Wednesday, December 21, 2022

தினமொரு சிந்தனை by Veena Shankar

 


அழைப்பு


தொலை தூரத்தில் இருப்பதால் தொலைபேசியில் 

தொடர்பு கொண்டேன் உன்னை 

யாரும் எடுக்கவில்லை 

அலைபேசியில் தொடர்பு கொண்டேன் பதில் வந்தது 

நீ தொலைவில் இருப்பதாக


பெண் சிலை


மழை வந்தது குடை பிடித்தேன் 

மலை மோதியது எதிர்த்து நின்றேன் 

சிலை தோன்றியது மயங்கி விழுந்தேன் 

அச்சிலை ஓர் பெண் என்பதால்


துரோகி


நொந்துகொண்டு திரிந்தேன்  

திரிந்து தெரிந்தேன் 

தெரிந்து தெளிந்தேன்  

தெளிந்து மறந்தேன் 

மறந்து கிடந்தேன் மாற்றுப் பெண்ணிடத்திலே  

துரோகி ஆனேன் என் மனைவிக்கு


என் மனைவி 


தெய்வத்தின் பக்கத்தில் தெய்வமாக சிரித்தாள்  

நிழல் படத்தில் என்னால் தெய்வம் ஆக்கப்பட்ட 

என் மனைவி 


பெண் குழந்தை


நாளை பலிகடாவாக போகிறாள் என்று நினைத்தோ  

ஏனோ அன்று கள்ளிப்பால் கொடுத்தாய் அப்பெண் குழந்தைக்கு


நச்சு பேச்சு

அரசியல்வாதியிடம் இலவசமாய் பெற்ற தண்ணீரும் 

கசந்தது அதில் நச்சு பேச்சு கலந்திருந்ததால்


வரவு

திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன் அவளுக்கு தாலி 

தொங்கிக் கொண்டிருந்தது அலைபேசியின் வரவால் 


காசு


அடிக்கடி அழைப்பதற்கு அலைபேசி 

சுடச்சுட செய்திகளுக்கு வலைதளம்

தொட தொட மயங்குவதற்கு கணினி 

சட்டென வேலைக்கு இயந்திரம் 

இத்தனையும் வாங்கலாம் தித்திக்கும் காசிலே 

ஆனால் இதயம் வெடிக்கும் வாங்கி கொடுப்பவற்கு


பெயர் பலகை


ஊருக்குள் நுழையும் முன்னே வரவேற்றது 

ஊர் பலகை சிறியதாய் 

கோயிலுக்குள் நுழையும் முன்னே வரவேற்றது 

நன்கொடையாளர்களின் பெயர் பலகை

மிகப் பெரியதாய்


ஓட்டு


மக்கள் ஓட்டு போட்ட தலைவர் வென்றார் 

மக்கள் தோற்றனர் 

தங்களுக்கு ஏதும் விடிவு பிறக்காததால்

காட்சிகள் மாறலாம் கட்சிகளின் மனம் மாறாது 

ஓட்டுக்கு பணம் என்பதிலிருந்து 


வெற்றி


இலையைப் பறிப்பதால் செடி உயிர் விடுவதில்லை 

ஆனால் தோல்வி கண்ட மனம் மட்டும் 

எடுக்கிறது தற்கொலை முடிவை செடியின் இலைகள் 

போலத்தான் தோல்வியும் விட்டுவிடுங்கள் அதனை

துளிர்விட்டு வரும் புதிய இலைகள் போல 

எதிர்காலத்தில் காத்திருக்கும் வெற்றி எனும் மரம்


கலை


கவிஞனின் கற்பனை கவிதையானது

அர்த்தமுள்ள வார்த்தைகளால்

சிற்பியின் கற்பனை சிலையானது 

பரம்பொருளை அழகாக செதுக்கியதால்


கடலே!


கடலே! உன்னையும் அழிக்க புறப்பட்டு விட்டான் மனிதன் 

உன்னை குடிநீர் ஆக்கும் முயற்சியில்


சிரிப்பு


கோடி பூக்கள் பூத்தாலும் தாவரத்தின் முதல்  

பூவே அங்கீகாரம் 

அதன் இனத்தை கண்டறிய முடிவதால் 

பலவகை சிரிப்புகள் காட்டினாலும் குழந்தையின் 

பொக்கை வாய் சிரிப்பே சிரிப்பு அதன் 

வெள்ளை மனம் தெரிவதால்


ஞானி


சிக்கலான பாதையைத் தேர்ந்தெடு 

உன் மதியை விரிவுபடுத்த 

வாழ்க்கையில் கஷ்டம் அனுபவி 

உன் விதியை எதிர்நோக்க 

தீய நண்பர்களுடன் சேர் 

சதியை வெல்ல - நீயும்

ஒரு நாள் பேசப்படுவாய் ஞானி என்று


விவாகம்


விவாகம் செய்யாத முதல் மனைவியாய் அலைபேசி 

அதனால் விவகாரமாய் போனது 

என் விவாகமும் நின்றது விவாகம் ஆகாமலேயே


விடியலுக்கான கனவு

 

அன்று ஒருநாள் இரவு நேர கனவு கண்டேன் 

என் விடியலுக்காக

விடிந்ததும் பார்த்தேன் என் கனவு படுத்திருந்தது 

நான் இருந்த அனாதை இல்லத்தில்


நம்பிக்கை துரோகம்

 

நம்பிக்கை கொண்டு பிறந்தேன் 

நம்பிக்கை கொண்டு வளர்ந்தேன் 

நம்பிக்கை கொண்டு படித்தேன் 

நம்பிக்கை கொண்டு இருந்தேன் என் காதலில்

துறந்தேன் என் காதலை அவள் 

நம்பிக்கை துரோகம் செய்ததால்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...