Friday, September 27, 2024

திருட்டும் தண்டனையும் by Veena Shankar

 


திருட்டும் தண்டனையும்


திருடி விட்டு ஜெயிலுக்கு வந்த திருடனிடம் " மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்திற்காக எத்தனை முறை பிடிபட்டு ஜெயிலுக்கு வருவே. கொஞ்சம் திருந்தி வாழக்கூடாதா? " என்று கூண்டுக்குள் நின்றிருந்தவனிடம் நீதிபதி கேட்டார். 


" ஐயா! என்ன பண்றது? நம் சட்டத்துல ஓட்டை இருக்கு" என்று திருடன் பதில் தந்ததும் அவனை முறைத்து , தண்டனை எழுதி தீர்ப்பு கொடுத்து ஜெயிலரை கூப்பிட்டு காதில் ஏதோ சொல்ல, அவரும் தலையசைத்து வணக்கம் போட்டு சென்றார். 


நீதிபதி ஜெயிலர் காதில் என்ன சொல்லியிருப்பார் என்பதை ஜெயிலர் கொடுத்த தண்டனை மூலம் யூகித்தான் திருடன். மற்ற திருடர்களை விட இவனுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டது. இருந்தாலும் அவன் உழைப்பிற்கான சம்பளம் வழங்கப்பட்டது . 


பிறகென்ன தண்டனை முடிந்து விடுதலையாகும் போது மீண்டும் ஜெயிலரின் ஆலோசனை இலவசமாக வந்தது. தலையசைத்து வெளியே வந்தான். சினிமா படத்தில் வருவது போல புதுக் கனவுகளோடும் புது மனிதனாகவும் வரவில்லை. உழைத்து சேர்த்த பணத்தில் சிறிது நாள் காலம் ஓட்டினான். மீண்டும் அவன் தொழிலை கையிலெடுக்க மீண்டும் நீதிபதி முன் ஆஜரானான். அவன் நேரத்திற்கு அதே நீதிபதி வர, இவனைப் பார்த்ததும் நீதிபதி நெற்றியை சுருக்கினார். 


"ஏம்பா! இப்ப தானே போன, அதுக்குள்ள வந்திட்டியே? போன முறை நீ வந்தப்ப உனக்கு நிறைய வேலை கொடுத்து உழைப்பாளியா மாத்திட்டு அனுப்பினா நீ திருந்தி உழைப்பேன்னு நினைச்சு தண்டனையை மற்றவர்களை விட உனக்கு கடுமையாக்க சொன்னேன். நீயும் திருந்தி உழைத்து வாழலாம் இல்ல?" என்று கேட்க, 

"ஐயா! வணக்கம். நானும் அப்படித்தான் நினைச்சி போனேன். ஒரு வேலையில் சேர்ந்தேன். நல்லா உழைத்தேன். ஆனா பாருங்க, சர்க்கார் கொடுத்த சம்பளத்தை விட கம்மியா கொடுத்தார். பார்த்தேன் பேசாம ஜெயிலுக்கு போயிடுவோம். சம்பளமாவது கூட கிடைக்குதுன்னு மறுபடியும் திருடினேன். மாட்டிக்கிட்டேன். இங்கே வந்திட்டேன்" என்றான் அனாயசமாக . 


மேலும் " காசு கரைந்ததும் எண்ணம் மாறிடுது. தெரியாத தொழிலை செய்கிறத விட தெரிஞ்ச தொழிலை செய்து ஜெயிலுக்கு வந்து சம்பாதிக்கலாம் ன்னு வந்தேன் ஐயா! அதுவும் இப்ப முன்பு மாதிரி யாரும் வீட்டிலையோ பர்ஸ்லையோ நிறைய பணம் , காசு வைப்பதில்லை ஐயா, எல்லாம் ஏ .டி .எம். கார்டு தான் யூஸ் பண்றாங்க. நகையெல்லாம் தேவைப்படும் போது பேங்க்குல இருந்து எடுத்து போட்டுக்குறாங்க. மறுபடியும் லாக்கர்ல வைக்கிறாங்க. வீட்டில வெறும் கவரிங் நகை தான் இருக்கு ஐயா, " என்றான் தன் துக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம். 


இதைக்கேட்ட நீதிபதிக்கு ஒரு நொடி தலை சுற்ற, பக்கத்திலிருந்த தண்ணீரை குடித்தார். 

என்ன? என்பது போல் திருடனை பார்க்க, அவனும் 


" நான் திருந்தி என்ன சார் ஆகப்போகுது? நாட்ல இருக்குற பணக்காரங்க எல்லாம் என்னை மாதிரி ஏழையா இருக்கிறவங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம். சில பேர் கடன் வாங்கி சொத்து இருந்தும் சர்க்காருக்கு வட்டி, வரி கட்டாம வெளிநாட்டுக்கு ஓடிப் போயிடறாங்க. அவங்களை கேள்வி கேட்க யாருமில்லை. அதுக்கு ஒரு தண்டனையும் சட்டம் கொடுக்கிறதில்ல. அவங்களை ஈசியா விட்டுபுட்டு... என்னை போல இருக்குறவங்க காசு இல்லாததால குடும்பத்தை காப்பாற்ற திருடறோம். எங்களுக்கு மட்டும் தண்டனை . என்ன நியாயம் இது? நீங்க தண்டனையை எங்களுக்கு மட்டும் கடுமையாக்குறீங்க, கேட்டா நாங்க திருந்தனும்ன்னு சொல்லி மழுப்புறீங்க. ஆனால் ஓடி போனவங்க ஓடி போனவங்க தான். அப்படி அவங்களை புடிச்சாலும் அவங்க சொத்தை மட்டும் வாங்கிட்டு ஈசியா தண்டனையிலிருந்து தப்பிக்க நீங்களே வழியையும் செய்து கொடுக்குறீங்க. என்ன நியாயம் ஐயா இது" என்று கேட்கவும் உண்மையிலேயே நீதிபதி அவன் கேள்வியில் ஆடிப் போனார். உண்மை அப்படியிருக்க , ஏதும் சொல்ல முடியவில்லை அவருக்கு. இருந்தாலும் அந்த திருடனுக்குரிய தண்டனையை எழுதி நீதிமன்றத்தை ஒத்தி வைத்தார்.


அவர் மனதிலும் ஏதோ சொல்லிருக்க வேண்டும் சட்டத்தையும் தண்டனையையும் எல்லோருக்கும் ஒன்றாக திருத்தி எழுதச் சொல்லி.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...