பொங்கல் பரிசு
தனியார் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்து வரும் ரமா, அவளுக்கான கேபின் வந்து வெகுநேரமாகியும் அவள் இன்று கிளம்ப நேரமாகிவிட்டதால் தன் குழந்தையிடம் பிரியாவிடை கொடுத்து அவசர அவசரமாக கேபினை நோக்கி வந்தாள். கேபினை விட்டு இறங்கியதும் மின்னல் போல உள்ளே சென்றாள். இன்று வீட்டை விட்டு கிளம்பும் பொழுது நிறைய வேலை இருந்ததால், அதை முடித்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. இதுநாள் வரை கால தாமதமாக வந்தது கிடையாது என்பதால் அவளிடம் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இன்றைய தினம் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி என்பதால் அரை மணி நேரத்திற்கு பதில் அவளுடைய நிகழ்ச்சியானது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சி மிகவும் அவளுக்கு முக்கியமாகக் கருதப்பட்டது. ஏனெனில் இந்த பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு பல பேர் போட்டியிட்டாலும் கடைசியில் இவளுக்கே அதுவும் ஒதுக்கப்பட்டது. முற்றிலும் மழலை செல்வங்களுக்கான நிகழ்ச்சி என்பதால் நிதானமாகபேச வேண்டும் என்றும் நிபந்தனை போடப்பட்டிருந்தது. அவள் தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்க்க நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருப்பதை உணர்ந்த ரமா, ஒரு வாய் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பின் அந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்க தயாரானாள்.
ஒலி - ஒளிபரப்பு நிலையங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும் தங்கள் சுய துக்கங்களையும் மகிழ்ச்சியையும் மறந்து தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பரபரப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முதல் நேயரை சந்தித்தாள். அந்த சுட்டிக் குழந்தையிடம் பல கேள்விகளை கேட்டு, குழந்தைக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பு செய்வதாக கூறி இணைப்பைத் துண்டித்தாள். இப்படியே பல குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டு அவர்களுக்கு ஏற்ற படி தானும் மழலைச் சொல் பேசினாள் ரமா.
இப்படியாக பேச்சு நகர, அடுத்ததாக வந்த குழந்தை அவளை மிகவும் கவர்ந்தாள். அந்த குழந்தையிடம் பெயர், வயது மற்றும் பிற விவரங்களை கேட்டு குழந்தையின் விருப்பப் பாடலை ஒலிபரப்புவதாக சொன்னாள். அவள் இணைப்பை துண்டிப்பதற்கு முன் அந்தக் குழந்தை, மேலும் தனக்கு ஒரு விருப்பம் இருப்பதாக தெரிவிக்க, என்ன என்று விசாரித்தாள் ரமா. அதற்கு அந்த குழந்தை இந்த வருடமாவது பொங்கலன்று தன் அம்மாவும் அப்பாவும் ஒன்றாக இணைந்து தங்களது கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாட விரும்புவதாக ஆணித்தரமாய் பேசியது.
அந்த குழந்தையின் பேச்சும் தன்னுடைய மகளின் பேச்சும் ஒன்றாக இருப்பதாக உணர்ந்த ரமா, தன் கண் ஓரத்தில் கண்ணீரை படர விட்டிருந்தாள். அதன் மழலை பேச்சில் மயங்கிய ரமா, குழந்தையின் பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்று கேட்க, குழந்தையும் தன் அப்பா கிராமத்தில் விவசாயம் பார்ப்பதாகவும் அம்மா ரேடியோ ஜாக்கியாக வேலை பார்ப்பதாகவும் அம்மா - மகள் இருவரும் நகரத்தில் தனியாக வசிப்பதாகவும் சொல்ல, அக்குழந்தை தன் மகள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள். இருந்தாலும் நிகழ்ச்சியின் மத்தியில் உறவுகள் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ரமா. அந்த குழந்தையிடம் இந்த வருடம் கண்டிப்பாக ஆசை நிறைவேறும் என உறுதி சொன்னாள் ரேடியோ ஜாக்கியான ரமா. ஆனால் தன் அம்மா இப்படி சொல்வதை கேட்டவுடன் பாசத்தை மறைக்கத் தெரியாத அந்த குழந்தை “தேங்க்யூ அம்மா” என்று தன் மழலை சொல்லில் சொன்னது. இந்த வருடம் முதல் தன் குழந்தைக்கு இதுவே பொங்கல் பரிசாக அமைய வேண்டும் என தன் வேலையை அத்தினம் ஒதுக்கி வைக்க முடிவு செய்தாள் அம்மா ரமா.
மழலையின் மனது பெற்ற தாய்க்கு புரியும். பாசத்திற்கு எல்லை இல்லை என்பது மழலைக்கும் தெரியும் போல.

No comments:
Post a Comment