இயற்கை
இயற்கையின் படம் பலரின் கை வண்ணங்களில்
பாடம் சொல்லியது பல நூறு, இயற்கையை இயல்பாய்
இருக்க விட்டு ரசிக்க வேண்டுமென்று சொல்லி
நிலவே!
எட்டி விடும் தூரம் போல் நினைக்க வைத்து ,
எட்டா கனியாய் இருந்து தன்னை பிடிக்க சொல்லி
மறைந்து மறைந்து விளையாட்டு காமித்து,
மேகத்தின் ஊடே ஒளிந்து செல்லும் நிலவே!
உன்னை பிடிக்க முடியாமற் போனாலும் நான்
என் புகைப்படத்தின் மூலம் உன்னை படம்
பிடித்து விட்ட மகிழ்ச்சியே போதும் எனக்கு
தங்கம்
நீ கெட்டு நின்றாலும்
கொட்டி கிடந்தாலும்
உன் மதிப்பு குறைவதில்லை
நீ எட்டி நின்றாலும்
எளிதில் கிடைத்தாலும்
உன் தரத்தில் குறைவதில்லை
உனை தட்டி உருக்கினாலும்
அடகு வைத்தாலும்
நீ கெட்டு போவதில்லை
கொல்லனிடம் தஞ்சம் புகுந்தாலும்
ஜொலிப்பது என்னவோ பெண்ணிடத்திலே
விந்தை
கவிதை எழுத மனம் தேடியது காகிதத்தை
காகிதம் எங்கே?
காகிதம் கிடைத்தாலும் பேனாவை தேடியது என் கரங்கள்
பேனா எங்கே ?
பேனா கிடைத்ததும் மை இல்லாத பேனா என நொந்தேன்
மை எங்கே?
பேனாவில் மை நிரப்பியதும் ஆயத்தமானேன் கவிதை எழுத
எங்கே விஷயம்?
மறந்து போனதுதான் மிச்சம் சிந்தித்துக் கொண்டே
இருக்கிறேன் நான் எழுத நினைத்திருந்த கருத்தை.
பதில்
என் வறுமையை நினைத்து
கற்சிலையான கடவுளிடம் முறையிட்டேன்
பதில் இல்லை
பொற்சிலையான பெண்ணிடம் முறையிட்டேன்
பதில் இல்லை
தற்செயலாக நண்பனிடம் முறையிட்டேன்
கிடைத்தது பதில்
மதுபானக் கடையினிலே
கடவுள்
நடிகன் கேட்டான்
கடவுளே! ஏன் என்னை படைத்தீர்கள் என்று
இரு! உண்மையான கடவுளிடம் கேட்டு சொல்கிறேன்
என்று சொன்னது மென்மையான குரலில், சினமா கடவுள்
யார் கையில்
நெல்லின் வளர்ச்சி தண்ணீரில்
தண்ணீரின் வனப்பு மழையில்
மழையின் பொழிப்பு மரத்தில்
மரத்தின் செழிப்பு மனிதனின் கையில்
மணம்
கருவாட்டு கடையின் வாசலிலும் மஞ்சள் மணந்தது வனப்பிற்காக
கைகடிகாரம்
வறுமையின் பிடியிலிருந்த நான் கைக்கடிகாரத்திற்கு வழியில்லாமல் நேரம் அறிய ஓடினேன் கடிகாரக்கைடைக்கு, ஏமாற்றம் காத்திருந்தது எனக்கு ஒவ்வொரு கடிகாரமும் வெவ்வேறு நேரத்தை காட்டியதால்
நான் வாங்கிய கைக்கடிகாரம் கைவிடவில்லை என்னை தேர்வறையில் அன்று
செல்பேசி வரவால் காலாவதியாக்கிவிட் டேன் என் கைக்கடிகாரத்தை இன்று
வண்ணத்துப்பூச்சி
பட்டம் போல் உயர பறக்கிறாய், பட்டாம்பூச்சி ஆகிறாய்
வண்ணம் பல உன்னில் கொள்கிறாய், வண்ணத்துப்பூச்சி ஆகிறாய்
உன் அழகை வெளிக்காட்டியதால், எனை நானும் மறக்க வைக்கிறாய்
உன் அழகில் மயங்கி நிற்க, நீயோ பூவின் ஆழத்தை பார்க்கிறாய்
வானில் நீ வலம் வருகிறாய், எனை தோட்டத்திலும் வரவேற்கிறாய்
உனை தொடும் முன் பறந்து செல்கிறாய், நீயும் என் பருவத்தையும் சோதிக்கிறாய்
உன் இறக்கையை குவித்து விரிக்கிறாய், பெண்ணின்
கண்ணிமையை நினைவுபடுத்துகிறாய்
வானின் உயரத்தை அளக்கிறாய், மதி கொண்ட எனை கவர்கிறாய் தன்னம்பிக்கை கொள்ள வைக்கிறாய், தன்னிலை மறக்கவும் செய்கிறாய்
எனையும் வானில் பறக்க அழைக்கிறாய், பூமியிலேயே சிறகில்லாமல் ரசிக்க வைக்கிறாய்
சிறுவர்களுக்கும் எட்டாக் கனியாகிறாய் , யாருக்கும் அகப்படாமல் நீ எத்தனிக்க வைக்கிறாய்
வட்டமிடும் உன்னை என் வசமாக்க திட்டமிட்டாலும் உன்னை
என்னிடம் விட்டு கொடுக்காமல் உன் வீரத்தை காட்டுகிறாய்
காதல்
காதல் என்றும் மென்மையானது
பேச நா எழாத போது மௌனமானது
காதலிக்கும் சமயம் அற்புதமானது
அறியும் போது உணர்ச்சி மயமானது
எவருக்குமே தனிப்பட்ட உரிமையானது
காதலில் லயித்தவர்களுக்கு உண்மையானது
விளைவின் போது விலையாவது
இழப்பின் போது மட்டுமே ஊமையானது

No comments:
Post a Comment