Tuesday, October 31, 2023

காண்பவையாவும் அழகு by Vidhya Nivash

 



பாறை போல் மனம் இறுகி போனது

 என்று தான் கேள்வி பட்டு

 இருக்கிறோம். ஆனால் இந்த அழகை

 பார்த்து பாறை போன்ற மனமும்

 பனியாக உருகி ஓடையாக ஓடுதே

 இங்கு.மேகங்கள் புடைசூழ, சூரியன்

 வந்து பனி விலக இந்த காற்று வந்து

 மெல்ல தலை கோத மெல்ல

 அசையாமல் அசையுது பாறைகள்

 மனதில் ...மனம் விரும்பினால்

 வெறுமையும் அழகு ,காண்பவை

 யாவும் அழகு .  

கிணறு by Veena Shankar

 


கிணறு


வினோதினி, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் படிக்க விரும்பியதால் அந்த ஊரிலேயே முதன் முதலில் கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கு படிப்பறிவு கூடுதல் என்பதால் பள்ளி ஆசிரியர் ஒருவர் அவள் பெற்றோரிடம் பேசி பக்கத்து டவுனில் இருக்கும் கல்லூரியில் சேர இடமும் வாங்கி கொடுத்தார். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இருந்ததால் அவளை படிக்க சம்மதித்தனர் பெற்றோர்.


அவள் வசித்த ஊருக்கு மத்தியில் ஒரு பெரிய கிணறு இருந்தது . ஆனால் அந்த கிணற்றை சுற்றி சுற்றி ஊர் மக்கள் செல்வார்களே தவிர யாரும் அந்த கிணற்றை எட்டி பார்ப்பது கூட கிடையாது . பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தவர்கள் எல்லாம் அதை பற்றி நல்ல விதமாக சொன்னதில்லை . 


கல்லூரிக்கு செல்லும் போது அந்த கிணற்றை கடந்து தான் போகவேண்டும் வினோதினிக்கு. அவளுக்கு ஒரு முறையாவது அந்த கிணற்றை எட்டி பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை தன் வீட்டிலும் வெளியிலும் சொன்னால் என்ன விளைவு என்பது அவளுக்கே தெரியும். அதனால் யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து ஊரில் ஒதுக்குப்புறமாக வாழும் தொண்ணூறு வயது கிழவி முனியம்மாளை கேட்டால் தெரியும் என்றும் இந்த வார விடுமுறையில் அதை செயல்படுத்தவும் முடிவு செய்து கொண்டே அன்று கிணற்றை கடந்தாள். 


வீட்டில் தான் கோயிலுக்கு செல்வதாக கூறி முனியம்மாளின் வீட்டிற்கு சென்று விசாரிக்க, தன் காலத்தில் இருந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தனக்கு எதிராக நின்றவர்களை அந்த கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, கிணறு உயிர்பலி வாங்கியதாக புரளியை கிளப்பி விட, ஊர் மக்களும் அதையே நம்பினர். இருந்தாலும் தன் பங்குக்கு அது உண்மையல்ல என்று மக்களிடம் சொன்னாலும் யாரும் அவள் பேச்சை கேட்காமல் ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர் என்றும் முன்பெல்லாம் ஊர் மக்களின் தேவைக்கு நீர் கொடுத்த அந்த கிணறு , இப்போது பயன்பாடற்று இருப்பது தனக்கு வேதனை தருவதாக சொன்னாள். 


தக்க சமயம் வர வினோதினி காத்திருந்தாள் . இரு நாட்கள் கருப்பசாமி கோயில் திருவிழா என்பதால் ஊர் மக்கள் கிடா வெட்டி கொண்டாட இருந்தனர். வினோதினி தனக்கு அன்றும் கல்லூரியில் தேர்வு இருப்பதால் விடுப்பு எடுக்க முடியாது என்று பெற்றவர்களிடம் பொய் சொன்னாள். "ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் நீ கண்டிப்பாக திருவிழாவிற்கு வரவேண்டும்" என அம்மா சொல்ல , தான் தோழி வீட்டில் தங்குவதாக வினோதினி சொன்னாள். விடியற்காலையில் ஊர் மக்கள் ஒருவர் பின் ஒருவராக செல்ல ஊர் வெறிச்சோடியது.


ஊரில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு கிணற்று பக்கம் போய் எட்டி பார்த்தாள் . எட்டி பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாததால் கிணறு படு மோசமாக இருந்ததை கண்டாள். தான் கிணற்றை பார்த்து விட்ட மகிழ்ச்சியில் திரும்பியவளுக்கு "பாப்பா ! பாப்பா! " என்று யாரோ கூப்பிடுவது போல் உணர்ந்தாள். ஊரில் தான் யாருமில்லை அப்புறம் எப்படி குரல் வரும் என்று நினைத்து மேலும் சில அடிகள் எடுத்து வைக்க, மறுபடியும் "பாப்பா!" என்ற குரல் சத்தத்துடன் அழைத்தது. குரல் வந்த திசையில் கிணறு மட்டும் தான் இருந்தது. தான் தவறு செய்து விட்டதாக வினோதினி உணர்ந்தாள். ஊரார் அந்த கிணற்றில் பல உயிர்கள் பலியாகி உள்ளதாகவும் மேலே எடுக்க இயலாமல் பலர் அங்கே புதைந்ததாகவும், அந்த கிணறு காவு வாங்கி கொள்வதாகவும் அதனால் அந்த கிணற்றில் தண்ணீர் இறைப்பதை மக்கள் நிறுத்தியதாகவும் சொன்னதை தான் காதில் வாங்காமல் முனியம்மாள் சொன்னதை நம்பி இப்படி செய்து விட்டோமோ என்று நினைத்தாள். அதை எட்டி பார்த்தால் சாவு நிச்சயம் என்று ஊரார் சொன்னதை மிஞ்சி எட்டி பார்த்து விட்டோம். விளையாட்டு வினையாகி போனது என பயந்தாள் .


 இருந்தாலும் மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மறுபடியும் மெல்ல கிணற்று பக்கம் சென்றாள். அதனை எட்டி பார்த்தாள். அந்த அசுத்தமான கிணற்றை பார்க்க, அவள் மனம் மட்டும் தெளிவாகியது. 


தன்னை காப்பாற்றும் படி வினோதியிடம் அந்த கிணறு வேண்டி கொண்டதாக அவள் நினைக்க, அதற்கான முயற்சியும் எடுத்தாள். தன் கல்லூரியில் இதை பற்றி சொல்லி, அவர்களிடம் அனுமதி பெற்று , என் எஸ் எஸ் மாணவர்களை கொண்டு தானும் அந்த கிணற்றை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். ஊராரின் பேச்சுக்கு காது கொடுக்காமல், சுமார் ஓரு வாரம் கிணற்றின் அழுக்குகளை சுத்தப்படுத்தி, தெளிந்த நீரோடை போல மாற்றினர் மாணவக் குழுவினர். பூச்சி மருந்துகளை இட்டு ஒரு வாரத்திற்கு பின் அந்த நீரை பயன்படுத்துமாறு வினோதினி ஊர் மக்களிடம் சொன்னாள். 


மேலும் இப்படி பயன்பாடற்ற நீர்நிலைகளை பற்றி சொன்னால் தங்கள் குழுவினர் அதை சுத்தப்படுத்தி தருவதாக சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தினாள். அவளுடைய நற்சிந்தனைக்கு ஊர் மக்களிடமிருந்தும் கல்லூரியிலும் பாராட்டு கிடைத்தது மட்டுமல்லாமல் அவளை தனியே அடையாளப்படுத்தி காட்டியது .


விடா முயற்சியும், ஆக்கமும் இருந்தால் கை மேல் பலன் நிச்சயம் கிட்டும்

Monday, October 30, 2023

மலையும் மரமும் by Vidhya Nivash


 சுற்றியும் பாறை பாறையாக

 செதுக்கிய சிற்பம் போல் எப்படி இந்த

 காற்றும் மணலும் சேர்ந்து இப்படி

 உருவெடுக்க .அதிசயம் எங்கும்

 கருங்கற்கள் அதில் விழும் சிறு

 மழைத்துளிகளை சேர்ந்து வைத்து

 எப்படி இந்த மரங்கள் குடைபோல்

 வளர்ந்து நிற்கின்றன. அதில் வாழும்

 மலை ஆடுகளும் எங்கே இதன் ஆதி

 என்று தேட தோன்றுகிறது.

இயற்கையின் அதிசயங்கள் எவ்வளவு

 மாறுபட்ட படைப்புகளையும் ,

 ஜீவன்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும் வியக்க செய்கிறது.

Sunday, October 29, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 

 


கண்ணுக்கு மை அழகு


புருவங்களுக்கு கருமை அழகு


இமைகளுக்கு செழுமை அழகு 


முகத்திற்கு பொறுமை அழகு


நாவிற்கு புலமை அழகு


பற்களுக்கு வெண்மை அழகு


உதட்டிற்கு தூய்மை அழகு


புன்னகைக்கு முழுமை அழகு


கூந்தலுக்கு வலிமை அழகு


எல்லாமும் ஒரே சேர பெண்மை அழகு


ரசிக்கும் திறமையும் அழகு

 கண்ணாடியின் முன் அவரவர் ரசினை

 படி


சாயம், முகத்திற்கு மட்டுமல்ல, உள்


 மனதிலும் கொண்டாள்,


 சூழ்நிலையால் வேசி என்ற பட்டம்


 சூடிதால்


சிவப்பு என்பது அபாயம் என்றாலும் நீ

 மட்டுமே உபாயம் ஆனாய் அன்று

Saturday, October 28, 2023

புறாவின் புலம்பல் by Vidhya Nivash


 இருக்கும் மரங்களையும் இடைஞ்சல்

 என்று வெட்டிவிடுறீங்க .எதோ

 மழையில் ,வெயிலில் குடையாக

 இருந்ததும் இல்லை வீட்டையாவது

 நாங்கள் வந்து கூடு கட்ட.. அட இங்க

 மண்ணை தவிர எதுவுமில்ல எதை

 வைத்து கட்ட சிப்ஸ் கவரை வைத்தா..


அப்பவே சொன்னேன் மரம் இருக்க

 இடத்துக்கு போகலாம் என்று.நீ தான்

 சொன்ன இங்க பிரியாணி,

 பீட்சா,முட்டை, ரொட்டி கிடைக்கும்

 என்று தங்க இடமிருக்கா...அவங்க

 மட்டும் வீட்டில் இருக்காங்க...

ஒப்பனைக்கு ஒத்திகை by Veena Shankar

 


ஒப்பனைக்கு ஒத்திகை


குளித்து முடித்த கையோடு கண்ணாடி முன் அமர்ந்தாள் சீதா. தலைக்கு ஏதோ லோஷனை தடவி வாரினாள். வாரிய கேசத்தில் இரு பக்கங்களிலும் பின்னல் போட்டு மத்தியில் கொண்டு முடித்தாள். பின் அதை கலைத்தாள். இதற்கிடையே அலைபேசி அழைக்க, 


 " இதோ பத்து நிமிஷத்தில் ரெடியாகிடுவேன்" என அலைபேசியிலேயே எதிர்முனைக்கு உத்தரவாதம் கொடுத்தாள். மறுபடியும் வேறு ஹேர் ஸ்டைலை போட்டாள். மீண்டும் மீண்டும் பல வித முயற்சிக்கு பின் போனி டெயில் போட்டு கொள்ள, அவளுடைய அம்மா,


" பாப்பா ! நேரமாகுது. அசிஸ்டன்ட் டைரக்டர் போன் போட்டார். இன்னிக்குள்ள அந்த சீனை எடுத்தாகனுமாம். மழை மேகமாக இருக்குதாம். உன்னை சீக்கிரம் அழைச்சுட்டு வரச் சொன்னார்" என்று சொல்ல, 


"போம்மா! எரிச்சலை மூட்டாதே. அதான் நான் இந்த தொழிலுக்கு வரமாட்டேன் ன்னு சொன்னேன். கேட்டாயா? நீ அழகாக இருக்குற, உன்னை நீயே இவ்வளவு அழகு பண்ணிக்கிற ன்னு சொல்லி நீ என்னை உசுப்பேத்தி இதுல தள்ளி விட்டுட்ட. எல்லாம் அந்த பாழா போன கிழ டைரக்டரை சொல்லணும். எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ன்னு சொல்லி பாதியிலே கை விட்டுட்டான். என் பெயருக்கு ஏத்த மாதிரி வாழ முடியாம தவிக்கிறேன். 


எவ்வளவு கஷ்டபட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். நீயும் இந்த தொழில்ல இருந்து என்னத்த சாதிச்ச? இப்போ உனக்கு வயசாகிட்டதால உனக்கு மார்கெட் இல்ல. தெரிஞ்சே என்னையும் இப்படி செய்துட்ட. 


 உனக்கும் என்னை பெத்தவனுக்கும் என் பணம் தான் வேணும். நீங்க சொகுசா வாழறத்துக்கு நான் வேணும். அதான் வருஷம் போனாலும் எனக்கு கல்யாணத்தையும் பண்ண மாட்டேங்கிறீங்க " என அம்மாவை பொரிந்து தள்ளியவாறே முகத்துக்கு மேக் அப் போட்டாள். 


மகள் சொல்வதில் உண்மை இருப்பதால் அம்மாவும் மௌனமானாள். 


பல கேள்விக்கு விடை மௌனமே, யாருக்கும் பாதகமில்லாமல் இருப்பதால் .


கூந்தலுக்கு நடத்திய அதே சம்பவத்தை முகத்திற்கும் சீதா நடத்த, கண்ணுக்கு மை இடுவதும், பொட்டு வைத்து அழிப்பதுமாக இருக்க இறுதியில் சரி இது போதும் என்று திருப்தி அடைந்து நாற்காலியை விட்டு எழவும் வீட்டின் முன் கார் வந்து நின்றது. அவசரமாக ரூமை விட்டு வந்தவள், தன் மேக் அப் சாமான்களை அள்ளி போட்டு கொண்டு காரில் புறப்பட்டாள். சீதா ஒரு பிரபல நடிகைக்கு ஒப்பனை போட ஒப்பந்தம் ஆகியிருந்தாள். இது தான் பிரபலத்திற்கு போடுவது முதல் தடவை என்பதால் தனக்கு தானே போட்டுகொண்டு அதை நடிகைக்கு போட ஒத்திகை பார்த்தாள் சீதா எனும் சினிமா ஒப்பணையாளர் .


சிறு விசயத்திற்கு கூட சில நேரங்களில் ஒத்திகை பார்க்கும் நாம் வாழ்க்கை எனும் முழு நேர பயணத்திற்கு ஒத்திகை பார்க்க முடிவதில்லையே?

Friday, October 27, 2023

படித்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


 எழுத்தாளர் தோரோவின் படித்ததில் பிடித்த வரிகள்..


 மனிதன் மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பது சமூகக் குற்றம் என்றால்

 தனக்குத் தானே அடிமையாக இருப்பது அகவிடுதலையற்றநெருக்கடி நிலை.

மனிதனுக்கு தேவையற்ற சுமையாக இருப்பது பணமே.அதை அடைவதற்கு

 வாழ்க்கையில் பல நேரத்தை தொலைப்பதற்கு பதில் அடிப்படை

 தேவைகளை வரையறுத்து தனக்கு தானே வாழ்ந்தால் என்ன..


எவ்வளவு அருமையான வரிகள்

 பிறரை கண்டு பாவம் என்பதற்கு முன்

 நமக்கு நாமே போட்டு கொண்ட

 தடைகள் எத்தனை.அதை முதலில்

 கலைந்தாலே அடையும் நிறைவு,

 மகிழ்ச்சி அதிகம் .இல்லையேல்

 அதுவே மன அழுத்தமாக, பயமாக

 மாறி பல தடைகளை நமக்கு நாமே

 உருவாக்க காரணமாகிறது.


பணம்,ஆடம்பரம்  இது பல

 மகிழ்ச்சியை வாங்கி தந்தாலும் அதை

 அடைந்த பலரும் கடைசியில்

 சாதாரணமாக கடற்கரையில், பிடித்த

 டீக்கடையில், வளர்ந்த வீட்டில் சில

 மணி நேரம் உறங்கும் போதே நிம்மதி 

 கிடைக்கிறது.ஆடம்பரத்திற்காக ஓடி

 நேரத்தை கழிக்காமல் அடிப்படை

 தேவைக்கு ஓடினால் போதும் தானே.

சொல்வது யாது? by Veena Shankar

 


சொல்வது யாது?


பிறப்பின் பெருமையை காலம் சொல்லும்


இறப்பின் முடிவை காலன் சொல்வான்


தவிப்பின் காரணத்தை அழுகை சொல்லும்


தவிர்ப்பின் பொருளை விளைவு சொல்லும்


பசியின் கொடுமையை வயிறு சொல்லும்


பரிவின் வார்த்தையை அன்பு சொல்லும்


பொருளின் பயனை தரம் சொல்லும்


வாழ்வின் மகிழ்ச்சியை வரம் சொல்லும்


அகத்தின் அழகை முகம் சொல்லும்


சுகத்தின் மேன்மையை உடல் சொல்லும்


வளர்ச்சியின் மூலத்தை அறிவு சொல்லும்


சுழற்சியின் வேகத்தை

செறிவு சொல்லும்


கவர்ச்சியின் எல்லையை உடை சொல்லும்


நடிப்பின் திறமையை

நடை சொல்லும்

Thursday, October 26, 2023

மேலே கீழே by Veena Shankar

 


ஓடினாலும் கிடைக்காது. தேடினாலும்

 சிக்காது. மழையும் மாலையும்

 ஒன்றோ


 வெயிலோ மழையோ இடம் ஒன்று

 தேவை சற்று இளைப்பாற


 பழக்குவியலுக்கு முன்னே

 மனக்குமுறல், இன்றைய பிழைப்பை

 எண்ணி


விளம்பரம் இல்லாமலே வீடு ஒன்று

 விற்கப்பட்டது


அடைமழையால் திறந்தது மடை 

மடையின் வெள்ளத்தால் படுத்தது

 கடை

கடையே விடையானது குடையாய்

குடையே மனிதனுக்கு வீடானது



வயிற்றுக்காக பிழைப்பு

 வாழ்க்கைககாக உழைப்பு


வியாபாரம் மேலே

வாழ்க்கை கீழே


குளிரில் விளைந்த பழத்தை மழையில்

 விற்கும் மனிதர்



பிழைப்பு ஒன்று மழையினால்

 அடைக்கலமானது அடுத்த நாளின்

 உழைப்பிற்காக


எதுவும் சரியே, அடுத்தவர் நிழலில்

 வாழாத வரை

பார்த்ததில் பிடித்த படம் by Vidhya Nivash

 


'இறுகப்பற்று ' இன்றைய

 சூழ்நிலைக்கேற்ப ரொம்ப அழகாக

 மூன்று குடும்பத்தை வைத்து

 உறவுகளில் வரும் பிரச்சனைகளை

 எப்படி தீர்ப்பது என்று

 சொல்லிருங்காங்க .கணவன்

 மனைவி இருவரும் பார்க்க வேண்டிய

 படம்.அது அவர்களுக்கிடைய மட்டும்

 இல்லை .ஒருவரின் புரிதல்,

விருப்பு,வெறுப்பு இப்படி பல எப்படி

 மன அழுத்தமாக மாறி

 உறவுமுறையில் இருந்து விலக

 செய்கிறது.எங்கோ இருப்பது எப்படி

கூட இருப்பவர் மேல் வெறுப்பை

 கொட்ட செய்யுது. இந்த நவீனமயம்

 இயல்பான வாழ்ககையில் புகுந்தால்

 உணர்ச்சிகள் எங்கே போகும்.பல

 அன்றாட பிரச்சனைகளை கலைந்த

 நல்ல படம்.

Wednesday, October 25, 2023

கண்ணாடி பெட்டியில் கடல் by Vidhya Nivash

 


இருட்டில் ஒரு வெளிச்சம் அற்புத ஒளி

 எங்கும் பரவி செல்ல. அங்கே

 கடலையே கொண்டு வந்து மிக நீண்ட

 கண்ணாடி பெட்டியில் அடைக்க

 அடேங்கப்பா எவ்வளவு

 உயிரினங்கள்.இங்கே எந்த

 வித்தியாசமும் இல்லாமல் அலைய

 சிறு மீன்கள் துள்ளாமல் துள்ள. சுறா

 மீன்கள் ஒரே மயக்கத்தில் இதுவே

 கடலாக இருந்தா  எப்படி இருக்கும்

 இங்கே இப்படி கிடக்கேன்

 என்று.ஆழ்கடலில் சென்று நீந்திய 

 மாதிரி அனுபவம். அலை ஒன்றை

 மட்டும் காணோம். 

இதயமே இதய தீபம் by Veena Shankar

 


 வெளிச்சம் தெரிவது எதனூடே என்பதல்ல கேள்வி, யாருக்காக? எதற்காக? என்பதும் அறிதல் வேண்டும்

காதல் பேசும் இடத்தில் வெளிச்சமும் தேவையோ?

தியாகச் சுடரும் அடக்கமானது பெட்டகத்திலே, காதலர்களின் வெற்றி காணா காதலை போலவே

 மென்மையான காதல் இங்கே சுடரானது, தியாகத்தினாலா?

காதலை போலவே ஒளியும் பரவியது இதயத்தில், முதலில் பாந்தமாக , நடுவில் ஆழமாக, இறுதியில் பாரமாக.

காதல் ஜோதியும் இதுவோ? அணைத்தவர் யாரென்று தெரியாமலே ஒளிர்கின்றது

 இன்றைய காதல் மஞ்சள் வண்ணத்தில்

அன்றைய காதல் அடர் வண்ணத்தில்

இதயத்தின் ஒவ்வொரு துளைகளும் சுவடாய் மாறியது உண்மை காதலின் அழிவால்

 இதயத் துளைகளும் வடிவமாய் ஒளிர்கின்றன அடுத்தவருக்கு, காதலின் சான்றாக

இதயத்தில் துளை விழுந்தாலும் நீ அடைப்பானாக இரு என்றது காதலினால் தோல்வியுற்ற மனம்

எங்கோ எவரோ ஏற்றி வைத்த தீபம் அணையாமல் இருக்கிறது காதல் கொண்ட இரு மனங்களின் காதல் சின்னத்தால்

தவிர்ப்பு இல்லை காதலில் தவிப்பு மட்டுமே என்பர் காதல் ஜோதி ஏற்றி தவிக்கும் காதல் சின்னத்தில்

Tuesday, October 24, 2023

சின்னஞ்சிறு கண்ணே by Vidhya Nivash

 


பட்டாம்பூச்சிபோல் பறந்து வரும்

 சின்னஞ்சிறு கண்ணே..

நேற்று வரை தெருவில் சுற்றி

 திரிந்தேன்...

கால் ஓடிய தூரம் சென்று

 வழியெங்கும் ஆடி சென்றேன்.

கூண்டில் அடைந்த பறவை போல்

 செயலற்று போனேன் !

இன்று என்ன ஆனது அம்மா

 சொன்னாள் ஒதுங்கி நின்றேன்!

எங்கு சென்றாலும் பயம் ஒதுங்கி நிக்க

 சொல்லுது மனம்!

ஏன் இந்த பயத்தை வளர்ப்போம்! நாம்

 சுமந்ததை நம் குழந்தையும் சுமக்க

 வேண்டுமா??

அதுவும் உங்கள் கையிலே..

புதியதோர் விதி செய்து அதில் நன்மை

 தீமை புகட்டி, பயத்தை அறுத்து,

 தூய்மையில் நின்று,  நம்

 சின்னஞ்சிறு கண்களை,

 செல்வங்களை காப்போம் ..


பசியும் அன்பும் by Veena Shankar

  


பசியாற்ற சோறு, அன்பை ஊட்ட அண்ணன்

கருப்பு வெள்ளை படத்தில் ஓர் வெள்ளை மனது

பசியின் கொடுமை இருந்தாலும் பரிவு காட்டும் மனமும் படைத்தான் ஆண்டவன்

சீக்கிரம் உன் பசியை ஆற்றிக் கொள், அடுத்த வேளை உணவு நிச்சயம் என்று இல்லாதவரை வரை

இது தங்கைக்கு பாசத்தோடு பசியாற்றும் அழகா? இல்லை 

அவள் தெரியாமல் விழுங்கியதை வெளிக் கொணரும் முயற்சியா?

கேள்வி by Kiruthika

 


கலைகள்இல்லாது..

ரசனை ஏது..?!!..

ரசனைஇல்லாது -

மனதில்..

ஜீவன் ஏது?!!!

இந்த ஜீவன் இல்லாது போனால்...?!?!..

நாம் ..

உருகும் போதும் ..

உருக்குலைந்து போகும் போதும் ..

தன்னிலை தேற்ற..

யார் தான் உண்டு இங்கே ..?!!?!!..

சொல்ல முடியாத போது..

கேட்க செவி இல்லாத போது..

மறுக்க முடியா ..

மறக்க முடியா..

துணை அல்லவா -

நமது கை சேர்ந்த ..

நாம் அகம் புகுந்த .

இக்கலைகள்!!!.....


மென்மை சேர்க்க..

தருணம் இணிக்க..

மனம் இளைப்பாற...

கோபம் அடக்க...

சோகம் மறக்க...

திறமை மெருகேற..


ஆயகலைகளில் ஒன்றை தான் ..

இறுக கைப் பற்றிக் கொள்ள ...

இசைந்திடுவோம் ..!!

இதயத்தில் இருந்து..!!..


தக்க தருணம் ..

வர காத்து ஏன்

இருக்கணும்??!!..


நல்லது செய்ய 

ஆரம்பிக்கும்..

எல்லா கணமும் ..

நல்ல நேரமே..

சுப முகூர்த்தமே !...

 

சிலையாய் ..

எங்களை காண வேண்டாம் ..!!

எங்கள் உணர்வுகள் சிதைக்காது..

எங்கள் உணர்ச்சிகள்

ஒடுக்காது..

எங்களை..

மனம் கொண்ட 

பெண்ணாய்..

உங்களை போல்..

தான் -

நாங்களும் ..

என பார்த்தாலே 

போதும்...!!!..


வரம் தா என யாசிக்க 

வில்லை ...!!!..

தவம் தந்த வரமாய் ..

இந்த வாழ்வாய் ..

சேர்ந்து வாழ்வோமே ..

என்றே 

அழைக்கிறோம் !!..

நீங்கள் நவராத்திரியில் ..

பூஜித்த பெண்களாய் ..!!..

இங்கே ..

உயிர்த்தெழுந்து !!!.

Monday, October 23, 2023

கேள்வி by Veena Shankar

 


ஏன்? எதற்கு? என்ற கேள்விக்கு விடை எல்லா சமயத்திலும் ஒன்றாக இருப்பதில்லை. இடம், பொருள் தக்கவாறு மாறுபடும். 


சமீபத்தில் என் தாய் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டிருந்த தால் ஒரு சில நாட்கள் அவருடனேயே தங்க நேர்ந்தது. அங்கே பல விதமான எண்ணங்களை கொண்ட பெண்மணிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் மட்டுமே இருந்ததால் சங்கோஜம் இல்லாமல் பழகினேன். சென்னை பாஷையில் அவர்கள் பேச, நானும் அவர்களுடைய பாஷையில் பேச ஆரம்பித்தேன். 


முதல் கேள்வி நான் ஏன் அவ்வாறு பேசினேன்? என்ற கேள்வி ஊருக்கு வந்த பின் உணர்ந்தேன். எளிதாக பழக என்னை நான் மாற்றிக் கொண்டேனோ? தெரியவில்லை.


மேலும் அவர்கள் கூறிய கதைகள் என்னை நிஜமாகவே பாதித்தது. 


ஒரு பெண் ஆடம்பர வீடு ஒன்றை கட்டி, கடன் அடைக்க முடியாமல் திண்டாடுவதும், வளர்ந்த பிள்ளைகள் இப்போது தான் வேலைக்கு செல்வதாகவும் , தானும் தன் கணவரும் சேர்ந்து கடனை சீக்கிரம் அடைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை அவருள்ளே பிறந்தாலும் அவருடைய நோய் எனக்கு புதிதாகவே இருந்தது. விரலுக்கேத்த வீக்கம் இருந்திருந்தால் இந்த கடன் தேவையில்லாதது என்று நான் புரிந்து கொண்டேன். அப்பெண்மணியைய் பார்த்துக்கொள்ள அம்மாவும் மாமியாரும் இருந்தது பெரும் அதிசயம்.


மற்றொருவரின் கதையும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய மகள் வயிற்று பேத்தியை பார்த்துக்கொள்ள வேண்டி அவருடைய இரு மகன்களின் சிறு பிள்ளைகளையும் காலை முதல் இரவு வரை ஓய்வில்லாமல் தான் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாக சொன்னார். மேலும் மருமகள்கள் வேலைக்கு செல்வதால் வீட்டில் வேலை பார்ப்பதும் இல்லை என்றார். இதனால் பலமுறை சக்கரை நோயின் அளவு கூடுவதாகவும் சொன்னார்.


இங்கே பெண்ணுக்கு பெண்ணே எதிரியோ? மகள் மற்றும் மருமகள்கள் ரூபத்தில் என்பது கேள்வியானது என் மனதில்.


மற்றொருவரின் கதையும் பேச்சும் சற்று வித்தியாசமாக தோன்றியது. தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்ததலிருந்து பேச்சு வார்த்தை கிடையாது என்றும், கணவர் இறந்த பின் தன்னுடைய மகன் வேறு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பெண்ணின் அம்மா வீட்டின் ஒரு சிறு பகுதியில் தாங்கள் வசிப்பதால் பெண்ணின் அம்மா சொல்படிதான் எல்லாம் நடக்கிறது என்று புகார் சொன்னார் . 


ஆனால் எனக்கு தெரிந்தவரையில் மகனும் மருமகளும் நன்றாக பார்த்து கொள்வது போல் தோன்றினாலும் திரைக்கு பின்னால் நடப்பதை என்னால் யூகிக்க முடிந்தது அந்த பெண்மணி சொன்ன பேச்சால். 


ஆம். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்த கையோடு பெற்றோரை சுட்டு தள்ளும் சட்டம் ஒன்று நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் தான் கோரிக்கை வைக்க போவதாக அவர் சொல்ல , முதலில் எனக்கு சிரிப்பு வந்தாலும் அவருடைய ஆதங்கம் புரிந்தது. இருந்தாலும் அப்படியென்றால் முதலில் முதல்வரை தான் சுட வேண்டியிருக்கும் என்று நான் நகைச்சுவைக்கு சொன்னாலும் ஏதோ ஒன்று என்னை நெருட செய்தது. எவ்வளவு வேதனை இருந்தால் இந்த மாதிரியான பேச்சு அந்த பெண்மணியிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தேனே தவிர தீர்வு சொல்ல தெரியாமல் முழித்தேன். அப்போதே அவரிடம் நான் இதை பற்றி குரூப்பில் எழுத போவதாக சொல்ல அவரிடமிருந்து புன்னகை மட்டும் உதிர்ந்தது.


இது ஏன் என்று தோன்றியது?


 விடையறியா கேள்விகள் பல, விடைகள் நம்மிடம் புதைந்திருந்தாலும்.

Sunday, October 22, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


தாங்க முடியா வலியில்ல இது தவிர்க்க முடியா கடி, பாசத்தில் வரும் கொஞ்சல் சிறப்பாய் 

நமக்கு ரசிப்பாய்

முப்படை வந்தாலும் அசராத மான்


தவிக்கும் வேளையிலும் சமயம் பார்த்து தாவ துடிக்கும் மான்


சிறுத்தைப் புலி கூட்டத்தில் மானும் சிறுத்தையானது வீரத்தில்

உயிருள்ள மானோ? உயிரில்லா சிலையோ? உயிருள்ளது என்றால் மானின் வீரம் ஆங்கே! 

சிலை என்றால் சிறுத்தைகளின் கோழைத்தனம் ஆங்கே?

படையல் by Vidhya Nivash

 


படையல் அதுவும் வாய் பேசமுடியா உயிரை வைத்து .பண்டைய காலத்தில் உணவிற்காக தம் உயிரை காக்க அறியாமையில் நடந்தது.இன்று அறிவுகண் கல்வியால் திறந்த பிறகும் இது ஏன்? காய்கறிகளில் படையல் போட்டால் வேண்டாம் என்று சொல்வது யார்?

தன் உயிரையை காக்க இந்த ரத்த காவு ஏன்?அது தான் பூசணியும் எலுமிச்சையும் இருக்கே.

மறந்து போன ஒற்றை உலகமே உற்று நோக்கும், சிறு பிள்ளைக்கூட ரசிக்கும் ஒருவரை வைத்து எத்தகைய நல்ல செய்திகளை சொல்ல முடியும்.ஒரு வரியில் நீங்க சொல்லும் நல்ல விஷயம் பதியுமா?இல்ல அந்த கண்ணில் காணும் காட்சிகள் பதியுமா?இவ்வளவு விஷம் எதற்கு??

இந்த சைக்கோ கதைகள் ஏன்?? பெண்களை அதுவும் சிறு பிள்ளைகளை ஏன் இந்த கொடூர கதைகள்..உறங்கும் மிருகத்தை எழுப்பவா?

பேசப்பட வேண்டிய விஷயத்தை பேசாமல் அமைதி காப்பது ஏன்?


Saturday, October 21, 2023

இன்றைய கேள்வி - கல்வி என்னவெல்லாம் செய்யும் மக்களே? by Akhila



இன்றைய கேள்வி:

கல்வி என்னவெல்லாம் செய்யும் மக்களே?


அது ஒன்று மட்டும் இருந்தால்செல்வம், வீரம், அறிவு, உயர்வு,பணம், பதவி, புகழ்...இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!  

குறிப்பாக, நம் தமிழ் மண்ணில், பகுத்தறிவுப் பகலவன் மற்றும் கல்வி தந்தை காமராஜர் பிறந்து, கல்விக்கான அனைத்து கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும், அனைவருக்கும் திறந்து வைத்து, விடிவெள்ளியாக பலர் வாழ்வில் அர்த்தமும், மலர்ச்சியும் தந்தது நாம் அறிந்ததே!


இரு தினங்களுக்கு முன், ஆஃப்ரிக்க மண்ணில், டான்சானியாவின் நாட்ரான் ஏரியில், இந்த கேள்விக்கு புதுப் பரிணாமம் தந்தவன்டாண்டே! 

5 நாட்களும், எங்கள் வழிகாட்டி மற்றும் வாகன ஓட்டியாகவும் இருந்த மிகச் சிறப்பாகப் பணி செய்த மாக்லானின் வழிகாட்டும் பொறுப்பு கடைசி நாள் அந்த ஊரின் சட்டப்படி, உள்ளூர் வழிகாட்டியாக 23 வயது டாண்டேவிடம்!


ஒல்லியான தேகமும், கண்களில் தெளிவும், நுனி நாக்கில் சிறப்பான ஆங்கிலமும், நீலமும் கருப்பும் கலந்த மாசாய் இன பாரம்பரிய உடையும் மட்டும் எங்களை அசத்தவில்லை! அவன் ஒரு மணி நேர மலையேற்றத்தின் போது, நடந்த உரையாடலில் கூறிய கல்வியின் பெருமிதம், என்னையும், என் கணவரையும் அசத்தியது...





டாண்டே - அவன் குடும்பத்தின் முதல் பள்ளிக்கு சென்ற மாணவன்;

முதல் முதலாக உயர்நிலை பள்ளி வரை முடித்தவன்‍ - அவன் அப்பாவின் தடையை மீறி! 

"துவக்கப் பள்ளியுடன் நின்று விடு..உன் அண்ணனைப் போல், எனக்கு ஆடு மாடு மேய்க்க உதவு" என்று எவ்வளவோ சொல்லியும், 

"உயர்நிலையில் தான் ஆங்கிலம் படிக்க முடியும்.. நான் பள்ளிக்குத் தான் செல்வேன்" என்று அடம் பிடித்ததாக கூறியது முதல் ஆச்சரியம்


அடுத்த ஆச்சரியம்அவன் இப்போது கற்ற ஆங்கிலம் மூலம், தந்தை, தாய், அண்ணன், தங்கைகள் அனைவருக்கும் பணம் அளிப்பதால் அனைவருக்கும் ஆனந்தம்..அப்பாவிற்கும் ஆனந்தம்( நாங்கள் பெற்றோர் மற்றும் ஒரு தங்கையும் சந்தித்தோம்!அவர் கண்களில் ஆனந்தத்தினை கண்கூடாகப் பார்த்தோம்).

"பள்ளிப் படிப்பு இலவசம்..அது படிக்கவே பெரும்பாடாகி விட்டது! நான் சுயமாக சம்பாதித்து, பணம் சேர்த்து, கல்லூரிக்குச் சீக்கிரம் செல்வேன்!" என தீர்க்கமாகக் கூறினான்!


இவை அனைத்தையும் விட பெரிய ஆச்சரியம் ..கடைசியில் அவன் சொன்ன சேதி‍ அது அவன் பிம்பத்தை மேலும் உயர்த்தியது!

அவன் தங்கைகள்(தற்போது 12 வயது மற்றும் 15 வயது)பள்ளிக்கு செல்லச் சொல்லி தந்தையிடம் போராடி அனுப்புகிறான்! அவர்கள் சமூகத்தில், பெண்கள் படிப்பதில்லை..ஆடு மாடு மட்டுமே மேய்ப்பர் எனவும், சில வருடங்களில், திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் கூறினான்!


"என்னையும், என் தன்னம்பிக்கையயும் உதாரணம் காட்டி, என் தங்கைகளை படிக்க அனுப்பச் சொல்லி கேட்டென்" என அழகு ஆங்கிலத்தில் அழுத்தம், திருத்தமாக, நிதானமாகக் கூறினான்!




டாண்டே என் கண் முன், கரண்டிக்கு பதில் புத்தகம் கொடுக்கச் சொன்ன ஈரோடு தந்தையை கொண்டு வந்தான்!


அவன் இந்த விஷயத்தை கூறி முடித்த சில மணித்துளிகளில் நாங்கள் சீறிப் பாய்ந்த ஆற்றினைக் கடந்து, நீர்வீழ்ச்சியைக் காண, மூன்றாவது முறை மலையேறும் போது...

ஆங்கிலேயர்கள் புடை சூழ, ஒரு அழகிய மாசாய் பெண்மணி, ஆங்கிலத்தில் அந்தக் குழுவிற்கு வழிகாட்டியாக, எங்கள் எதிரில் இறங்கினார். 

அவர் "ஜம்பொ"(ஹலோ என்று அர்த்தம்) என புன்னகைத்தபடி சென்றாள். 


நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன், சிங்கப்பெண் நானும் தான் என்று கூறுவது போல், கடந்து சென்றாள்! என் மனதுக்குள் அவளுக்கு வீர வணக்கம் செலுத்தி, "நீ நதி போல ஓடிக் கொண்டிரு" என்று வாழ்த்தி

என் கையகல வழுக்குப் பாதையில், கவனத்துடன், என் பயணத்தை தொடர்ந்தேன்‍ ‍ - கல்வி என்னவெல்லாம் செய்கிறது என்று அசை போட்டுக் கொண்டே!


இப்பொது என் முதல் வரியை திரும்பப் படித்து, விடையை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் மக்க‌ளே!

- அன்புடன் அகிலா💜

    

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...