ஒப்பனைக்கு ஒத்திகை
குளித்து முடித்த கையோடு கண்ணாடி முன் அமர்ந்தாள் சீதா. தலைக்கு ஏதோ லோஷனை தடவி வாரினாள். வாரிய கேசத்தில் இரு பக்கங்களிலும் பின்னல் போட்டு மத்தியில் கொண்டு முடித்தாள். பின் அதை கலைத்தாள். இதற்கிடையே அலைபேசி அழைக்க,
" இதோ பத்து நிமிஷத்தில் ரெடியாகிடுவேன்" என அலைபேசியிலேயே எதிர்முனைக்கு உத்தரவாதம் கொடுத்தாள். மறுபடியும் வேறு ஹேர் ஸ்டைலை போட்டாள். மீண்டும் மீண்டும் பல வித முயற்சிக்கு பின் போனி டெயில் போட்டு கொள்ள, அவளுடைய அம்மா,
" பாப்பா ! நேரமாகுது. அசிஸ்டன்ட் டைரக்டர் போன் போட்டார். இன்னிக்குள்ள அந்த சீனை எடுத்தாகனுமாம். மழை மேகமாக இருக்குதாம். உன்னை சீக்கிரம் அழைச்சுட்டு வரச் சொன்னார்" என்று சொல்ல,
"போம்மா! எரிச்சலை மூட்டாதே. அதான் நான் இந்த தொழிலுக்கு வரமாட்டேன் ன்னு சொன்னேன். கேட்டாயா? நீ அழகாக இருக்குற, உன்னை நீயே இவ்வளவு அழகு பண்ணிக்கிற ன்னு சொல்லி நீ என்னை உசுப்பேத்தி இதுல தள்ளி விட்டுட்ட. எல்லாம் அந்த பாழா போன கிழ டைரக்டரை சொல்லணும். எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ன்னு சொல்லி பாதியிலே கை விட்டுட்டான். என் பெயருக்கு ஏத்த மாதிரி வாழ முடியாம தவிக்கிறேன்.
எவ்வளவு கஷ்டபட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். நீயும் இந்த தொழில்ல இருந்து என்னத்த சாதிச்ச? இப்போ உனக்கு வயசாகிட்டதால உனக்கு மார்கெட் இல்ல. தெரிஞ்சே என்னையும் இப்படி செய்துட்ட.
உனக்கும் என்னை பெத்தவனுக்கும் என் பணம் தான் வேணும். நீங்க சொகுசா வாழறத்துக்கு நான் வேணும். அதான் வருஷம் போனாலும் எனக்கு கல்யாணத்தையும் பண்ண மாட்டேங்கிறீங்க " என அம்மாவை பொரிந்து தள்ளியவாறே முகத்துக்கு மேக் அப் போட்டாள்.
மகள் சொல்வதில் உண்மை இருப்பதால் அம்மாவும் மௌனமானாள்.
பல கேள்விக்கு விடை மௌனமே, யாருக்கும் பாதகமில்லாமல் இருப்பதால் .
கூந்தலுக்கு நடத்திய அதே சம்பவத்தை முகத்திற்கும் சீதா நடத்த, கண்ணுக்கு மை இடுவதும், பொட்டு வைத்து அழிப்பதுமாக இருக்க இறுதியில் சரி இது போதும் என்று திருப்தி அடைந்து நாற்காலியை விட்டு எழவும் வீட்டின் முன் கார் வந்து நின்றது. அவசரமாக ரூமை விட்டு வந்தவள், தன் மேக் அப் சாமான்களை அள்ளி போட்டு கொண்டு காரில் புறப்பட்டாள். சீதா ஒரு பிரபல நடிகைக்கு ஒப்பனை போட ஒப்பந்தம் ஆகியிருந்தாள். இது தான் பிரபலத்திற்கு போடுவது முதல் தடவை என்பதால் தனக்கு தானே போட்டுகொண்டு அதை நடிகைக்கு போட ஒத்திகை பார்த்தாள் சீதா எனும் சினிமா ஒப்பணையாளர் .
சிறு விசயத்திற்கு கூட சில நேரங்களில் ஒத்திகை பார்க்கும் நாம் வாழ்க்கை எனும் முழு நேர பயணத்திற்கு ஒத்திகை பார்க்க முடிவதில்லையே?

No comments:
Post a Comment