Monday, December 12, 2022

ஈ-மொய்(பணம்) by Veena Shankar

 




ஈ - மொய் (பணம்) 


                                              ஏதோ ஒரு கல்யாண பத்திரிக்கையை கையில் எடுத்து வந்த திவ்யா, தன் கணவனிடம் “என்னங்க! உங்க நண்பன் சங்கரோட பையனுக்கு கல்யாணமாமே? என்று கேட்டாள். “ ஆமா! நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருந்தேன்ல” என்றார் பதிலுக்கு ராம்குமார். “கல்யாணம்னு சொன்னீங்க, ஆனா எப்போ என்று எனக்கு தெரியாதுங்க. இதோ வருகிற 31-ஆம் தேதி கல்யாணமாம்” என தன் கணவனிடம் பத்திரிக்கையை நீட்டினாள். “அது தான் நேற்று வந்துவிட்டதே? நீ பார்க்கணும்ன்னு தானே அந்த டேபிள் மேலே வைத்தேன்.” என்று சொன்னார் ராம்குமார். 


                                  “ கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பத்திரிக்கை அனுப்பி வச்சா எப்படிங்க போகிறது? அதுவும் சென்னையில் கல்யாணம். இங்க இருந்து மும்பைக்கு கூட போய் விடலாம். ஆனால் இந்த சென்னைக்கு….. ரயில் டிக்கெட் கிடைக்குமா? நீங்க எப்படி போகப் போறீங்க?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டாள் திவ்யா. “ தக்கல் டிக்கெட் போடுங்க, இல்லைன்னா நம்ம சுகுமார் அங்கே தான் இருக்கிறான். அவனை ஒரு எட்டு தலையை காட்டிட்டு வரச் சொல்லுங்க!” என்று தன் யோசனையையும் கணவனிடம் சொல்லி வைத்தாள். “ அவன் எப்போதோ கல்யாண தேதியே என்னிடம் சொல்லி விட்டான். இப்ப எல்லாம் பத்திரிக்கையை வாட்ஸ்அப்ல தானே அனுப்புறாங்க. ஆனால் என்னுடைய சங்கர் பத்திரிக்கையா போட்டு அனுப்பி இருக்கான். இருந்தாலும் அவன் பையன் கல்யாணத்திற்கு நான் போகப் போவதில்லை திவ்யா.” என்று தன் பதிலை ராம்குமார் சொல்லவும் ஒரு நிமிடம் திகைத்துப் போனாள் திவ்யா.


                                        “ஏன் அப்படி சொல்றீங்க நம்ம லதா கல்யாணத்துக்கு முதல் ஆளா வந்து சிறப்பா கல்யாணத்தை நடத்தி கொடுத்தாரே? அவர் வீட்டு கல்யாணத்துக்கு போக மாட்டேன்னு சொல்றீங்களே?” என்று சொன்னவளுக்கு, “இன்றைய சூழ்நிலை அப்படி இருக்கு” என்றார் ராம்குமார். “என்னங்க சூழ்நிலை? ஏதோ மனசுல வச்சிக்கிட்டு தான் நீங்க இப்படி சொல்றீங்க” என்றாள் பதிலுக்கு. “ஆமாம் என்னோட முப்பது வருஷம் குப்பை கொட்டி இருக்கேல்ல. என்ன காரணமாக இருக்கும் என்று நீயே கண்டு பிடிச்சுக்கோ.” என்றார் ராம்குமார். 


                                   ஏற்றிவிட்ட ஏணியின் நிலையில் தன் நண்பன் சங்கர் இருந்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் அதைவிட தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறான். எப்போதுமே யாருடைய தயவையும் எதிர்பார்க்காத என் நண்பனுக்கு நான் மறைமுகமாக ஏதாவது உதவி செய்தாக வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டார்.


                                                 “இப்போ புரியுதுங்க, அன்று அவரிடம் இருந்த பணமும் அவருடைய தயவும் உங்க பிஸினஸுக்கு தேவைப்பட்டது. ஆனால் இப்ப அவரிடம் சொத்து இல்லை என்று தானே நீங்க அவரை உதாசீனம் செய்கிறீங்க?”. அவர் மனைவி தவறி போனதிலிருந்து அவருடைய சொத்துக்கள் ஒவ்வொன்றும் பறி போனது என்று நீங்க சொன்னீங்களே?” என்று தன் பேச்சில் கோபத்தை காட்டினாள் திவ்யா. “முன்னே இருந்த ஸ்டேட்டஸ்ல நானே இப்போ இல்லையாம். வெளியே இருக்கிற மரியாதை கூட வீட்டுக்குள்ளே இல்லை. வாழ்க்கையில ரிட்டயர்டு ஆச்சுனா எல்லா விஷயத்திலும் ரிட்டயர்டு ஆக வேண்டியது தான். நான் கல்யாணத்துக்கு போக எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. அதுக்கு முதல்ல ரயில்ல டிக்கெட் போடணும், அதுக்கு பையன் ரகு கிட்ட பர்மிஷன் கேட்கணும். டிக்கெட் கிடைச்சாலும்…… இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன?” என்றார் ராம்குமார்.


                                           “ ஆமாங்க, நீங்க சொல்றது நிஜம் தான். நான் இன்னும் உங்கள் சம்பாதியத்துல தான் வீட்டு செலவு எல்லாம் நடக்குதுன்னு நினைச்சுட்டு இருக்கேன். உங்களுக்கு பென்ஷனும் கிடையாது. நமக்குள் இருக்கிறது இந்த வீடும் இரண்டு காலி நிலங்களும் கொஞ்சம் சேமிப்பு மட்டும் தான். நிலத்தையும் நம் பிள்ளைகளுக்கு நீங்க எழுதி கொடுத்துட்டீங்க. இப்போ ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம அவர்களை எதிர் பார்த்துட்டு இருக்க வேண்டியதாய் இருக்கிறது. நான் கூட அப்பவே சொன்னேன் நம் காலத்திற்கு பிறகு சொத்தை பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விடலாம் என்று, நீங்க தான் என் பேச்சை கேட்காமல் அவர்களுக்கு இடத்தை எழுதி வச்சிட்டீங்க. சரி. அதனால் ஒன்றும் இல்லை. நாம நல்லா தானே இருக்கிறோம்” என்று ராம்குமாரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். ஆனால் ராம்குமார் பேச்சை தொடர்ந்தார்.


                                     “ சென்னையில் இருக்கானே உன் மூத்த பையன் சுகுமார் அவன் கிட்டேயும் கல்யாணத்துக்கு போயிட்டு வான்னு சொல்ல முடியாது. அவனுக்கும் ஆயிரம் வேலை இருக்கும். நாம எதுக்கு அவனை போய் தொந்தரவு பண்ணனும்.” என்று ராம்குமார் சொன்னதும், “ சரி விடுங்க, எங்கே இருந்தாலும் நம்முடைய ஆசிர்வாதம் அந்த புதுமணத் தம்பதிக்கு கிடைக்கும்.” என்றாள் திவ்யா.   


                                   “ நாம போக முடியாவிட்டாலும் மொய் பணத்தையும் நம்ம போயிட்டு வர செலவுக்கான பணத்தையும் சேர்த்து சங்கர் பையன் கல்யாணத்திற்கு அனுப்பி விடலாம். அது இன்றைய சூழ்நிலைக்கு என் நண்பனுக்கு பெரிய உதவியாக இருக்கும்.” என்று ராம்குமார் சொன்னதும், “ எப்படிங்க அது?” என்று கேட்டாள் திவ்யா. “ அதுக்குதான் சொல்றது. வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க கூடாது. காலத்திற்கு ஏற்றபடி நாமளும் ஜோடியா வெளியே போய் நாலு விஷயத்தை தெரிந்து கொள்ள உன்னை கூப்பிட்டா பேரன், பேத்தி என்று காரணம் சொல்லி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டு, நீ என் கூட வரமாட்டேங்குற; என் காலத்துக்கு அப்புறம் நீ எப்படித்தான் இருக்க போகிறாய்? “ என நொந்து கொண்டார். 


                                     “ போங்க! என்ன வயசு திரும்புதா நமக்கு?” என்று செல்லமாய் கடிந்து கொண்டாள். “அது சரி கல்யாணத்துக்கு போகாம எப்படி மொய் எழுத முடியும் என்று முதலில் நீங்க சொல்லுங்க” என்றாள் திவ்யா. “பத்திரிக்கையை நல்லாப் பாத்தியா? அதுல மாப்பிள்ளை, பெண் வீட்டாருடைய போன் நம்பர் பக்கத்துல அவங்களோட ஆதார் கார்டு நம்பரை எழுதி இருக்காங்க. அந்த நம்பர வச்சு அவங்க பேங்க் அக்கவுண்டுக்கு நாம அனுப்புற பணம் போயி சேர்ந்திடும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒருத்தரோட வங்கியில் இருந்து மற்றவருக்கு பணம் மாறுதல் செய்ய முடியும் என்று இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நாளுக்கு நாள் அறிவியல் எல்லாம் வளருது. இன்னும் கொஞ்ச நாள்ல சொந்த பந்தங்கள் கூட யாரும் இல்லாமல் மாப்பிள்ளையும் பொண்ணும் மட்டும் அவங்க விருப்பப்படுகிற இடத்திலே தாலி கட்டிட்டு அதை எல்லாருக்கும் தெரியப்படுத்துற மாதிரி காட்சிகளை மட்டும் நேரலை செய்தால், அதில் கூட ஆச்சரியம் இருக்காது” என திவ்யாவிற்கு புரியும்படி விளக்கம் அளித்தார். 


                                         ராம்குமாரை ஆச்சர்யமாக திவ்யா பார்த்தாலும் அவளுக்கு என்ன ராம்குமார் எதற்காக கல்யாணத்துக்கு போக மறுக்கிறார் என்பது தெரியாமலா இருக்கும்? தன் பிள்ளைகள் ஒன்றும் தங்களை அப்படி ஒன்றும் கஷ்டப்படுத்துவது இல்லை. தங்களுக்குரிய மரியாதையோடு நன்றாகத் தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.  


                                        அவருடைய நண்பர் சங்கர் தொழிலில் நஷ்டம் அடைந்து இருக்கும் போது அவருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று கூட தன் பெரிய பையன் சுகுமார் சொல்லியிருந்த போதும், அதை தன் நண்பன் ஏற்க மாட்டான் என்று சொல்லி ராம்குமார் அப்போதே மறுத்து விட்டார். ஆனால் தன் கணவன் தான் அவருடைய நண்பனை உயர்ந்த நிலையிலிருந்து பார்த்து தற்போது இந்த நிலையில் பார்க்கும் மனப் பக்குவம் இல்லை என்பதால் தான் கல்யாணத்திற்கு போக மனம் இல்லாமல் இப்படி சொல்லி மழுப்பலான பதில் தருகிறார் என்று திவ்யா மனக்கணக்கு போட்டு விட்டாள்.


                                          திவ்யாவும் அதைப் பற்றி நேரடியாகவே ராம்குமாரிடம் விசாரிக்க, “இத்தனை நாளா என் கூட குடும்பம் நடத்தியதில் இன்னைக்கு தான் நீ ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறாய்.” என திவ்யாவைப் பார்த்து ராம்குமார் நக்கல் செய்ய, இன்று உங்களுக்கு மதிய சாப்பாடு இல்லை என்று சொல்லி கண்ணடித்தாள் திவ்யா.


                                       நேரில் காண்பது சிறந்தது என்றாலும் பிறர் மனதை புரிந்து கொள்வது அதை விட சிறப்பு.

2 comments:

  1. பழமை,புதுமை பல உணர்வுகள் கலந்த கலவை அருமை வீணா..உங்கள் சிந்தனைகளை விடாமல் எழுத வாழ்த்துக்கள்💐💐

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...