ஆயாவும் காக்கையும்
"ஆயா! ஆயா ! " என்று அழைத்தது மரத்தின் மீது அமர்ந்திருந்த காகம். "யாரு கூப்பிடறது?" என்றவாறே சுற்றும் முற்றும் பார்த்த ஆயாவிடம் " நான் தான். மரத்தின் மேலே பாரு" என்றது காகம் மீண்டும்.
மேலே பார்த்த ஆயாவிற்கோ கோபம் தலைக்கேறியது,
" இன்னிக்கும் வடை திருட வந்துவிட்டாயா?" இந்த கிழவியிடம் போய் திருடுகிறாயே உனக்கு வெட்கமாய் இல்லை? நேற்று திருடி, மறுபடியும் இன்று வந்து ஆயா ! ஆயா! ன்னு சாந்தமாய் கூப்பிட்டு தொல்லை பண்ணுகிறாய் . போ ! போ! " என்று விரட்டிக் கொண்டே வடையை மூடி வைத்து மறைத்தாள்.
" போ ஆயா! நேற்று தின்ன வடையை என் குஞ்சுகிட்ட கொடுத்தேன். ஆனால் அது வடையெல்லாம் வேண்டாம், ஆயாவை பீட்சா போட சொல் என்றது. இன்று பீட்சா வாங்கி வரச் சொல்லியிருக்கிறது. நானும் அதெல்லாம் ஆயாவிற்கு போட தெரியாது என்று சொன்னாலும் அடம் பிடிக்கிறது. நேற்று உன்னிடமிருந்து சுருட்டிய வடையை அப்புறம் நான் தான் சாப்பிட்டேன். அதனால் ஆயா நீ ஏன் பீட்சா விற்க கூடாது? " என்று கேட்க, " என்னது பீட்சாவா! அப்படியென்றால் என்ன?" என ஆயா கேட்டு விழித்தாள். "என்ன ஆயா ! இது கூட தெரியாதா? அதான் இப்போது எல்லாரும் வாங்குகிறார்களே! எல்லா இடங்களிலும் ஏன் ஆன்லைன் ல கூட விற்கிறார்களே !" என்று சொல்ல, "அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது. அதுவும் இல்லாமல் அதற்கெல்லாம் ரொம்ப செலவாகும் போல தெரியுது. பேரும் புதிதாக இருக்கிறது. " என்று சொல்லி தன் வேலையில் மூழ்கினாள். " இல்லை ஆயா! நான் சொல்வதைக் கேளு. அதை நீ கற்றுக் கொண்டால் உனக்கு இலாபம் பல மடங்கு பெருகும். உன் வடையை பிழிந்து எடுத்தால் ஒன்றரை வண்டி எண்ணெய் தான் வருகிறது. ஆனால் பீட்சா ல அப்படி எண்ணெய் இருக்காது. அதுவும் இப்போது எங்களுக்கு இரத்த கொதிப்பு , சர்க்கரை வியாதின்னு பெரிய நோயெல்லாம் வந்திருக்கிறது. மருத்துவர் எண்ணெய் பண்டத்தை தவிர்க்க சொல்லியிருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே மெல்ல அவள் பக்கம் வந்தது காகம்.
" வடையில் எண்ணெய் அதிகம் இருக்குன்னு சொல்கிறாயே, பாரு! இதிலே எங்கே எண்ணெய் இருக்கு?" என்று சொல்லிக் கொண்டே மூடியிருந்த வடையைக் காக்கையிடம் காட்டினாள். "பார்க்கும் போது தெரியாது, ஆனால் சாப்பிடும் போது தான் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே இன்றும் இரண்டு வடையை அபேஸ் செய்து பறந்தது காக்கை. " ச்சீ... போ! உன் புத்தி உன்னை விட்டு எங்கு போகும்? அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை நீ மாறவே இல்லையா?" என்று நொந்து கொண்டே வடை தட்டை மறுபடியும் மூட, அதற்குள் பத்து காக்கைகள் அவள் முன் பிரவேசமானது. "ச்சு ... க்சு..." என்று சொல்லி காக்கை கூட்டத்தை விரட்டினாள் ஆயா.
காலம் மாறினாலும் பிறவி குணம் மாறாது என்பது உண்மை தான் போல.

Nice Veena
ReplyDeleteThank you Anitha
ReplyDelete