நிறையாத உண்டியல்
நிதமும் உண்டியலில் சில்லறை காசு போடுவது ராசையாவின் பழக்கம். அதை தன் பிள்ளைகளுக்கும் வழக்கப்படுத்தியிருக்கிறான். பெரியவர்கள் கொடுக்கும் பணம், சில்லறை காசுகளை உண்டியலில் போட்டு வைத்தால் உண்டியல் நிறைந்தவுடன் அவரவர் தேவைக்கேற்ப அதிலிருந்து பொருள் வாங்கி கொள்ளலாம் என சொன்னதால் பிள்ளைகளும் அவன் பேச்சை கேட்டு நடந்தனர். அதேபோல அவன் மனைவியும் தனக்கு கிடைக்கும் மிச்ச மீதி காசை உண்டியலில் போட்டு விடுவாள். இம்முறை வாங்கியது சற்று பெரிய மண் உண்டியல் என்பதால் அது நிறைய நாட்கள் ஆகும் என்று ராசையா சொன்னான் . ஆனால் இம்முறை உண்டியலில் காசு அளவு பாதிக்கு மேல் தாண்டவில்லை. இன்று நிறைந்து விடும் என்று நினைத்தாலும் அது நிறையாதது அதிருப்தியை கொடுத்தது ராசையாவிற்கு.
எப்போதும் ஓரிரு மாதங்களிலேயே நிறையும் அந்த உண்டியல் பல மாதங்கள் ஆகியும் நிறையதாது கண்டு ஆச்சரியம் கொண்டான். பெரிய உண்டியல் என்றாலும் இப்போது நிறைந்திருக்க வேண்டுமே என்றும் கணக்கு போட்டான். நிறையாததன் காரணம் என்ன என்று தெரியாமல் விழித்தானே ஒழிய அதைப்பற்றி மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ அவன் விசாரிக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேலே இதை அவனால் ஜீரணிக்க முடியாமல் அன்று உண்டியலை குலுக்கி பார்க்க எண்ணி செயலில் இறங்க, அது வேகமாய் அவன் கையில் பாதி நிறைந்த நிலையில் அடைக்கலமாகியது. உண்டியலை உடைக்கும் போதும் வீட்டின் அங்கத்தினர் முன்னிலையில் உடைப்பது தான் அவர்கள் வழக்கம். தன்னை தவிர யாரும் காசு போடவில்லையோ? என்ற சந்தேகம் வலுக்க, மனைவி, பிள்ளைகளை அழைத்தான். அவர்கள் முன்னிலையில் அவன் கேள்வி எழுப்ப, ஒருவரை ஒருவர் முகம் பார்த்து விழித்தனர். ராசைவிற்கு முன் கோபம் அதிகம் என்பதால் பிள்ளைகள் பதில் சொல்ல தயங்கினர். "யாருக்காவது விசயம் தெரிந்தால் சொல்லலாம், இதனால் அவர்களை தான் கடிந்து கொள்ள போவதில்லை" என்று ராசையா சொல்லவும் மூத்த பிள்ளை அம்மாவின் முகத்தை சொல்லவா என்பது போல் பார்த்தான். "ம் சொல்லு " என்று மகனை பார்த்து ராசையா அரட்டவும் அவன் மனைவி முந்திக் கொண்டாள். " நீங்கள் தப்பா நினைக்காதீங்க. நாளைக்கு உங்களுக்கு பிறந்த நாள் வருது. எப்போதும் உண்டியல் காசை நம் தேவைக்காக மட்டுமே அப்பா செலவழிக்கிறார். அப்பாவிற்கு என்று ஒரு முறை கூட அதிலிருந்து நாமும் செலவு செய்யவில்லை. நாம் வற்புறுத்தினாலும் அப்பா எடுத்து கொள்வதில்லை. அதனால் இம்முறை நாம் நமக்கு கிடைக்கும் காசை உண்டியலில் போடாமல் தனியே சேர்த்து வைத்து அப்பாவிற்கு பிறந்த நாள் பரிசாக அவருக்கு சட்டை வாங்கி தரலாம் என பிள்ளைகள் ஆசைப்பட்டு சொன்னதால் நானும் அதற்கு சம்மதம் சொல்லி விட்டேன். இத்தனை நாளும் நீங்கள் மட்டும் தான் உண்டியலில் காசு போட்டு வந்துள்ளீர்கள். அதனால் தான் உண்டியல் சீக்கிரம் நிறையவில்லை. இந்த முறை மட்டும் எங்களை ஒன்றும் சொல்லாதீர்கள்" என்று மனைவி கெஞ்சியும் உள் அர்த்தத்தில் கொஞ்சியும் சொன்னதால் ராசையா அவர்களை அப்படியே விட்டுவிட்டார். மனதில் பூரிப்பு கொண்டாலும் இந்த மாதிரி ஒளிவு மறைவு குடும்பத்தில் இருந்தால் பின்னாளில் அதனால் சங்கடம் வரும் என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்தவும் ராசையா மறக்கவில்லை.
மன்னிப்பும் ஒரு முறைக்கு மேல் கேட்டால் கேட்பவருக்கு மதிப்பில்லை.

No comments:
Post a Comment