Sunday, July 23, 2023

திருத்தேர் by Veena Shankar





 திருத்தேர் உற்சவம்


திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக பெரிய தேர் என்று சொல்லப்படும் ஶ்ரீவில்லிபுத்தூர் தேர் திருவிழா நேற்று ஆடிப் பூர திருநாளில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்தனை வருடங்களாக பக்கத்து ஊரில் வசித்து வந்தாலும் ரசிக்க முடியாமல் போய்விட்ட தருணங்கள் வீணோ? என்று தோன்றியது. முதன் முறையாக இந்த உற்சவத்தை பார்த்த போது அருமையான நேரம் தான் எனக்கு.


திருவாரூர் ரதத்தின் தம்பியோ இவன்?


அரிதாரம் இல்லா அலங்காரம் கொண்டவனோ?


பூமாலை மட்டுமே தரித்தாலும் அசஞ்சாடிகளோடு வருவதும் கொள்ளை அழகே.


காண விழிகள் அகலமானதோ? இல்லை விழிகளை அடைத்து தேர் வீதியில் நின்றதோ?


 பிரம்மாண்டத்தின் பொருளை உணர்ந்த சமயம் மெய் சிலிர்த்ததோ?


வனப்பு யாரிடம் இல்லை? படைத்தவனிடம் இருக்கும் போது அவன் படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் உண்டு தானே?


தேர் அசைந்து வந்த அழகும் வீதியில் அதன் தடம் பதித்த அழகும் அற்புதமே!


மக்கள் கூட்டம் எறும்புகளை போல் சுற்றி நின்று காண, இனிப்பாகி போனது நடுவில் பவனி வந்த தேர்.


வடங்களை பிடித்து இழுப்பதற்கென்று ஒரு கூட்டம். தேர் வீதியின் கோடியில் திரும்பும் போது அதன் வடம் 250 முதல் 300 மீட்டர் வரை முன் நின்றது . மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க, தேர் வீட்டு வாசலில் வந்ததோ என்று நான் பார்க்க, அது திரும்பாமல் கண்ணாமூச்சி காட்டியது.


பஜனை கூட்டங்களும், திருமண் இட்ட முகங்களும் , நான்கு வீதிகளிலும் களை கட்டியது.


தூரத்தில் பார்க்கும் போது சாதரணமாக பட்ட தேர், பக்கம் நெருங்க நெருங்க அந்த காட்சி கண் முன்னே என்றும் மறவாது என்னுள்ளே!


ரதம் நெருங்கி வந்த வேளையில் என் சிரம் என்னை அறியாமல் என் பின்னோக்கி போனது அதிசயமே!


அன்னதான கூடங்களும் பல, அடுத்தவரை கவரும் பொருள்

விற்பனையாளர்களும் பலர், சிறுவர் சிறுமியரை கவர.


தெரிந்த பெண் பிள்ளைகளுக்கு வளையல் வாங்கி கொடுப்பதும் ஊர் வழக்கம் என்று நினைக்கிறேன்.


 பெண்ணை சம்மந்தம் செய்த வீட்டிற்கு அதாவது தங்கள் வீட்டு பெண்ணின் கணவருக்கு "தேர் தேங்காய் " என்று பூ, பழம், தேங்காய் மற்றும் தட்சணையோடு ஓதி இடுவது என்பதுபெண் வீட்டார் வழக்கம். இதற்கு வருடங்கள் கணக்கில்லை. வருடா வருடம் அவர்கள் கடைபிடிப்பதும் சிறப்பே!


என் மன வேட்கையை பூர்த்தியாக்கி விட்டேன் நேற்று, மீளா அந்த நினைவுகளோடு இன்னமும், அடுத்த வருட தேர் திருவிழாவை இப்போதே எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...