ஆ(டை)சைக்கு முடிவு
ரமாவிற்கு ஊர் சுற்றுவது என்றால் கொள்ளை பிரியம். அதுவும் கார் இருந்தாலும் தன் கணவன் தருணோடு டூவீலரில் பயணிப்பது அவள் தனக்கு கிடைத்த பாக்கியம் என்றே எண்ணுவாள். அதேபோல அவளுக்கு பிடித்த இன்னொரு விஷயம் விதவிதமான சுடிதார், புடவை உடுத்துவது தான். அவளுடைய செலக்சன், கலெக்ஷனும் கண்டு பொறாமை கொள்ளாதவர்களே இல்லை. அவ்வளவு நேர்த்தியாக உடுத்துவதோடு அதற்கு ஏற்றார் போல் அணியும் நகையும் சொல்ல வைக்கும் "வாவ்".
அவளுடைய இந்த செயலுக்கு தருணும் ஏதும் சொல்வது கிடையாது.
ஒருநாள் தருண் தன் அம்மாவிடம் ரமாவின் செயலை சொல்லி வருத்தப்பட, அம்மாவும் "உன் கூட பிறந்த பெண் பிள்ளைகள் இல்லை. அதனால் பெண்களை பற்றி உனக்கு ஏதும் தெரியாது. நானும் உங்க அப்பாவிடம் வாழ்க்கைப்பட்ட பிறகு அந்த ரசனை எல்லாம் எனக்கு மறந்தே போச்சு.
எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும்" என்று ஆறுதல் சொல்லியிருந்தாள். அம்மாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் இன்று வரை அவனை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆனபோதும் ரமாவிற்கு குழந்தை உண்டாகவில்லை. இதில் அவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் தருண், அவன் அம்மாவிற்கு ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தான் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. அந்த இனிய நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும் அவர்கள் திருமணத்தின் போது ரமாவின் பெற்றோர் தருணின் கையை பிடித்து தன் மகள் குடும்பத்திற்கு ஒரே பெண் என்பதால் அதிகம் செல்லம் கொடுத்ததாகவும் அவள் ஒரு புடவை பைத்தியம் என்றும் அவள் கேட்பதை மறுக்காமல் வாங்கி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.
ரமாவும் தருண் தன் ஆசைக்கு தடை போடாததால் அவனிடம் கொள்ளை அன்பும் மற்றவரிடம் பெருமையாகவும் பேசுவாள்.
அன்று இருவரும் உறவினர் ஒருவருக்கு அன்பளிப்பு வாங்க கடைத்தெருவுக்கு செல்ல திட்டமிட்டனர். பொதுவாக பெண்கள் கிளம்ப அரை மணி நேரமாவது ஆகும். ஆனால் ரமாவிற்கு அதிகபட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
தருணின் அம்மாவும் தனியே வசிப்பதால் ரமாவிற்கு பொறுப்புக்கள் குறைவு. முடிந்தால் சமைப்பதும் இல்லை என்றால் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதும் பெரியவர்களிடம் பர்மிஷன் கேட்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு சமைத்து வைத்து தான் கிளம்ப வேண்டும் என்ற கட்டாயமும் ரமாவிற்கு இல்லை.
" ஏங்க! நானே கிளம்பிட்டேன். நீங்க இன்னும் என்ன செய்றீங்க? " என்று தருணை பார்த்து நக்கலாக கேட்க, "ரமா! உன்னோட வரணும் என்றால் ஏடிஎம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறதே என தன் பர்ஸை காண்பித்து கண்ணடித்தவாறே பதில் சொல்ல, அவர்களுக்குள் சிரிப்பு சிறப்புடன் பரிமாறப்பட்டது.
அழகு தேவதையை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு செல்லும் பொழுது தருணுக்கும் பெருமை தானே. அவனும் அழகில் சளைத்தவன் அல்ல. திருமணம் ஆகும் வரை அவன் காதலுக்காக பின்னால் சுற்றிய பெண்களும் உண்டு. அதில் சிக்காமல் தப்பித்த அவன், ரமாவிடம் மாட்டிக் கொண்டதாக பலமுறை ரமாவிடமே சொல்லியும் உள்ளான்.
எப்போது வெளியே சென்றாலும் அவளுக்கு பிடித்த சுடிதார் அல்லது புடவையோ கடை வாசலில் தொங்க வைக்கப்பட்டிருந்தால் அது அடுத்த நிமிடம் ரமாவின் கையில் தஞ்சமடையும். மறுப்பு ஏதும் சொல்லாத தருணிடம் ரமாவும் தஞ்சமடைவாள்.
தருண் கூப்பிட்டதும் முயல் போல் ஓடி வந்து மான் போல துள்ளி பைக்கில் அமர்ந்தாள். அவள் அமர்ந்த மறு நிமிடமே பைக் புறப்பட, அவள் கைகள் தருணின் இடுப்பை வளைக்க, அருகில் இருந்தவர்களுக்கெல்லாம் அது காட்சியானது.
தருணுக்கு, அவள் தன்னை கட்டிப் பிடித்துக் கொண்டு வருவது பிடித்தம் என்பதால் எப்போதுமே ரமா இப்படித்தான் பயணிப்பாள்.
வண்டி மெயின் பஜாருக்கு வர பாலத்தின் மேலே ஏற வேண்டி இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த ரமாவும் அங்கு நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை தருணிடம் பகிர்ந்து கொண்டே வந்தாள். ஒரு சில நிமிடங்கள் மௌனம் காத்த ரமாவிடம் " என்ன! சத்தத்தையே காணோம் ? " என்று தருண் கேட்டாலும் அது அவள் காதுக்கு எட்டவில்லை. டிராபிக் சத்தத்தில் அவளுக்கு கேட்கவில்லை போல என்று நினைத்தாலும், அவள் நீண்ட மௌனம் அவனை மறுபடியும் கேட்க தூண்டியது. அவன் மறுபடியும் அதே கேள்வியை அவளிடம் கேட்க, மெல்ல டிராபிக்கில் பைக் ஊர்ந்து சென்றது. "ஏங்க ! ஏங்க! வண்டியை நிறுத்துங்க! அதோ அங்க பாலத்துக்கு எதிர் பக்கம் ஒரு ஜவுளி கடையில தொங்க விட்டிருக்குற எல்லா புடவைகளும் அழகா இருக்குதுங்க.
வாங்க போலாம்." என சொல்ல, அவள் சொன்ன திசைக்கு தன் விழிகளை திருப்பி விட்டான் தருண்.
இந்த விஷயத்திற்காக அவளிடம் முதன் முறையாக கோபித்துக் கொண்டான் தருண். " எவ்வளவு புடவை வாங்கி கொடுத்தாலும் உனக்கு பத்தாதா? நல்லா பாரு! அது ஜவுளிக்கடை இல்ல. பாலம் அமைப்பதற்காக வந்தவர்களின் குடும்பத்தினர் அதற்கு கீழே தங்கி இருக்கிறார்கள். தினமும் இந்த வழியே ஆபீசுக்கு போகும் எனக்கு, இந்த காட்சி கண்ணில் பட்டாலும் உன் அளவுக்கு நான் யோசிக்கவில்லை. பாவம். அவங்க புடவைகளை விட்டுவிடு . அவர்கள் படும் கஷ்டத்திற்கு நாம் தான் அவர்களுக்கு புதுப்புடவை வாங்கி தரணும்." என்று சற்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே தாங்கள் செல்ல வேண்டிய கடையை அடைந்தான். அவன் உரத்த குரலை கேட்டவர்கள், ரமாவை நக்கல் பார்வை பார்ப்பது அவளுக்கு தெரிந்தது. தன்னுடைய செயலுக்கு தன்னை நொந்து கொண்டாள். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்கு இனிப்பு சாப்பிட ஆசையாக இருப்பதாக கூறி பக்கத்தில் இருந்த இனிப்பு கடைக்கு சென்றாள் தருணின் பதிலுக்கு காத்திராமல். தானே ஸ்வீட் வாங்கி அதில் ஒரு சுவீட்டை பொது இடம் என்றும் பார்க்காமல் தருணுக்கு ஊட்டி விட்டாள். அவன் வெட்கத்தில் சிவந்தான்.
ஆம் ! தான் முழுகாமல் இருப்பதாக அவள் , அவன் காதருகே சொல்ல மீண்டும் வெட்கப்பட்டதோடு இனிமேல் ரமாவின் புடவை வாங்கும் எண்ணம் குறைந்து போகும் என்ற மகிழ்ச்சியில் இன்னொரு சுவீட்டை எடுத்து தானே வாயில் போட்டுக் கொண்டான். தனக்குத்தான் ஊட்ட வருகிறான் என்ற ரமாவின் நினைப்பிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது . அவளின் முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே அவளுக்கும் சுவீட்டை ஊட்டி விட்டான் ஆசையாக. ரமாவின் ஆசைக்கு முடிவு வந்தது என்று நினைத்து.
ஆசை கொள், பேரசையாக மாறி விடாமல் பார்த்துக்கொள்

No comments:
Post a Comment