பா. நான் தான் உலகம் நினைச்சுட்டு இருக்கீங்க. உங்க சந்தோஷத்தை பறிக்கக் கூடாது. அதுவும் எனக்கு கூடப் பிறந்தவங்க என்று யாரும் இல்லை. ஒரே ஒரு பொண்ணுங்கறதனால என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட தான் விஷயத்தைத் தான் ஷேர் பண்ண முடிஞ்சது.” என்று பக்குவமாக பேசும் ஜனனியை ரசித்தான் கதிர்.
அந்நாளில் என் காதலில் இப்படி ஒரு முடிவு எடுக்க முடியாத நான் கோழை தான் என்றும்; தன் வயதில் உள்ளவர்கள் எல்லாம் மூன்று, நான்கு பிள்ளை பெற்ற போது அவர்களை ஏளனமாக பேசிய கதிருக்கு ஜனனி மூலம் உண்மை புரிந்தது. ஏதும் பேசாமல் ஜனனியின் தலையை மட்டும் வருடி வெளியே வர, சங்கரியின் கண்களும் ஈரமாக இருப்பதை உணர்ந்து அவளை மௌனமாக கட்டி அணைத்தான்.
உண்மையான காதல் என்றும் மனதை விட்டு மறைவதில்லை. அதே போல் தெளிவான சிந்தனையும் வெற்றியை விட்டு விலகுவதில்லை.

No comments:
Post a Comment