Wednesday, October 11, 2023

பெண் பிள்ளைகள் தினம் by Veena Shankar

 


பெண் பிள்ளைகள் தினம்


எப்போதும் பிரித்து பார்க்க முடியாதது அழகும் பெண்ணும். பிறந்தது முதல் அவள் மரணம் வரை பெண்ணியம் சொல்லும் பல பரிணாமங்கள். அவளுள் எத்தனை வடிவங்கள் . இப்படி பல விதமாக சொன்னாலும் அவளை வளர்ப்பதும் பெற்றோருக்கு பெரும் சவால் தான்.


குழந்தையாக பிறக்கும் அவள், பெற்றோருக்கு தேவதையாகவும், வளர் பருவத்தில் பெற்றோரையே கண்டிக்கும் விதமாக தன்னை விஸ்தரித்துக் கொள்வதும் எப்படி? சவாலான செயல்களை கூட சாதனையாக மாற்றுவதும் எவ்வாறு? விழி மூடி யோசித்தாலும் விடை அறியா கேள்விகளில் ஒன்று தான் இதுவும். 


தொடுதல் உணர்வுகளை சொல்லி தரும் அதே நேரத்தில் சிகரம் தொடும் உண்மையையும் சொல்லி தர வேண்டும். பிறருக்காக தன் வசீகரிக்கும் அழகை அவர்கள் காட்டும் போதே அதன் ஆபத்தையும் உணர்த்த வேண்டும். சில நேரம் மென்மையாக, சில நேரம் கண்டிப்புடன் போதிப்பதும் பெற்றோர் கடமையே.


பெண் குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசினால் மட்டுமே அவர்களின் மனதையும் உணர்ச்சியையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். முடிந்தவரை பெற்றோரும் அவர்களிடம் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டும். சுதந்திரம் தருகிறோம் என்ற பெயரில் அவர்களிடம் பிடிவாத போக்கு வளரக் கூடும். அதனையும் மீறி பாதுகாப்போடு இருக்க அவர்களை தயார் செய்ய வேண்டும்.


திருமணத்திற்கு பின்னான உறவுகளை நாசுக்காக சொல்வதும் அவசியமாகிறது. இன்று எத்தனையோ விதங்களில் அவர்கள் அறியக் கூடிய நிலை இருந்தாலும் அதிலும் எது சரி? எது தவறு? என்பதை அறியாமலேயே வளர்கிறார்கள். அதிலும் பெற்றோருடைய வழிகாட்டுதலும் அரவணைப்பும் தேவைப்படும். 


அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் இருக்கும் வரை பெண் பிள்ளைகளிடம் பின்னடைவு இருக்காது என்பதே பதிய விரும்பும் கருத்து. சூழ்நிலை காரணம் காட்டி அவர்களிடம் பேச நேரமில்லை என்றால் பின் எப்போதும் அவர்களை நெருங்குவது கடினம்.


பெண் பிள்ளைகளை கவனமுடன் வளர்ப்போம் அடுத்த தலைமுறை நம்பிக்கையோடு பிறக்க.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...