கிணறு
வினோதினி, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் படிக்க விரும்பியதால் அந்த ஊரிலேயே முதன் முதலில் கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கு படிப்பறிவு கூடுதல் என்பதால் பள்ளி ஆசிரியர் ஒருவர் அவள் பெற்றோரிடம் பேசி பக்கத்து டவுனில் இருக்கும் கல்லூரியில் சேர இடமும் வாங்கி கொடுத்தார். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இருந்ததால் அவளை படிக்க சம்மதித்தனர் பெற்றோர்.
அவள் வசித்த ஊருக்கு மத்தியில் ஒரு பெரிய கிணறு இருந்தது . ஆனால் அந்த கிணற்றை சுற்றி சுற்றி ஊர் மக்கள் செல்வார்களே தவிர யாரும் அந்த கிணற்றை எட்டி பார்ப்பது கூட கிடையாது . பரம்பரை பரம்பரையாக வாழ்ந்தவர்கள் எல்லாம் அதை பற்றி நல்ல விதமாக சொன்னதில்லை .
கல்லூரிக்கு செல்லும் போது அந்த கிணற்றை கடந்து தான் போகவேண்டும் வினோதினிக்கு. அவளுக்கு ஒரு முறையாவது அந்த கிணற்றை எட்டி பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை தன் வீட்டிலும் வெளியிலும் சொன்னால் என்ன விளைவு என்பது அவளுக்கே தெரியும். அதனால் யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து ஊரில் ஒதுக்குப்புறமாக வாழும் தொண்ணூறு வயது கிழவி முனியம்மாளை கேட்டால் தெரியும் என்றும் இந்த வார விடுமுறையில் அதை செயல்படுத்தவும் முடிவு செய்து கொண்டே அன்று கிணற்றை கடந்தாள்.
வீட்டில் தான் கோயிலுக்கு செல்வதாக கூறி முனியம்மாளின் வீட்டிற்கு சென்று விசாரிக்க, தன் காலத்தில் இருந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தனக்கு எதிராக நின்றவர்களை அந்த கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, கிணறு உயிர்பலி வாங்கியதாக புரளியை கிளப்பி விட, ஊர் மக்களும் அதையே நம்பினர். இருந்தாலும் தன் பங்குக்கு அது உண்மையல்ல என்று மக்களிடம் சொன்னாலும் யாரும் அவள் பேச்சை கேட்காமல் ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர் என்றும் முன்பெல்லாம் ஊர் மக்களின் தேவைக்கு நீர் கொடுத்த அந்த கிணறு , இப்போது பயன்பாடற்று இருப்பது தனக்கு வேதனை தருவதாக சொன்னாள்.
தக்க சமயம் வர வினோதினி காத்திருந்தாள் . இரு நாட்கள் கருப்பசாமி கோயில் திருவிழா என்பதால் ஊர் மக்கள் கிடா வெட்டி கொண்டாட இருந்தனர். வினோதினி தனக்கு அன்றும் கல்லூரியில் தேர்வு இருப்பதால் விடுப்பு எடுக்க முடியாது என்று பெற்றவர்களிடம் பொய் சொன்னாள். "ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் நீ கண்டிப்பாக திருவிழாவிற்கு வரவேண்டும்" என அம்மா சொல்ல , தான் தோழி வீட்டில் தங்குவதாக வினோதினி சொன்னாள். விடியற்காலையில் ஊர் மக்கள் ஒருவர் பின் ஒருவராக செல்ல ஊர் வெறிச்சோடியது.
ஊரில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு கிணற்று பக்கம் போய் எட்டி பார்த்தாள் . எட்டி பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாததால் கிணறு படு மோசமாக இருந்ததை கண்டாள். தான் கிணற்றை பார்த்து விட்ட மகிழ்ச்சியில் திரும்பியவளுக்கு "பாப்பா ! பாப்பா! " என்று யாரோ கூப்பிடுவது போல் உணர்ந்தாள். ஊரில் தான் யாருமில்லை அப்புறம் எப்படி குரல் வரும் என்று நினைத்து மேலும் சில அடிகள் எடுத்து வைக்க, மறுபடியும் "பாப்பா!" என்ற குரல் சத்தத்துடன் அழைத்தது. குரல் வந்த திசையில் கிணறு மட்டும் தான் இருந்தது. தான் தவறு செய்து விட்டதாக வினோதினி உணர்ந்தாள். ஊரார் அந்த கிணற்றில் பல உயிர்கள் பலியாகி உள்ளதாகவும் மேலே எடுக்க இயலாமல் பலர் அங்கே புதைந்ததாகவும், அந்த கிணறு காவு வாங்கி கொள்வதாகவும் அதனால் அந்த கிணற்றில் தண்ணீர் இறைப்பதை மக்கள் நிறுத்தியதாகவும் சொன்னதை தான் காதில் வாங்காமல் முனியம்மாள் சொன்னதை நம்பி இப்படி செய்து விட்டோமோ என்று நினைத்தாள். அதை எட்டி பார்த்தால் சாவு நிச்சயம் என்று ஊரார் சொன்னதை மிஞ்சி எட்டி பார்த்து விட்டோம். விளையாட்டு வினையாகி போனது என பயந்தாள் .
இருந்தாலும் மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மறுபடியும் மெல்ல கிணற்று பக்கம் சென்றாள். அதனை எட்டி பார்த்தாள். அந்த அசுத்தமான கிணற்றை பார்க்க, அவள் மனம் மட்டும் தெளிவாகியது.
தன்னை காப்பாற்றும் படி வினோதியிடம் அந்த கிணறு வேண்டி கொண்டதாக அவள் நினைக்க, அதற்கான முயற்சியும் எடுத்தாள். தன் கல்லூரியில் இதை பற்றி சொல்லி, அவர்களிடம் அனுமதி பெற்று , என் எஸ் எஸ் மாணவர்களை கொண்டு தானும் அந்த கிணற்றை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். ஊராரின் பேச்சுக்கு காது கொடுக்காமல், சுமார் ஓரு வாரம் கிணற்றின் அழுக்குகளை சுத்தப்படுத்தி, தெளிந்த நீரோடை போல மாற்றினர் மாணவக் குழுவினர். பூச்சி மருந்துகளை இட்டு ஒரு வாரத்திற்கு பின் அந்த நீரை பயன்படுத்துமாறு வினோதினி ஊர் மக்களிடம் சொன்னாள்.
மேலும் இப்படி பயன்பாடற்ற நீர்நிலைகளை பற்றி சொன்னால் தங்கள் குழுவினர் அதை சுத்தப்படுத்தி தருவதாக சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தினாள். அவளுடைய நற்சிந்தனைக்கு ஊர் மக்களிடமிருந்தும் கல்லூரியிலும் பாராட்டு கிடைத்தது மட்டுமல்லாமல் அவளை தனியே அடையாளப்படுத்தி காட்டியது .
விடா முயற்சியும், ஆக்கமும் இருந்தால் கை மேல் பலன் நிச்சயம் கிட்டும்

No comments:
Post a Comment