Monday, September 30, 2024

இரவில் ஓர் இசை by Veena Shankar

 


இரவில் ஓர் இசை 


என் நெருங்கிய நண்பரின் பேத்திக்கு போன வாரம் சென்னையில் திருமணம். அதற்கு சென்ற மாதமே பத்திரிக்கை வைத்து, அப்பா இல்லாத காரணத்தால் நான் தான் திருமணத்தை முன் நின்று நடத்தி தர வேண்டும் என்று அவர் மகன் கேட்டுக் கொள்ள , திருமணத்திற்கு முன் தினமே சென்னை சென்றேன். ரயில் பயணம் என்றாலும் தற்போது வயது மூப்பு காரணமாக அசௌகரியம் அதிகம் தான். ஆனால் போக வேண்டியதற்கு போய் தானே ஆக வேண்டும். என் பயணம் பிற பயணியரின் குறட்டையில் இனிதே கலந்து இருந்தது.


 மறுநாள் காலை மேற்படி இடத்தில் இறங்கி எல்லோரையும் நலம் விசாரித்து குளித்து முடித்து பக்கத்திலிருந்த கோயிலுக்கும் இன்ன பிற உறவினர்கள் வீட்டிற்கும் சென்று வர மாலையானது. மாப்பிள்ளை அழைப்பும் படு ஜோராய் முடிந்தது. இரவு உணவு விருந்து முடித்து வந்த பின் எனக்காக அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக நண்பரின் மகன் சொல்ல , சொன்ன அறையில் வேறு சிலரும் தங்கியிருப்பது தெரிந்து கதவை நான் தட்ட, என்னை போல் தனித்து வந்த என்னை ஒத்த வயதுடைய மற்ற மூன்று பேருக்கும் ஒரே அறை என்பதை தெரிந்து கொண்டேன். முன்தின தூக்கமின்மையும் அன்றைய பயண அலுப்பும் என்னை தொற்றிக் கொள்ள மெத்தையின் ஒரு ஓரத்தை எனதாக்கி கொண்டேன். ஆனால் அது சொற்ப நேரமே நிலைத்தது. என்னை விட சற்றே வயதில் முதிர்ந்தவர் தனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபத்திரம் இருப்பதால் தனக்கு மெத்தையின் ஓரமே வசதி என்று சொல்ல அவருக்கு விட்டுக் கொடுத்தேன். சரி , இதிலென்ன ஆகி விடப்போகிறது என்ற மனோ பாவத்தில்.


அலுப்பு இருந்தாலும் வழக்கமாக பன்னிரெண்டு மணி வரை முழித்திருப்பதால் அதற்கு மேல் தான் எனக்கு தூக்கம் வரும். அதனால் என் அலைபேசியோடு உரையாடிக் கொண்டிருந்தேன். சொற்ப நேரத்தில் மெல்ல தூக்கம் வருட, மற்ற எல்லோரும் ஆழ் தூக்கத்தில் இருப்பதை உணர்ந்து தண்ணீர் குடித்து தலை சாய்த்தேன். நடுவில் நான் படுக்க, மற்ற இருவர் பக்கங்களிலும் தலைமாட்டில் ஒருவரும் என்னை சுற்றி அரணாக படுத்து இருந்தனர்.


என் தூக்கத்தின் நடுவே ஒரு புது விதமான இசை என்னை எழுப்ப, ஓ இது அந்த பாடலின் இசையாயிற்றே என்று நினைப்பதற்குள் வெவ்வேறு பாடல்களின் இசை என்னை நினைவு படுத்த , மெல்லிசை கச்சேரி போல என் மனதினுள் பல பாடல்கள் மாறி மாறி ஓட, மெல்ல விழித்து பார்த்தேன். என்னிடம் கடன் கேட்டு இடம் பிடித்த நபரின் தூக்கத்தில் பிறக்கும் இன்னிசை ஒலி அதுவென உணர்ந்தேன். ஆனால் இது புது வித அனுபவம் எனக்கு. குறட்டையில் சங்கீதம் கூட வரும் போல என்று நினைத்து மறுபடியும் படுத்தேன். 


பல நிமிடங்கள் கடந்த நிலையில் மற்றொருவரின் பெருமூச்சு என்னை படுக்கையிலிருந்து காத தூரம் விலக்கியது. குளிர் வசதி கொண்ட அறையும் அவரது பெருமூச்சு கொண்ட குறட்டையில் உஷ்ணமானது.  


சரி தான் என தலையை சொறிந்த படியே சிறிது நேரம் கடத்திய நான், என் தலையணையை எதிர் பக்கம் போட்டு படுக்க முயல, தலைமாட்டில் படுத்திருந்தவர் "என்னப்பா! அவங்க ரெண்டு பேரும் ஒரே பக்கம் படுத்திருக்கும் போது எதிர் திசையில் அப்படி படுக்க கூடாது " என்று இலவசமாய் என்னிடம் அறிவுரை சொல்ல, " இந்த குறட்டை சப்தத்தில் எனக்கு தூக்கமே வரல" என்று புலம்பியபடி அலுத்துக் கொண்டவர் தன் தலையணையை எதிர் திசைக்கு மாற்றி வசதியாய் படுத்துக் கொள்ள, அலைபேசியில் மணியை பார்க்க மணி இரண்டை தாண்டியிருந்தது.  


 யாருக்கும் இரண்டு முதல் ஐந்து மணி வரை தூக்கம் கண்ணை கட்டும் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சரி இனியாவது தூக்கம் வரட்டும் என்று நினைத்து தூங்க ஆரம்பித்தேன்.


 இம்முறை சில மணித்துளிகள் கடந்த நிலையில் மழையில் சப்தமிடும் தவளை போன்ற ஒரு சப்தம் என்னை நித்திரையிலிருந்து எழுப்ப, நான் வெட்டவெளியில் மழை தண்ணீரில் படுத்திருக்கிறேன் போல என்ற உணர்வு என்னுள் வர, இறுக மூடிய விழிகளை விரைவாய் திறந்தேன். மற்ற இருவரின் குறட்டையால் தனக்கு தூக்கம் வரவில்லை என்று சொன்னவரின் சப்தம் தான் அது. இன்றும் தூக்கம் அம்பேல் என்று நினைத்தபடியே தலையணையை காதில் வைத்து படுக்க முயற்சித்தேன்.


 தூக்கம் வந்ததோ இல்லையோ என் அடுத்த நிகழ்ச்சிக்கான புதிய இசை வடிவம் என்னுள் புகுந்ததை என்னால் உணர முடிந்தது. அதை உடனே பதிய வேண்டி என் அலைபேசியை எடுத்து குறித்துக் கொண்டேன்.


குறட்டையிலும் இசையை உருவாக்கியவன் உலகில் நான் ஒருவனாக தான் இருக்க முடியும் என்ற நினைப்போடு அந்த இரவை குறட்டையின் இசையால் இனிதே கழித்தேன்.


ஒரு புதிய முயற்சியில் வெற்றி பெற்றவனாக அடுத்த நாள் நடந்த திருமணத்தில் இரட்டை பூரிப்போடு கலந்து கொண்டேன்.


குறட்டையை சப்தமாக நினைக்காமல் ஒரு இசையாகக் கருதி உங்கள் இரவு நேர தூக்கத்தை தொடருங்கள்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...