பாதை மாறிய பயணம்
ஒரு ஆண் மற்றும் பெண் எறும்புகள் ஜோடியாக தன் கூட்டத்தோடு வாழ்ந்து வந்தன. ஒற்றுமைக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் போனது எறும்புகள் என்பது நமக்கு தெரியும். அப்படி இருந்த எறும்புகளின் இடையே யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. அந்த ஜோடி எறும்பில் மனைவி எறும்பு, தன் கணவன் எறும்பிடம் தனக்கு கூட்டத்தினரோடு இருக்க விருப்பம் இல்லையென்றும் வேலை பளு காரணமாக தன் கணவன் குழந்தைகளோடு தனித்து வாழ ஆசைப்படுவதாக சொன்னது. முதலில் ஆண் எறும்புக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் அடி மேல் அடி வைக்க அம்மியும் நகரும் தானே?
சில நாட்களில் ஆண் எறும்பு தன் மனைவியின் பேச்சை கேட்டு தன் கூட்டத்தினரிடம் காரணம் இல்லாமல் சண்டையிட்டது. மேலும் தான் தன் குடும்பத்துடன் தனித்து வாழ விரும்புவதாகவும் அதனால் கூட்டத்தை விட்டு விலகிவிட முடிவு செய்வதாகவும் சொன்னது. இதைக் கேட்ட மற்ற எறும்புகள் தங்களுக்கு இதில் விருப்பமில்லையென்றும் ஒற்றுமைக்கு நாம் தான் மனிதனுக்கு உதாரணமாக இருக்கிறோம். அதனால் நீ எங்களை விட்டு பிரியக்கூடாது என்றும் சொல்லியது. அப்படியென்றால் நான் கூட்டத்துக்கு தலைவனாக மட்டுமே இருப்பேன் சரியா எனக் கேட்கவும், தன்னை பிற எறும்புகள் தலைவனாக ஏற்றுக் கொள்ளாது என்று நினைத்தே கேட்டது ஆண் எறும்பு. ஆனால் மற்ற எறும்புகள் தங்களுக்குள் பேசிக் அந்த எறும்பையே தலைவனாக ஏற்று கொள்ள முடிவு செய்தது. தலைவன் என்ற தலைகனத்தால் அந்த எறும்பு வலம் வர , தன் புருஷன் இப்போது தான் சரியான முடிவை எடுத்திருக்கிறான் என மனைவி எறும்பும் நினைத்தது.
தனக்கு கிடைக்கும் எந்த உணவு பொருளானாலும் தான் தான் முதலில் எடுத்துக் கொள்வதாகவும் தன் மனைவி பிள்ளைகள் உண்டது போக மிச்சம் தான் மற்ற எறும்புகள் சாப்பிட வேண்டும் என கட்டளையிட்டது புதிய எறும்புகளின் தலைவன் . அதற்கும் மற்ற எறும்புகளும் ஒத்துப் போக அவைகளுக்குள் புதிய தலைவனால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் அதை பெரிதுபடுத்தவில்லை.
நாளடைவில் இந்த தலைவன் எறும்பு தன் மனைவி பிள்ளைகளுக்காக நிறைய உணவுகளை பதுக்கி வைக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தன் நிம்மதி, தூக்கம் எல்லாவற்றையும் துறந்து முழு நேரமாக ஓய்வில்லாமல் உழைத்தது. மற்ற எறும்புகளை அடிமை படுத்தி தன் வேலைகளை சாதித்துக் கொண்டது தலைவன் எறும்பு. மேலும் புற்றுக்குள் வருவதையும் தவிர்த்து வந்தது. இது மனைவி எறும்புக்கு வேதனை தந்தாலும் தன் கணவன் தான் தலைவன் என்றும் தன் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை இருக்கிறதே என்ற ஆனந்தத்தில் திளைத்தது. மேலும் என்றும் தங்களுக்கு உணவு பஞ்சம் இருக்காது என்று நினைத்துக் கொண்டு அப்படியே தன் கணவன் போக்கிற்கு விட்டு விட்டது.
நாட்கள் மெல்ல நகர கோடை முடிந்து மழை காலம் தொடங்கியது. எறும்பு கூட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பு உணவை பகிர்ந்து உண்டு புற்றில் தஞ்சமடைந்தன. இதற்கிடையே விடாது மழை பொழிய வெளியே இருந்த தலைவன் எறும்பு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் அதன் உழைப்பின் பலனாக எப்படியோ ஒரு சருகை பற்றி மெல்ல கூட்டிற்குள் முடங்க எத்தனித்தது. ஆனால் தன் பெருத்த உடலின் காரணமாய் அது உள்ளே போக முடியாமற் போனது.
மற்ற எறும்புகள் தாங்களும் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்படுவோம் என்ற அச்சத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பக்கத்திலிருந்த ஒரு மரத்தின் பொந்தினுள் அடைக்கலமாகியது.
தலைவனும் அவன் குடும்பமும் உண்டது போக மிச்ச உணவை மற்ற எறும்புகள் பகிர்ந்து கொண்டதால் வடிவில் சிறுத்து போயிருந்தன. அதே நேரத்தில் அளவுக்கு மீறி சாப்பிட்ட தலைவன் எறும்பின் குடும்பம் பெருத்து போய் இருந்ததால் புற்றிற்குள் இருந்து பாதி தூரத்திற்கு மேல் அவைகளால் வெளியே வர முடியவில்லை. மற்ற எறும்புகள் உதவ முன் வந்தாலும் அது வெற்றியடையவில்லை. குடும்பத்தை காப்பாற்ற முடியாமற் தலைவன் எறும்பு தவித்தது.
எறும்புக் கூட்டம் எதிர்பார்த்தது போலவே அன்று பெய்த பேய் மழையில் எறும்பு புற்று கரைய ஆரம்பித்தது. எறும்பு தலைவனின் குடும்பம் மட்டும் விதியின் காரணமாய் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. குடும்பத்தை இழந்த தலைவன் எறும்பு வேறு வழி தெரியாமல் தான் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மற்ற எறும்புகள் தஞ்சமடைந்த மரத்தை நோக்கி சென்றது.
மற்ற எறும்புகளின் வேதனையில் சாதனை கொண்ட எறும்பு தத்தளித்தது
பாதை ஒன்றாய் இருந்து பயணம் வேறானால் சிக்கலே

No comments:
Post a Comment